எனக்கும் பசிக்கும்ல.. நடிப்பது பற்றி சீமான் ஓபன் டாக்.. அதனால்தான் எல்ஐகேல கமிட்டானாரோ?
சென்னை: அரசியல் களத்தில் தீவிரமாக இயங்கிவரும் சீமான்; யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில் அவரது கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படமானது ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வியும் பலரிடம் எழுந்திருக்கிறது.
ஈழ படுகொலை நடந்தபோது முழு நேர அரசியலுக்கு வந்தார் சீமான். அதுவரை அவர் இயக்கியிருந்த படங்களில் தம்பி படம் மட்டும்தான் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. விஜய்யை வைத்து அவர் இயக்குவதாக இருந்த பகலவன் படம் நடக்கவே இல்லை. ஒருவேளை அது நடந்திருந்தால் கண்டிப்பாக சீமான் இயக்குநர்கள் வரிசையில் இன்னும் சில படிகள் முன்னணியில் இருந்திருப்பார். அரசியலுக்கு வந்த பிறகு முழுக்க முழுக்க திராவிட கட்சிகளை சரமாரியாக தாக்கிவருகிறார்.

சீமானின் முழக்கம்: மேலும், யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் வந்து வாழலாம். ஆனால் தமிழர்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்துவருகிறார். மேலும் திராவிட கட்சி தலைவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்பது அவரது நிலைப்பாடு. அவரது கொள்கைகளும், முழக்கங்களும் ஆரம்பத்தில் பலருக்கு புதுமையாக தெரிந்தன. உணர்ச்சி எழுச்சியோடு சென்று அந்தக் கட்சியில் சேர்ந்தார்கள். ஆனால் சென்ற கொஞ்ச நாட்களிலேயே இது சரியில்லாத இடம் என்பதை புரிந்து வெளியேறிய சிலரும் உண்டு.
தனித்து போட்டி: இதுவரை ஏகப்பட்ட முறை சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்டுவிட்டார் அவர். ஆனால் ஒருமுறைகூட கூட்டணி வைக்கவில்லை. 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில்கூட தனித்துதான் களமிறங்குகிறது நாம் தமிழர். நடைமுறை ரீதியில் தனித்து நின்று ஆட்சியை பிடிப்பது தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ஒத்துவராத ஒன்று. அதன் காரணமாகத்தான் சீமான் ஆட்சியை பிடிப்பதற்கு கட்சி நடத்தவில்லை. சம்பாதிப்பதற்காகவும், மேடை போட்டு பேசுவதற்கு மட்டும்தான் கட்சியை நடத்துகிறார் என்று விமர்சனங்கள் வந்திருக்கின்றன.
திரைப்படங்களில் சீமான்: அரசியல் பிரவேசம் செய்த பிறகு சில படங்களில் நடித்த அவர்; கடந்த சில வருடங்களாக நடிப்பதை நிறுத்தியிருந்தார். சூழல் இப்படி இருக்க பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து இயக்கியிருக்கும் எல்ஐகே படத்தில் சீமானை முக்கியமான ரோலில் நடிக்க வைத்தார் விக்னேஷ் சிவன். சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில் சீமான் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் சீமான் சில வருடங்களுக்கு முன்புகொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
சீமான் பேட்டி: அந்தப் பேட்டியில் அவரிடம், 'நீங்கள் அரசியலுக்கு வந்துவிட்டீர்கள். சினிமாவில் நடிப்பீர்களா? படம் இயக்குவீர்களா?' என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எனக்கும் பசிக்கும்ல. நான் நடிப்பேன் படம் இயக்கவும் செய்வேன். இரண்டையும் என் இரண்டு கண்களாகத்தான் பார்ப்பேன்" என்றிருந்தார். முன்னதாக, விஜய் பற்றி ஒருமுறை பேசுகையில் கொள்கை ரீதியாக ஒன்று அந்தப் பக்கம் நில்லு இல்லை இந்தப் பக்கம் நில்லு,. நடுவில் நின்று அடிபட்டு சாகாத' என்று கூறியிருந்தார். இப்போது சீமானின் இந்தப் பேட்டியையும் அந்தப் பேச்சையும் ஒப்பிட்டு பலரும் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications















