Sangamam: சங்கமம் ரிலீஸாகி 24 வருசம் ஆச்சு... கடைசி வரைக்கும் அது என்ன கலைன்னு சொல்லவே இல்லயே!
சென்னை: சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய சங்கமம் திரைப்படம் 1999ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி வெளியானது.
ஏஆர் ரஹ்மான் இசையில் ரகுமான், விந்தியா, மணிவண்ணன், சார்லி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவானதை அடுத்து நெட்டிசன்கள் இப்போது ட்ரோல் செய்துவருகின்றனர்.
கலைகளை பின்னணியாக வைத்து உருவான இந்தப் படம், தற்போது அது என்ன கலை என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன கலைன்னு சொல்லவே இல்லையே: தமிழில் தில்லானா மோகனாம்பாள், கரகாட்டகாரன் படங்கள் ரொம்பவே ஸ்பெஷலானவை. இரண்டுமே கலைகளை பின்னணியாக வைத்து உருவானது. தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜியின் நாதஸ்வரம், பத்மினியின் பரதநாட்டியம் இரண்டில் எது சிறந்த கலை என்ற போட்டி காணப்படும். அதேபோல், கரகாட்டக்காரன் படத்தில் இரண்டு கரகாட்ட கோஷ்டியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதே கதை.
இந்த படங்களின் அப்டேடட் வெர்ஷனாக உருவானது தான் சங்கமம் திரைப்படம். சத்யா, அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்கள் மூலம் கவனம் ஈர்த்த சுரேஷ் கிருஷ்ணா சங்கமம் படத்தை இயக்கினார். அதேபோல், ரகுமான் ஹீரோவாகவும், நாயகியாக விந்தியாவும் அறிமுகமானார். இவர்களுடன் மணிவண்ணன், வடிவேலு, விஜயகுமார், ஸ்ரீவித்யா, சார்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பிரமிட் நடராஜன் தயாரித்த இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
சங்கமம் திரைப்படம் 1999ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி வெளியானது. முன்னதாக இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன. "மழைத்துளி மண்ணில் சங்கமம்", "வராக நதிக்கரை ஓரம்", "மார்கழித் திங்கள் அல்லவா", "செளக்கியமா" பாடல்கள் என ஒவ்வொன்றும் இப்போதும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்டில் உள்ளன். ஆனால், படம் எதிர்பார்த்ததைவிட மிக தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் 24 ஆண்டுகளை நிறைவு செய்யும் சங்கமம் படம் குறித்து நெட்டிசன்கள் டிவிட்டரில் ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது இப்படத்தில் விந்தியா பரதநாட்டிய டான்ஸராக நடித்திருப்பார். இதுதான் அவரது முதல் படம் என்றாலும் அவருக்கு பரதநாட்டியம் ஆடத்தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜனுக்கு இது தெரியவே தெரியாதாம்.
அதேபோல், இப்படத்தில் முதலில் ஏஆர் ரஹ்மானை புக் செய்துவிட்டு, ஹீரோவாக அவரது சகலை நடிகர் ரகுமானை நடிக்க வைத்துள்ளார்கள். ஏஆர் ரஹ்மானால் தான் நடிகர் ரகுமானுக்கும் சங்கமம் படத்தில் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதைவிட முக்கியம் அவருக்கும் டான்ஸுக்கும் ஏணி போட்டாலும் எட்டாது என்பதுதான். இவர்களுடன் மணிவண்னன், விஜயகுமார், ஸ்ரீவித்யா, வடிவேலு, சார்லி, தியாகு என ஒரு கோஷ்டியை உருவாக்கியிருப்பார் சுரேஷ் கிருஷ்ணா.
சங்கமம் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டானதால், படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. கலை எப்படி காதலுக்கு தடையாக இருக்கும் என ஆளாளுக்கு அடுக்கடுக்காக வசனமெல்லாம் பேசினார்கள். ஆனால், கடைசி வரை ரகுமான் டான்ஸ் ஆடியது எந்த கலை என்று சொல்லாமலேயே விட்டுவிட்டார் சுரேஷ் கிருஷ்ணா. அல்லது ரகுமான் ஆடியதெல்லாம் அவருக்கு நடனமாகவே தெரியவில்லையோ என்னவோ.

தில்லானா மோகனாம்பாள், கரகட்டாகரன் வரிசையில் வெளியான சங்கமம், ஏஆர் ரஹ்மானின் பாடலுக்காக மட்டுமே பிரபலமானது. அதுவும் இல்லையென்றால் இன்னும் மோசமாகியிருக்கும். கவிதாலயாவில் இருக்கும் போது ஏஆர் ரஹ்மானிடம் ஏற்பட்ட நட்பின் காரணமாகவே, பிரமிட் நடராஜன் தயாரித்த சங்கமம் படத்தில் ஏஆர் ரஹ்மான் கமிட்டானதும் குறிப்பிடத்தக்கது. இது மட்டும் இல்லாமல் லவ் பேர்ட்ஸ், ரிதம், உதயா போன்ற படங்களுக்கும் பிரமிட் நடராஜனுக்காக இசையமைத்தார் ஏஆர் ரஹ்மான்.
இந்நிலையில், சங்கமம் படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆன பின்னரும், ரகுமானின் டான்ஸ் எந்த வகையான கலையில் இடம்பெறும் என தெரியவில்லை என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











