ஸ்டார் ஹோட்டலில் வெறும் துண்டுடன் இருந்த ரஜினிகாந்த்.. விஜயகாந்த் செய்த விஷயம் தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த் இந்திய அளவில் அடையாளப்பட்டவர். அவரது நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். கமல் ஹாசனுக்கு எப்படி மெகா ப்ளாக் பஸ்டரை லோகி கொடுத்தாரோ அதேபோல் தங்கள் தலைவர் ரஜினிக்கும் கொடுப்பார் என்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் ரஜினி பற்றி சுவாரஸ்ய சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.
ரஜினிகாந்த்தான் திரைத்துறையில் இருக்கும் பலருக்கும் இன்ஸ்பிரேஷன். ஹீரோ என்றாலே வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதை உடைத்து காண்பித்தவர் அவர். தன்னுடைய துறுதுறு உடல்மொழியாலும். வித்தியாசமான தமிழ் உச்சரிப்பாலும் உச்சத்துக்கு சென்றவர் அவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருமே ரஜினிகாந்த்தை மெய் மறந்து ரசிப்பார்கள். இன்னமும் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனை கண்டு இந்திய திரையுலகமே ஆச்சரியத்தில் இருக்கிறது.

வேட்டையன்: அவருக்கு 74ஆவது வயது நடந்துகொண்டிருக்கிறது. இப்போதும்கூட படு பிஸியாக நடித்துவருகிறார் அவர். அந்தவகையில் அவர் கடைசியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்தார். ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படம் கடந்த மாதம் பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது. ஆனால் படத்துக்கு ரசிகர்கள் தங்களது சுமாரான வரவேற்பையே கொடுத்தார்கள். அதனையடுத்து இப்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்துவருகிறார்.
ரஜினி என்றால் எளிமை: ரஜினிகாந்த்துக்கு இல்லாத புகழ் இல்லை, பணம் இல்லை. அவர் அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறார். இருந்தாலும் தான் நடத்துநராக இருந்தபோது தன்னிடம் இருந்த எளிமையை இன்னமும் அவர் இழக்கவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவார்கள். அதுமட்டுமின்றி தன்னுடைய ஆரம்பகாலத்தில் தனக்கு உதவியவர்களையும் அவர் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் மறக்கவில்லை. அந்த பண்பும்கூட அவர் இவ்வளவு வளர்ந்ததற்கு ஒரு காரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
சுவாரஸ்ய சம்பவம்: இந்நிலையில் ரஜினிகாந்த் பற்றிய சுவாரஸ்ய சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது விஜயகாந்த் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்கு நட்சத்திர கலை விழா ஒன்றை சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் ஏற்பாடு செய்திருந்தார். அதற்காக இங்கிருந்து ஏகப்பட்ட நட்சத்திரங்கள் அங்கு சென்றனர். அவர்களில் ரஜினிகாந்த்தும் ஒருவர். மலேசியாவில் கலை நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்பது பிளான்.
ரஜினி செய்த சம்பவம்: அங்கிருந்து பேருந்தில் செல்லலாம் என்று முடிவெடுக்கப்பட்டபோது சில நடிகர்கள், நடிகைகள் பேருந்தில் வர முடியாது என்று கூறினார்களாம். இந்த விஷயம் ரஜினிக்கு தெரிய நான் அழைக்கிறேன் என்று சொல்லுங்கள் என கூறிவிட்டு முதல் ஆளாக பேருந்தில் ஏறி அமர்ந்துவிட்டாராம். ரஜினியே அமர்ந்துவிட்டாரே இனி நாம் என்ன செய்வது என்று கூறி பேருந்துகளில் மற்ற நட்சத்திரங்களும் அமர்ந்திருக்கிறார்கள். மொத்தம் ஆறு பேருந்துகள்வரை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
துண்டுடன் ரஜினிகாந்த்: ரஜினிகாந்த் ஒவ்வொரு பேருந்துக்கும் சென்று தன்னுடன் வந்தவர்களை உற்சாகப்படுத்திக்கொண்டே வந்தாராம். சிங்கப்பூர் வந்ததும் ஒரு ஸ்டார் ஹோட்டலில் ரூம் போடப்பட்டிருக்கிறது. அப்போது ஒருவர் ஹோட்டலில் இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தாராம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் காஜா மொய்தீன் யார் இது வெறும் துண்டோடு திரிவது என நினைத்து அருகில் சென்று பார்த்தால் அப்படி அலைந்துகொண்டிருந்தவர் ரஜினிகாந்த்தாம்.
உடனே அதிர்ச்சியடைந்த காஜா, 'சார் என்ன சார் இப்படி' என்று கேட்க; அதற்கு ரஜினியோ இல்லை மாறி மாறி பேருந்துகளில் வந்ததில் என்னுடைய லக்கேஜ் எதில் இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூற; இருங்கள் சார் போய் கொண்டு வருகிறேன் என்று சொன்னாராம் காஜா. உடனே இவரோ, 'இல்லை இப்போதான் எல்லோரும் வந்திருக்கிறார்கள். கொஞ்சம் நேரம் ஆகட்டும். நான் விஜயகாந்த்திடம் வேட்டி, சட்டை கேட்டிருக்கிறேன். அதுவே போதும் என்று சொல்லி விஜயகாந்த்தின் வேட்டி சட்டையுடன் அந்த நட்சத்திர கலை விழாவில் கலந்துகொண்டாராம். இதனை காஜா ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











