ஆம்பளையா?.. ச்சீ.. கமல்ஹாசனின் அந்த சீன் இப்படித்தான் எடுத்தோம்.. ரமேஷ் கண்ணா பளிச்சுனு சொல்லிட்டாரே
சென்னை: தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனை முறை பார்த்தாலும், எந்த வயதில் பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத ஒரு முழுநீள காமெடி காவியம் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான 'பஞ்சதந்திரம்' திரைப்படம் தான். கிரேசி மோகனின் கணையாழி போன்ற வசனங்கள், ஐந்து நண்பர்களின் அதகள லூட்டிகள் என இன்றுவரை ரசிகர்களின் ஆல்-டைம் பேவரைட் லிஸ்டில் இப்படம் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது.
இப்படத்தில் நடிகர், இயக்குனர், கதாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட ரமேஷ் கண்ணா, சர்தார்ஜி வேடத்தில் வந்து படம் முழுக்க அதிரடி காமெடி செய்திருப்பார். சமீபத்திய பேட்டி ஒன்றில், தியேட்டரே சிரிப்பலையில் குலுங்கிய அந்த குறிப்பிட்ட காட்சியில் நடித்தபோது, திரைக்குப் பின்னால் நடந்த சுவாரசியமான சீக்ரெட் ஒன்றை ரமேஷ் கண்ணா நெகிழ்ச்சியோடு உடைத்துள்ளார்.
திடீரென வந்த ஃபைட் சீன்.. ஷாக்கான ரமேஷ் கண்ணா: படப்பிடிப்பு தளத்தில் திடீரென அந்த சண்டை காட்சியை எடுக்க திட்டமிட்டபோது, ரமேஷ் கண்ணாவை அழைக்கிறார்கள். அப்போது அங்கு வந்த ஃபைட் மாஸ்டர், "நீங்க கமல் சாரை தூக்கிப் போட்டு ரெண்டு பல்டி அடிச்சு, அதுக்கப்புறம் இந்த ஃபைட் சீக்குவன்ஸ் தொடரப்போகுது" என்று கம்பீரமாகக் கூறியுள்ளார். இதைக்கேட்டு பதறிப்போன ரமேஷ் கண்ணா, "ஏங்க, நான் ஒரு காமெடியன்.. நான் போய் எப்படிங்க ஒரு மாஸ் ஹீரோவை, அதுவும் உலகநாயகனை தூக்கிப் போட்டு அடிக்க முடியும்? இதெல்லாம் வாய்ப்பே இல்லை!" என்று கையை விரித்துள்ளார்.

கமலின் 'ஸ்பெஷல் கிட்' மற்றும் மாஸ் ஹெல்ப்: இவர்கள் பேசுவதை தூரத்திலிருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்த உலகநாயகன் கமல், ரமேஷ் கண்ணாவிடம் வந்து, "நீங்க வாங்க ரமேஷ் கண்ணா, பாத்துக்கலாம்" என்று தட்டிக்கொடுத்து தைரியம் கொடுத்துள்ளார்.
பொதுவாகவே கமல் ஹாசன் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் போது, தனக்கு எலும்புகள் மற்றும் மூட்டுகளில் (Joints) அடிபடாமல் இருக்க வீட்டிலிருந்து ஒரு பெரிய பேக்கில் 'நீ கேப்' (Knee Cap) உள்ளிட்ட பல பாதுகாப்பு உபகரணங்கள் (Safety Kits) அடங்கிய கிட் ஒன்றை எடுத்து வருவாராம். அதை அணிந்துதான் அவரே சண்டைக் காட்சிகளில் நடிப்பார். ஆனால், அன்று ரமேஷ் கண்ணா பயப்படுவதைப் பார்த்த கமல், தன் பேக்கிலிருந்து அந்த பாதுகாப்பு உபகரணங்களை எடுத்து ரமேஷ் கண்ணாவுக்கு அவரே நேரில் மாட்டி விட்டுள்ளார்.

அடிச்சது ரமேஷ் கண்ணா இல்ல.. விழுந்தது கமல் சார்: அந்தக் காட்சியின் பின்னணியைப் பற்றி ரமேஷ் கண்ணா பேசுகையில், "அந்த பெட் மேல நடக்குற ஃபைட் சீக்குவன்ஸை நீங்க இப்ப பொறுமையா உத்துப் பார்த்தீங்கன்னா ஒரு உண்மை புரியும். நான் கமல் சாரை தூக்கிப் போட்டு எல்லாம் சண்டை கட்டியிருக்க மாட்டேன். அவரே என் மேல விழுந்து, அவரே ரெண்டு பல்டி அடிச்சுக்கிட்டு.. நான் ஏதோ அவரை தூக்கிப் போட்டு அடிச்ச மாதிரி அந்த சீனை அவரேதான் கம்போஸ் பண்ணி எடுத்தாரு. அதுல நான் ஒண்ணுமே பண்ணல, எல்லாம் அவரோட டைரக்ஷன் தான்!" என்று உலகநாயகனின் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளார்.
தியேட்டரையே அதிரவைத்த அந்த 'ஆம்பளையா சீ: படத்தின் கதையின்படி, இதற்கு முந்தைய காட்சியில் தேவயானி அதிக தூக்க மாத்திரைகளை விழுங்கியதால், அதைத் துப்ப வைக்க கமல் பெட்டில் வைத்து அவரோடு போராடுவார். தவறுதலாக இருவரும் பெட்டில் கட்டிப்புரள்வதை பார்த்து கமலினுடைய மனைவி சிம்ரன் ஏற்கனவே செம கோபத்திலும் அதிர்ச்சியிலும் இருப்பார்.

அதைத் தொடர்ந்து நடக்கும் இந்த ஃபைட் சீனில், சர்தார்ஜி வேடத்தில் இருக்கும் ரமேஷ் கண்ணாவுடன் கமல் பெட்டில் கட்டிப்புரண்டு சண்டை போடுவார். அப்போது ரமேஷ் கண்ணாவின் டர்பன் (தலைப்பாகை) கழன்று, அவரது தலைமுடி மற்றும் தாடி கலைந்து விழும். ஏற்கனவே ஒரு பெண்ணுடன் கணவன் பெட்டில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியான சிம்ரன், இப்போ ஒரு ஆம்பளையோட பெட்டில் கட்டிப்புரள்வதைப் பார்த்ததும் உச்சக்கட்ட ஷாக்காகி, முகத்தை சுளித்துக் கொண்டு, "ஆம்பளையா சீ..!" என்று ஷாக் ஆவார்.
தியேட்டரே சிரிப்பலையில் அதிர்ந்த அந்த சூப்பர் ஹிட் காட்சியின் பின்னணியில், உலகநாயகன் கமலின் இவ்வளவு பெரிய அர்ப்பணிப்பும், ரமேஷ் கண்ணாவின் சுவாரசியமான உழைப்பும் ஒளிந்திருப்பதை ரமேஷ் கண்ணா தற்போது வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications