Ajithkumar - படத்திலிருந்து தூக்க நினைத்த இயக்குநர்.. வீல் சேரில் வந்து தயாரிப்பாளரிடம் உறுதி கொடுத்த அஜித்
சென்னை: Ajith (அஜித்) கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலிருந்து அஜித்தை ராஜீவ் மேனன் தூக்க நினைத்ததாக கூறப்படுகிறது.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். எந்த பின்னணியும் இல்லாமல் திறமையின் துணையோடு சினிமாவுக்குள் வந்து பல முறை விழுந்து; விழுந்ததிலிருந்து கற்று மீண்டும் எழுந்து இன்று உயர்ந்த இடத்திற்கு வந்திருக்கிறார். படத்தின் ப்ரோமோஷன், பேட்டி என எதிலும் கலந்துகொள்ளாமல் இருப்பவர் அஜித். அவரை பார்க்க வேண்டுமென்றால் ஒன்று திரையரங்கு இல்லையென்றால் அவர் பைக் ரைட் செய்யும்போது வெளியாகும் வீடியோ. இந்த இரண்டு மட்டும்தான் வழி.

சூப்பர் ஹிட் துணிவு: அஜித்குமார் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படம் வாரிசு படத்துக்கு போட்டியாக களமிறங்கியது. இதன் காரணமாக எந்தப் படம் வெற்றிப் பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஒரு பக்கம் வாரிசு தயாரிப்பாளர் விஜய் தான் நம்பர் 1 என கொளுத்திப்போட இந்த வருட பொங்கல் போட்டியில் அனல் பறந்தது. அந்த ரேஸில் கண்டெண்ட் ரீதியாக துணிவு படத்துக்கே பாஸிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன.
விடாமுயற்சி: துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். துணிவு படம் தந்த வெற்றியை விடாமுயற்சியிலும் தொடர வேண்டும் என அவர் நினைப்பதால் கதையை தரமாக தயார் செய்திருக்கிறாராம் மகிழ் திருமேனி. ஆனால் படத்தின் ஷூட்டிங் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் ரசிகர்களை உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க படத்தை ட்ராப் செய்ய லைகா திட்டமிட்டதாகவும் இடையில் தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
காதல் மன்னன்: அஜித்குமார் இப்போது கமர்ஷியல் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது படங்கள் செய்யும் வசூல் அவரை இந்த நிலைக்கு மாற்றியிருக்கிறது. இதனால் முழு காதல் படத்திலோ அல்லது ஒரு ஃபீல் குட் படத்திலோ அஜித்தால் நடிக்க முடிவதில்லை. ஆனால் தனது கரியரின் ஆரம்பத்தில் ஃபீல்குட் படங்களில் நடித்திருக்கிறார்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: அப்படிப்பட்ட படங்களில் ஒன்று கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய், தபு, மம்மூட்டி, ஸ்ரீவித்யா, மணிவண்ணன் என பலர் நடித்திருப்பார்கள். அந்தப் படம் முழுக்க முழுக்க ஃபீல் குட்டாகவே இருக்கும். குறிப்பாக தான் ஏற்றிருந்த மனோகர் கதாபாத்திரத்தில் அவ்வளவு அழகாக நடித்திருப்பார்.
தூக்க நினைத்த இயக்குநர்: இந்தச் சூழலில் அந்தப் படத்திலிருந்து அஜித்தை தூக்கிவிடலாம் என இயக்குநர் ராஜீவ் மேனன் முடிவு செய்திருந்தாராம். அதாவது அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. முதலில் அஜித் ரோலில் பிரசாந்த்திடம் கேட்கப்பட்டு அவர் நோ சொன்னதை அடுத்து அஜித் ஃபிக்ஸ் செய்யப்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக படத்தின் ஷூட்டிங் நெருங்கும் நேரத்தில் அஜித்துக்கு விபத்து ஏற்பட்டுவிட்டதாம். நடக்க முடியாத சூழலில் வீல் சேரில்தான் இருந்தாராம் அஜித்.
இதனையடுத்து அவர் முழுமையாக குணமடைய தாமதமாகும் என நினைத்த ராஜீவ் மேனன் அஜித்தை படத்திலிருந்து தூக்கிவிடலாம் என கூறியிருக்கிறார். தாணுவும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்திருக்கிறார். இந்த செய்தியை கேள்விப்பட்ட அஜித்குமார் வீல் சேரில் இருந்தபடியே நேராக தாணுவின் அலுவலகத்துக்கு வந்துவிட்டாராம்.
வந்தவர் தாணுவிடம், சார் கண்டிப்பா ஒரு வாரத்தில் எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுவேன். அதனால் நிச்சயம் இந்தப் படத்தில் நான் நடிக்க வந்துவிடுவேன் என்றாராம். இதனையடுத்து தாணுவும் சமாதானம் ஆகிவிட்டாராம். அஜித்தும் சொன்னபடியே ஒரு வாரத்தில் ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டாராம். ஆனால் இந்தப் படத்துக்கு பிறகு தாணு எவ்வளவு முயன்றும் அவரது தயாரிப்பில் அஜித் நடிக்க மறுத்துவிட்டாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் அந்தணன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











