ரவி மோகனுக்கு விஜயகாந்த் செய்த அட்வைஸ்.. ச்ச எப்படிப்பட்ட மனுஷனா இருந்திருக்காரு.. எல்லோரின் மீதும் அக்கறை
சென்னை: சினிமாவிலிருந்து அரசியலுக்கு சென்ற விஜயகாந்த் அங்கே சில துரோகங்களை சந்தித்தார். அதன் காரணமாக மன உளைச்சலோடு சேர்ந்து உடல்நல குறைவும் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை எடுத்து மீண்டிருந்தார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் அவர் ஹீரோ ரவி மோகனுக்கு அட்வைஸ் செய்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் பீக்கில் இருந்தபோது திரைத்துறைக்கு வந்த விஜயகாந்த்; அவர்களுக்கு கடும் போட்டியை திரைத்துறையில் கொடுத்தவர். சினிமாவில் எப்படி அவர்களுக்கு இணையான செல்வாக்கை பெற்றிருந்தாரோ அதேபோல் அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா ஆக்ட்டிவ்வாக இருந்தபோது உள்ளே வந்து அவர்களுக்கும் சொல்லிக்கொள்ளும்படியான அழுத்தத்தை கொடுத்தார். ஒருகட்டத்தில் தன்னுடன் அவரை இணைத்துக்கொள்வதற்கு இரண்டு பேருமே போட்டிப்போட்டார்கள் என்பதை யாராலும் மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.

உதவிய விஜயகாந்த்: அதேபோல் விஜய், சூர்யா போன்ற இப்போதைய முன்னணி நட்சத்திரங்கள் வெளிச்சம் கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்தபோது அவர்களது படங்களில் சம்பளமே வாங்காமல் கேமியோ ரோல் செய்து அவர்களுக்கு வெளிச்சம் கிடைக்க முக்கிய காரணமாக இருந்தார். அவர்கள் மட்டுமின்றி ஷாம் உள்ளிட்ட அடுத்த தலைமுறை நடிகர்களும் இக்கட்டான சூழலில் இருந்தபோது கேப்டன் உதவியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டனுக்கு நடந்த துரோகம்: இப்படி ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்திருக்கும் அவருக்கு அரசியல் களம் துரோகத்தைத்தான் பரிசாக அளித்தது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை பகைத்துக்கொண்டதால்; கேப்டனுடன் இருந்த எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்தார் ஜெ. தான் நம்பியவர்கள் இப்படி செய்துவிட்டார்களே என்பதை நினைத்து தீவிரமான மன உளைச்சலுக்கு ஆளானார். அதோடு சேர்த்து உடல்நலமும் சரியில்லாமல் போனது.
உயிரிழந்த விஜயகாந்த்: அதனையடுத்து அமெரிக்காவுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்தார். இருந்தாலும் முன்னர் போல் அவரது உடல்நிலை சீராக இல்லை. எனவே அரசியலிலிருந்தும் ஒதுங்கும் சூழ்நிலை உருவானது. சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தும்விட்டார். அவர் உயிரோடு இருந்தபோது அவரை கடுமையாக விமர்சித்தவர்கள்கூட; அவர் உயிரிழப்பை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டார்கள். இந்நிலையில் விஜயகாந்த் குறித்து ரவி மோகன் தனது நினைவுகளை பகிர்ந்திருக்கிறார்.
ரவி மோகன் சொன்னது: ரவி கொடுத்த ஒரு பேட்டியில், "விஜயகாந்த்தை நாம் ஏன் கேப்டன் என்று சொல்கிறோம் என்றால்; ஒரு கேப்டன்தான் சாதி, மதம், இனம், மொழி, கலாசாரம் என எதையும் பார்க்காமல் இருப்பர். அப்படித்தான் கேப்டன் விஜயகாந்த்தும். அவர் மேல் எனக்கு மிகப்பெரிய மரியாதை, அன்பு, பாசம் இருக்கிறது. ஒருமுறை எங்கள் இரண்டு பேருடைய படத்தின் ஷூட்டிங்கும் ஒரே இடத்தில் நடந்துகொண்டிருந்தது. அப்போதைக்கு அவரை பார்ப்பதற்காக சென்றிருந்தேன்.
அவர் செய்த அட்வைஸ்: போனவுடன், வா ரவி என்று ரொம்ப சாதாரணமாக ஒரு நண்பன் எப்படி இருப்பானோ அப்படி எனக்கு சேர் போட்டு பக்கத்தில் உட்கார வைத்து என்னுடைய படங்கள் பற்றியெல்லாம் பெருமையாக பேசிக்கொண்டிருந்தார். அதுமட்டுமில்லாமல், பீச்சுக்கு போய் நன்றாக கத்து. குரல் நன்றாக வருமென்றும் அட்வைஸ் செய்தார். அவர் சொன்னபடியே ஒரு வாரம் செய்தேன். அவர் மாதிரியான நல்ல குணம் எல்லோருக்கும் வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications














