Marimuthu - எதிர்நீச்சல் மாரிமுத்துவுக்கு எஸ்.ஜே.சூர்யா செய்த பெரிய உதவி.. எவ்வளவு பெரிய நட்பு இது!
சென்னை: Ethirneechal Marimuthu (எதிர்நீச்சல் மாரிமுத்து) எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமடைந்த மாரிமுத்துவுக்கு எஸ்.ஜே.சூர்யா செய்த பெரிய உதவி தெரியவந்திருக்கிறது.
தேனி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து அடிப்படையில் ஒரு கட்டட பொறியாளர். ஆனால் கலை மீது இருக்கும் ஆர்வத்தால் சென்னைக்கு வந்துவிட்டார். சென்னை வந்தவர் டீ கடையில் வேலை பார்த்து எப்படியோ வைரமுத்துவிடம் உதவியாளராக சேர்ந்துவிட்டார். அதன் பிறகு இயக்குநர் வசந்த்திடம் உதவி இயக்குநராக சேர்ந்து ஆசை, நேருக்கு நேர் உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார்.

எஸ்.ஜே.சூர்யா நட்பு: வசந்த்திடம் மாரிமுத்து உதவி இயக்குநராக இருந்தபோது எஸ்.ஜே.சூர்யாவும் உதவி இயக்குநராக சேர்ந்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஆரம்பித்தது. அந்தப் பழக்கம் ரொம்பவே நெருங்கிய பழக்கமாக மாறியது. ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு எதுவும் இல்லாத சூழலில் இரண்டு பேரும் ஹோட்டலில் வேலை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநர்: ஒருவழியாக முட்டி மோதி எஸ்.ஜே.சூர்யா வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிவிட்டார். அதில் மாரிமுத்து உதவி இயக்குநராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து சூர்யா இயக்கிய குஷி படத்திலும் மாரிமுத்து பணியாற்றினார். இப்படி இருவருக்குமான நட்பு யாராலும் பிரிக்க முடியாததாக இருந்தது.
இயக்குநர் மாரிமுத்து: அதனையடுத்து மாரிமுத்துவும் கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் கதை ரீதியாக நல்ல பெயரை பெற்றாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை.தொடர்ந்து அவர் இயக்கிய புலிவால் படமும் ஃப்ளாப் ஆனது. இருந்தாலும் சினிமாவை விடாத மாரிமுத்து யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக களமிறங்கினார். அதில் அவரது எதார்த்த நடிப்பை கவனித்த தமிழ் திரையுலகம் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.
எதிர்நீச்சல்: சினிமாவில் கலக்கிவந்த மாரிமுத்து சின்னத்திரையிலும் அடியெடுத்து வைத்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் அதகளம் செய்தார். இனி யார் அந்த கேரக்டரில் நடித்தாலும் மாரிமுத்துவை ரீப்ளேஸ் செய்ய முடியாது என்ற ரீதியில் நடித்தவர் அவர். சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார் மாரிமுத்து. இந்த சூழலில் அவருக்கு ஒரு முறை எஸ்.ஜே.சூர்யா மிகப்பெரிய உதவி ஒன்றை செய்திருக்கிறார்.
என்ன நடந்தது?: அதாவது மாரிமுத்துவுக்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாத காலகட்டம் அது. பொருளாதார ரீதியாக ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். அந்த சமயத்தில் அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. உடனடியாக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். ஆனால் கொஞ்சம் பணம் குறைந்திருக்கிறது. இந்த செய்தியை எஸ்.ஜே.சூர்யாவிடமும் அவர் சொல்லவில்லை.
ஆனால் எப்படியோ தெரிந்துகொண்ட எஸ்.ஜே.சூர்யா நேராக மருத்துவமனைக்கு வந்து மொத்த பில்லைவிட கூடுதலாக இரண்டாயிரம் ரூபாய் கட்டிவிட்டு சென்றாராம். மேலும் மாரிமுத்துவின் மகனையும், மகளையும் தனது குழந்தைகளாகவே நினைப்பாராம் சூர்யா. இதனை மாரிமுத்துவும் அவரது மனைவியும் ஒரு பேட்டியில் பூரிப்புடன் பகிர்ந்துகொண்டனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் நட்புக்கு அடையாளமா இரண்டு பேரும் இருந்திருக்காங்களே என்று சிலாகித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











