காய்ச்சல் அடித்தாலும் என்னை அம்மா கூட்டி சென்றார்.. ரஜினி படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்
சென்னை: ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். வேட்டையன் போல் இந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெறாமல் மெகா ப்ளாக் பஸ்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் ரஜினி. இந்தச் சூழலில் ரஜினி குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசியிருக்கும் விஷயம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
ஜெய்பீம் படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் கடந்த மாதம் பத்தாம் தேதி வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸான படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தை கொடுத்தனர். அதேசமயம் படத்தின் கதைக்களத்தை அவர்கள் பாராட்ட தவறவில்லை. இதுமாதிரியான கதைக்களத்தை ரஜினிகாந்த் தேர்ந்தெடுத்ததற்காக வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள். மேலும் ரஜினியின் நடிப்பும் படத்தில் மிக அருமையாக இருந்தது.

கூலி: வேட்டையன் படத்தை முடித்த கையோடு கூலி படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் ரஜினி. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். 73 வயதிலும் ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களில் நடித்துவருவது அவரது ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறது. மேலும் மீசை வைத்த குழந்தையப்பா என்று வைரமுத்து எழுதியது ரஜினிக்கு பக்காவாக பொருந்துகிறது என்றும் புகழ்ந்துவருகிறார்கள்.
மருத்துவமனையில் அனுமதி: இதற்கிடையே ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். நன்றாக இருந்தவர் ஏன் திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆனார் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தனர். ஆனால் ரஜினிகாந்த்தின் உடல்நிலை சீராக இருக்கிறது என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் அங்கு வைத்து அவருக்கு சிறுநீரக சம்பந்தமான பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் அடிவயிற்று ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சையும் செய்யப்பட்டது.
ஆர்.ஜே.பாலாஜி பேட்டி: இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜியின் ஒரு பேட்டி ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில், "ரஜினிகாந்த் நடித்த தளபதி படம் வெளியானபோது எனக்கு காய்ச்சல் அடித்துக்கொண்டிருந்தது. காய்ச்சலோடு எனது அம்மா என்னை தளபதி படம் பார்ப்பதற்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு போனவுடன் தான் தெரிந்தது தியேட்டர் ஹவுஸ் ஃபுல். டிக்கெட் கிடைக்காது என்று. இதனால் என்ன செய்வதென்று யோசித்தோம். பிறகு எனது அம்மா ஒரு ஐடியா சொன்னார்.
என்ன ஐடியா: அதாவது, அவர் என்னிடம் சரி இந்தக் காட்சி மட்டும் கமல் ஹாசனின் குணா படத்தை பார்க்கலாம். (அப்போது தளபதியும், குணாவும் ஒரே நாளில் ரிலீஸாகியிருந்தது). படத்தின் பாதியில் எழுந்து வந்து தளபதி படத்துக்கு டிக்கெட் வாங்குவதற்கு வரிசையில் நிற்கலாம் என்று சொன்னார். அதன்படி குணா படத்தின் பாதியில் அம்மா எழுந்து என்னை தளபதி படத்துக்கு அழைத்து சென்றார். நான் குணா படம் பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அம்மாவோ என்னை தளபதிக்கு கூட்டி சென்றுவிட்டார். அது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்" என்றார். முன்னதாக ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











