Throw Back: ரஜினியின் செயலை கண்டித்த பாலச்சந்தர்.. பழக்கத்தை மாற்றிக்கொண்ட ரஜினிகாந்த்
சென்னை: ரஜினி செய்த செயலை பாலசந்தர் கண்டித்த பிறகு தனது பழக்கத்தை ரஜினிகாந்த் உடனடியாக மாற்றிக்கொண்டார்.
நடத்துனராக தனது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த ரஜினிகாந்த் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தை அடுத்து சினிமா கல்லூரியில் இணைந்து படித்தார். அதன் பிறகு கே. பாலசந்தர் மூலம் சினிமாவில் அறிமுகமான ரஜினி இன்று இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே அவருக்கு ரசிகர்கள்.

கமலுடன் இணைந்து நடித்த ரஜினிகாந்த்
தனது சினிமா வாழ்க்கையை அவர் தொடங்கியபோது கமலுடன் இணைந்து அதிக படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி வில்லனாகவும் நடித்தார் ரஜினி. கமலுடன் அதிகம் இணைந்து நடித்தாலும் ரஜினியின் நடிப்பும், ஸ்டைலும் தனித்துவமாக தெரிந்தது. இதனை உணர்ந்துகொண்ட கமல் ஹாசன் இரண்டு பேருமே வளர வேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினியை அழைத்து இனி நாம் இருவரும் இணைந்து நடிக்க வேண்டாம் என்ற முடிவை கூறினார்.

தனிக்காட்டு ராஜா ஆன ரஜினிகாந்த்
கமலின் பேச்சை கேட்டு தனியாக நடிக்க ஆரம்பித்தார் ரஜினிகாந்த். அதன் பிறகு ரஜினியின் காட்டில் அடைமழை என்றுதான் சொல்ல வேண்டும். தனது ஸ்டைல், நடிப்பு, வசன உச்சரிப்பு, பாடி லாங்குவேஜ் என அனைத்திலும் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வித்தியாசமாகவும், புதுமையாகவும் தெரிந்தார். அதன் பலனாக அவருக்கென்று பலர் ரசிகர்கள் ஆனார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ஒரு பக்கம் கமல் ஹாசன் வித்தியாசமாகவும், ஆர்ட் சினிமாக்களும் பண்ணிக்கொண்டிருக்க மறு பக்கம் ரஜினிகாந்த் கமர்ஷியல் பாதையை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால் கமல் ஹாசன் நினைத்தபடி இருவருமே வளர்ந்தார்கள். ரஜினிகாந்த்துக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் கிடைத்தது. இருவருக்குமிடையேயான போட்டி வலுத்தது. ஆனால் அந்தப் போட்டி ஆரோக்கியமாக இருந்தது கவனிக்கத்தக்கது.

பாலசந்தரிடம் மாட்டிக்கொண்ட ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் 80களில் உச்சக்கட்டத்தில் இருந்தபோது பல அதிரடி செயல்களுக்கு பெயர் போனவர். தனது மனதில் பட்டதை பேசுவது, ஜாலியாக ஊர் சுற்றுவது என அப்போது அவர் வேறு ரஜினியாக இருந்தார். அதிலும் குடிப்பழக்கமும் அவருக்கு இருந்தது. அப்படி ஒருமுறை கே.பாலசந்தரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தபோது; ஒருநாள் தனக்கான ஷூட்டிங் முடிந்ததாக நினைத்துக்கொண்டு மது அருந்தியிருக்கிறார் ரஜினி. ஆனால் திடீரென மீண்டும் ஷூட் செய்ய வேண்டும் என ரஜினியிடம் சொல்லப்பட இவருக்கு ஆட்டம் கண்டிருக்கிறது.
ஆனால் ஷூட்டிங்கை மறுக்க முடியாது என்பதால் குளித்துவிட்டு, பல் துலக்கிவிட்டு செட்டுக்கு சென்று மேக்கப் போட்டிருக்கிறார். தான் மது அருந்தியது பாலசந்தருக்கு தெரியக்கூடாது என்பதால் அவர் அருகிலேயே செல்லாமல் இருந்திருக்கிறார். இருப்பினும் எப்படியோ பாலசந்தருக்கு தெரிந்துவிட்டது.

கே.பாலசந்தரிடம் திட்டு வாங்கிய ரஜினிகாந்த்
ரஜினியை தனது அறைக்கு அழைத்த பாலசந்தர், அவரிடம் 'உனக்கு நாகேஷ் தெரியுமா. அவன் அவ்வளவு பெரிய கலைஞன். அவனுக்கு முன் நீ சிறு துரும்புக்கூட கிடையாது. நாகேஷ் குடித்து குடித்தே அவனது வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டான். இனி படப்பிடிப்பு நேரத்துல நீ தண்ணி போட்டதா கேள்விப்பட்டேன் உன்னை செருப்பால் அடிப்பேன் என்றிருக்கிறார். இதனையடுத்து தான் மேக்கப்பில் இருக்கும் போது மது அருந்தும் பழக்கத்தை விட்டாராம் ரஜினிகாந்த்.


Click it and Unblock the Notifications











