காலேஜில் இருந்தே விஜய் அதை செய்வார்.. ரொம்ப அடம் பிடிப்பார்.. எஸ்.ஏ.சந்திரசேகர் ஓபன் டாக்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத அக்கட்சி 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கவிருக்கிறது. கட்சியின் மாநாடு சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதனால் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட உற்சாகத்தில் இருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் தனது கடைசி படத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
விஜய் அரசியலுக்கு வருவார் என்று கடந்த சில வருடங்களாகவே ஆரூடம் கூறப்பட்டது. அவரும் அதனை உறுதி செய்யும் விதமாக தனது மக்கள் இயக்கம் மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்துவந்தார். நிலைமை இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கண்டிப்பாக அரசியலில் தனது தடத்தை பதித்துவிட வேண்டுமென்பதில் மிகத்தீவிரமாக இருக்கிறார் விஜய். தொண்டர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இருந்தாலும் சோகம்: தங்கள் தளபதி அரசியலுக்கு வந்துவிட்டாலும் ரசிகர்களிடையே ஒரு சோகம் இருக்கிறது. அதாவது அவர் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருப்பதாக கூறுகிறார். சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுக்க முழுக்க அரசியலில்தான் கவனம் செலுத்தவிருக்கிறார்.விஜய்யின் கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார். படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்தது. பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.
தவெக மாநாடு: சூழல் இப்படி இருக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் பேசிய விஜய் தனது கட்சியின் கொள்கை என்ன; வழிகாட்டிகள் யார் யார் என்பது குறித்து பேசினார். முக்கியமாக பெரியாரை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் கடவுள் மறுப்பை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று தெரிவித்தார். அது மிகப்பெரிய ட்ரோலை சந்தித்திருக்கிறது. மேலும் மேடையில் பகவத் கீதை புத்தக சிலையும் இருந்தது. அதனையும் பலர் விமர்சித்தனர்.
திமுகவுக்கும் தாக்கு: அதுமட்டுமின்றி மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சித்த அவர்; பாசிசம் என்று கூறும் திராவிட மாடல் என்றால் நீங்கள் என்ன பாயாசமா என்று திமுகவையும் தாக்கினார். அது தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பேச்சை குறிப்பிட்டு திருமாவளவனும் தனது கண்டனத்தை பதிவு செய்தார். விஜய்யின் அரசியல் மாநாட்டு பேச்சு போகப்போக இன்னும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.
எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி: முக்கியமாக திமுகவை தாக்கியிருப்பதால் தளபதி 69 படத்துக்கு ஏதேனும் சிக்கல் வருமா என்று ரசிகர்களும் கவலையடைய ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், "மார்க்கெட்டில் எந்த ஒரு கார் புதிதாக வந்தாலும் அதனை விஜய் வாங்கிவிட வேண்டும் என்று அடம்பிடிப்பார். இதனை அவர் கல்லூரி படிக்கும்போதிலிருந்தே செய்துவருகிறார். அதனால் சென்னை மார்க்கெட்டில் ஏதேனும் புதிய கார் வந்தால் விஜய்க்காக அதனை நான் வாங்கிவிடுவேன்.
விஜய்தான் ஓட்டுவார்: அதேபோல் எவ்வளவு தூரம் என்றாலும் விஜய்தான் கார் ஓட்டுவார். ஆனால் நானோ பாதுகாப்பு கருதி ஓட்டுநர்தான் ஓட்ட வேண்டும் என்று சொல்வார். விஜய் என்னிடம் சரி என்று சொல்லிவிட்டு கொஞ்ச தூரம் சென்ற பிறகு ஓட்டுநரிடம்தான் காரை வாங்கி விஜய் ஓட்டிவிடுவார்" என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications