எனக்கு அவ்ளோ ஆசை.. சான்ஸே இல்லை.. ஜோதிகா பற்றி சிம்பு ஓபனாக பேசிட்டாரே
சென்னை: சிம்பு இப்போது தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து, வெற்றிமாறன் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த மூன்று படங்களின் மீதும் ரசிகர்களுக்கு பெரிய ஆவல் பிறந்திருக்கிறது. கண்டிப்பாக இம்மூன்று படங்களும் அவரது கரியரில் மைல் கல்லாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் எஸ்டிஆர் சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
சிறு வயதிலிருந்தே நடிப்பில் கலக்கிவரும் சிலம்பரசன் இடையில் சில காரணங்களால் திரைத்துறையில் கவனம் செலுத்த முடியாமல் போனது. பிறகு ஒருவழியாக தனது பிரச்னைகளிலிருந்து மீண்ட அவர் ஈஸ்வரன் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து; மாநாடு படத்தில் கம்பேக் கொடுத்தார். பிறகு நடித்த வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல பெயரைத்தான் பெற்றுக்கொடுத்தன.
வின்டேஜ் சிம்பு: இரண்டாவது இன்னிங்ஸில் அவரது நடிப்பையும், எனர்ஜியையும் பார்த்த சிம்புவின் ரசிகர்கள்; எங்கள் எஸ்டிஆர் வின்டேஜ் சிம்புவாக வந்துவிட்டார்; இனி அவரது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று ஆணித்தரமாக சொல்லிவருகிறார்கள். அதற்கேற்றபடிதான் சிம்புவும் தான் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் - கமலுடன்: சிம்பு கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்தார். முதன்முறையாக கமலுடன் அவர் நடித்திருந்ததால் பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. சிம்புவுக்கு கொடுக்கப்பட்டிருந்த ரோலில் அவர் சிறப்பாக செய்திருந்தாலும்; இன்னும் வெயிட்டேஜான ரோலை எஸ்டிஆருக்கு கொடுத்திருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக இருந்தது.

அடுத்தடுத்த படங்கள்: தக் லைஃப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி, பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். இவற்றில் ராம்குமாருடனான படம் ட்ராப்பாகிவிட்டதாக தகவல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தை சிம்புவே தயாரிக்கவும் செய்கிறார். அது பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது.
எதிர்பார்க்காத ட்விஸ்ட்: சூழல் இப்படி இருக்க யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறார் சிம்பு. சமீபத்தில்தான் அது தொடர்பான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியானது. இரண்டு பேரும் இணையும் படம் வடசென்னை உலகத்தில் அமையும் என்றும்; இது வடசென்னை படத்தின் இரண்டாவது பாகம் இல்லை என்பதையும் வெற்றிமாறன் அண்மையில்தான் உறுதிப்படுத்தியிருந்தார். கண்டிப்பாக வெற்றி - சிம்பு கூட்டணி பெரிய ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏற்கனவே வடசென்னை படத்தில் முதலில் சிம்புதான் நடிக்க வேண்டியது என்பது நினைவுகூரத்தக்கது.
ட்ரெண்டாகும் சிம்பு பேட்டி: இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தனியார் சேனல் ஒன்றுக்கு சிம்பு அளித்த பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது. ஜோதிகா குறித்து அந்தப் பேட்டியில் பேசிய அவர், "ஜோதிகாவுடன் நடிக்க வேண்டும் என்று எனக்கு பெரிய ஆசை. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் வரும் பூவ பூவ பூவே பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனை பார்க்கும்போது யார் இவங்க, ஒரு பாடலுக்குள் எத்தனை விதமான நடனம், எத்தனை எக்ஸ்பிரெஷன்ஸ்; சான்ஸே இல்லை" என தோன்றும்" என்றார். சிம்புவும், ஜோதிகாவும் சேர்ந்து மன்மதன், சரவணன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்கள்.


Click it and Unblock the Notifications











