கமலும் ஆசைப்பட்டாராம்.. ஆனால் எனக்கு எந்த கவலையுமில்லை.. ஸ்வர்ணமால்யா பட்டுனு இப்படி சொல்லிட்டாங்களே
சென்னை: சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த ஸ்வர்ணமால்யாவை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் மணிரத்னம். அலைபாயுதே படத்துக்கு பிறகு தொடர்ந்து சில படங்களில் நடித்த அவரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்தன. நிலைமை இப்படி இருக்க சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். இந்நிலையில் அவர் தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கும் வீடியோ ஒன்று ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பரதநாட்டிய கலைஞர், சின்னத்திரை தொகுப்பாளர் என்ற முகங்களை கொண்டிருந்தவர் ஸ்வர்ணமால்யா. அவரை சினிமாவுக்கு இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் தன்னுடைய அலைபாயுதே படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் ஸ்வர்ணமால்யாவும் தன்னுடைய அழகான நடிப்பையும் வெளிப்படுத்தினார். அதனைப் பார்த்த பலரும் முதல் படத்தில் நடிப்பது மாதிரியே நடிக்கவில்லையே என்று பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை கொடுத்தார்கள்.

தொடர் வாய்ப்புகள்: சினிமாவில் முதல் படத்தில் தனது திறமையை நிரூபித்துவிட்டால் அடுத்தடுத்து தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்கிற விதிக்கு ஏற்ப ஸ்வர்ணமால்யாவுக்கு வாய்ப்புகள் கிடைத்தன.மொழி, பெரியார், எங்கள் அண்ணா என வரிசையாக நடித்தார். ஹீரோயினாகும் அழகும், திறமையும் அவருக்கு இருந்தாலும் அவர் ஏனோ குணசித்திர கதாபாத்திரங்களிலேயே அதீத கவனத்தை செலுத்தினார். தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்கு தன்னால் முடிந்த அளவு நியாயம் செய்தார்.
குறைந்த வாய்ப்புகள்: ஸ்வர்ணமால்யாவின் நடிப்பை பார்த்த பலரும் கண்டிப்பாக கோலிவுட்டில் இவர் மிகப்பெரிய கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வருவார் என்று ஆரூடம் கூறினார்கள். அப்படித்தான் அவருக்கு வாய்ப்புகளும் வந்துகொண்டிருந்தன. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை வாய்ப்புகள் அப்படியே குறைய ஆரம்பித்தன. அதேசமயம் தனக்கு சினிமாவில் சரியான வழிகாட்டி இல்லை என்று ஒரு பேட்டியில்கூட ஸ்வர்ணமால்யா தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
சர்ச்சைகள்: அதேசமயம் அவரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளும் எழுந்தன. தமிழ்நாட்டின் முக்கியஸ்தர் என்று கூறப்படும் ஒருவருடன் அவருக்கு நெருக்கம் இருந்ததாகவும் அதனை சுற்றி எழுந்த சர்ச்சைதான் ஸ்வர்ணமால்யாவின் வீழ்ச்சிக்கு காரணம் என்றும் 2000களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்தவித பதிலும் அவர் கூறவில்லை. மேலும் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் அவர் தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கவலையில்லை: அவர் அந்த வீடியோவில் பேசுகையில், "எனக்கு எப்போதுமே ஃபேவரைட்டான படம் என்றால் பம்மல் கே சம்பந்தம்தான். கிரேஸி மோகன் எங்களுக்கு குடும்ப நண்பர். அவர் அந்தப் படத்தை எழுதும்போது என்னிடம் வந்து நீ இதில் நடிக்க வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமின்றி நீ நடிக்க வேண்டுமென்று கமலும் ஆசைப்படுகிறார் என்று சொன்னார். ஆனால் நானோ வழக்கம்போல் இல்லை இல்லை எனக்கு தேர்வு இருக்கிறது. படிக்க வேண்டும் என்று கூறி அந்தப் படத்தில் நடிக்கவில்லை. ஆனால் அப்படத்தில் நடிக்கவில்லை என்று எனக்கு எப்போதும் கவலையில்லை. அதேசமயம் அதில் நடித்தவர்கள் எல்லோரும் அட்டகாசமான நடிப்பை வழங்கியிருப்பார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











