Rajini - சொன்னதை கேட்காத ரஜினிகாந்த்.. டென்ஷனான இயக்குநர்.. ஆனால் நடந்தது வேறு.. செம சம்பவம்
சென்னை: Rajini (ரஜினி) இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இயக்குநர் ஸ்ரீதர் சொன்னதை ரஜினிகாந்த் கேட்காத சம்பவம் தெரியவந்திருக்கிறது.
ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடை, உடை, ஸ்டைல், டயலாக் டெலிவரி என அத்தனைக்கும் ரசிகர்கள் அடிமையாகவே பல வருடங்கள் இருக்கின்றனர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படத்தில்கூட ரஜினியின் ஸ்டைல் அதிகரித்திருந்ததே தவிர குறையவில்லை என்றே ரசிகர்கள் ஓபனாக பேசினர்.

அடுத்த படம்: ஜெயிலர் படமும் மெகா ஹிட்டாகிவிட்டது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170ஆவது படத்தில் நடித்திருக்கிறார். ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்தவர் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்ற நம்பிக்கை தலைவரின் ரசிகர்களிடையே ஆணித்தரமாக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜுடன்: அதேபோல் 170ஆவது படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 171ஆவது படத்தில் நடிக்கிறார். அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கமலுக்கு எப்படி லோகேஷ் கனகராஜ் தரமான வெற்றி படத்தை கொடுத்தாரோ அதேபோல் ரஜினிக்கும் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்புதான் கோலிவுட்டில் இப்போது அதிகம் இருக்கிறது.
ரஜினி, கமல்: ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் போட்டியாளர்களாக சினிமாவில் வலம் வந்தாலும் ஆரம்பத்தில் இணைந்தே நடித்தனர். பிறகுதான் இருவரும் பரஸ்பரமாக பேசி பிரிந்து நடித்தன. இருவரும் பிரிந்து நடித்து தங்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுவிட்டாலும் அவர்கள் இணைந்து நடித்த படங்கள் இன்னமும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன.
இளமை ஊஞ்சலாடுகிறது: அப்படி அவர்கள் இணைந்து நடித்த படங்களில் ஒன்றுதான் இளமை ஊஞ்சலாடுகிறது. தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீதரின் இயக்கத்தில் கடந்த 1978ஆம் ஆண்டு வெளியானது படம். ரஜினி, கமலுடன் ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இந்த சூழலில் அப்படத்தின் ஷூட்டிங்கில் ஸ்ரீதர் சொன்னதை ரஜினி கேட்காத சம்பவம் தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது படத்தின் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் மாடி படியிலிருந்து இறங்கி வரும்போது ரிங் அடித்துக்கொண்டிருக்கும் ஃபோனை எடுக்க வேண்டும். அப்போது படியிலிருந்து இறங்கிவந்த ரஜினிகாந்த்மீண்டும் நான்கு படிகள் ஏறிவிட்டு வந்து ஃபோனை எடுத்து இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றி காதில் வைத்தாராம். அதனை பார்த்த ஸ்ரீதர், கட் சொல்லிவிட்டு இல்லை ரஜினி இப்படி செய்யாதீர்கள் நார்மலாகவே செய்யுங்கள் என அறிவுறுத்திவிட்டு அடுத்த முறை ஆக்ஷன் சொன்னாராம்.
இந்த முறையோ ரஜினிகாந்த் 4 படிகளுக்கு பதிலாக 8 படிகளில் ஏறி இறங்கிவிட்டு வந்து ஃபோனை எடுத்தாராம். இதிலும் ஸ்ரீதருக்கு திருப்தி இல்லையாம். உடனே ரஜினி இல்லை சார் இது என் ஸ்டைல் ரசிகர்களுக்கு பிடிக்கும் என சொல்லியிருக்கிறார். சரி என்று ரஜினிக்காக அந்தக் காட்சியை ஓகே சொல்லிவிட்டாராம். அதேபோல் மற்றொரு காட்சியில் ஃபைல் ஒன்றில் ரஜினிகாந்த் கையெழுத்து போட வேண்டும். அதற்காக ஸ்ரீதரே நேராக சென்று விலையுயர்ந்த பார்க்கர் பேனாவை வாங்கி வந்திருக்கின்றனர்.
அந்தக் காட்சி எடுக்கும்போது ரஜினிகாந்த்தோ அந்த பார்க்கர் பேனாவை பயன்படுத்தாமல் நீளமான பென்சிலை ஷாட் போய்க்கொண்டிருக்கும்போது எடுத்து கையெழுத்து போட்டாராம். இதையும் வேண்டாம் என்ற ஸ்ரீதரிடம் ரஜினிகாந்த் இது என் ரசிகர்களுக்கு பிடிக்கும் என மீண்டும் சொல்லிவிட்டாராம். இதனால் டென்ஷனான ஸ்ரீதர் தன்னுடைய உதவி இயக்குநர்களிடம் நீங்கள் சில சீன்களை எடுங்கள் என சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டாராம்.
ஒருவழியாக படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸானதும் ஸ்ரீதர் வேண்டாம் என்று சொல்லியும் ரஜினிகாந்த் செய்த விஷயங்களுக்கு தியேட்டரில் விசில்களும் கைத்தட்டல்களும் பறந்தனவாம். இதனைப் பார்த்து இயக்குநரும் ஆச்சரியப்பட்டுபோய்விட்டாராம். இந்தத் தகவலை இயக்குநர் சுந்தர்.சி ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











