Ramya Krishnan -தலைவனுக்கு முன்னாடி கால் மேல கால் போடுறியா?..ரம்யா கிருஷ்ணனை கெட்ட வார்த்தையால் திட்டிய ரசிகர்
சென்னை: Ramya Krishnan (ரம்யா கிருஷ்ணன்) படையப்பா படத்தில் ரஜினிக்கு முன்பு கால் மேல் கால் போட்டு நடித்ததால் ரம்யா கிருஷ்ணனை ரசிகர் கெட்டவார்த்தை சொல்லி திட்டி ஸ்க்ரீனை கிழித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முக்கியமான சிறந்த நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். பத்திரிகையாளர் சோவின் உறவினரான இவர் பல வருடங்களாக நடித்துவருகிறார். ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயினாக நடித்து பிரபலமடைந்தார். அதன் பிறகு காலம் செல்ல செல்ல கேரக்டர் ரோல்களை செய்ய ஆரம்பித்தார்.

பஞ்ச தந்திரம்: அதேபோல் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் மற்றொரு சிறப்பான கதாபாத்திரம் என்றால் பஞ்ச தந்திரம் படத்தில் அவர் ஏற்றிருந்த மரகதவள்ளி கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்திலும் படு காமெடியாகவும், கொஞ்சம் கிளாமராகவும் நடித்து அசத்தியிருந்தார் ரம்யா கிருஷ்ணன். குறிப்பாக வந்தேன் வந்தேன் பாடலில் சிம்ரனுக்கு போட்டியாக நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி ராஜமாதா: இப்படி பல கதாபாத்திரங்களில் கலக்கிய ரம்யா கிருஷ்ணனை இந்தியா முழுவதும் கொண்டு போய் சேர்த்த படம் பாகுபலி. அந்தப் படத்தில் ராஜமாதா என்ற கதாபாத்திரத்தை ஏற்று தனது குரலாலும், நடிப்பாலும் அதகளம் செய்தார். அந்தப் படம் வெளியானதிலிருந்து ரம்யா கிருஷ்ணனை ரசிகர்கள் ராஜமாதா என்றுதான் அழைத்து வருகிறார்கள். அவருக்கு பெரும் அடையாளமாகவே இருக்கிறது ராஜமாதா கதாபாத்திரம்
நீலாம்பரி: இப்போது வேண்டுமானால் ராஜமாதா கேரக்டர் மூலம் ரம்யா கிருஷ்ணன் அடையாளப்பட்டிருக்கலாம். ஆனால் அவருக்கு முதல் அடையாளம் பெற்றுக்கொடுத்தது என்றால் படையப்பா படத்தில் அவர் ஏற்றிருந்த நீலாம்பரி கதாபாத்திரம். ரஜினி ஸ்க்ரீனில் இருக்கும்போது ஒருவர் தன் மீது ரசிகனின் கவனத்தை திருப்புவது கடினம். ஆனால் அதை ரம்யா கிருஷ்ணன் அசால்ட்டாக செய்தார். ஆனால் முதலில் அந்த கேரக்டரில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் மறுத்துவிட்டாராம்.
மறுத்த ரம்யா கிருஷ்ணன்: அதாவது ரஜினிக்கு வில்லியாக நடித்தால் அவரது ரசிகர்களிடமிருந்து தப்ப முடியாது என்று யோசித்த அவர் முதலில் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லையாம். அதன் பிறகு ரஜினியே நேரடியாக பேசி சம்மதிக்க வைத்தாராம். படத்தின் ஷூட்டிங்கின் போது ரஜினிக்கு எதிரான வசனங்கள் பலவற்றை கத்திரிக்க சொல்லிவிட்டாராம் ரம்யா. அதேபோல் கால் மேல் கால் போட்டு நடிக்கும் சீனில் நடிக்கமாட்டேன் என்று கூறினாராம். ஆனால் கே.எஸ். ரவிக்குமாரும், ரஜினியும் பேசி சம்மதிக்க வைத்தார்களாம்.

கிழித்த ரசிகர்: படம் வெளியாகி ஆல்பர்ட் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. அப்போது அந்த சீன் வருகையில் ரஜினியின் வெறித்தனமான ரசிகர் ஒருவர், ஏய் என்று கெட்டவார்த்தை சொல்லி திட்டி எங்கள் தலைவனுக்கு முன்னாடியா கால் மேல கால் போடுற. கால இறக்கு என்று கத்திக்கொண்டே ஸ்க்ரீனை கிழித்துவிட்டாராம். பிறகு அந்த ரசிகரை தியேட்டர் நிர்வாகத்தினர் தாக்கி காவல் துறையிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
இதனை அறிந்த ரஜினி நேரடியாக தலையிட்டு அந்த ரசிகரிடமும் காவல் துறையிடமும் பேசி பிரச்னையை சுமூகமாக்கி; ரம்யா கிருஷ்ணனை யாரும் தவறாக நினைக்கக்கூடாது பேசக்கூடாது என்று அறிக்கையும் விட்டாராம். மேலும் படம் ரிலீஸாகி சில நாட்கள் ரம்யா கிருஷ்ணன் சென்னையிலேயே இல்லையாம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











