T.Rajendar Birthday-சிம்பு பட ஷூட்டிங்கில் அழுத நடிகை..டி.ராஜேந்தர் என்ன செய்தார் தெரியுமா..பிறந்தநாள் ஸ்பெஷல்
சென்னை: T.Rajendar Birthday (டி.ராஜேந்தர் பிறந்தநாள்) சிம்பு படத்தின் ஷூட்டிங்கில் அழுத நடிகையை பார்த்து டி.ராஜேந்தர் செய்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
எனர்ஜி உள்ள மனிதர்கள் இருப்பது அரிதிலும் அரிது. அப்படி இருப்பவர்களை நிச்சயம் போற்றித்தான் ஆக வேண்டும்.ஏனெனில் அவர்களை பார்த்தாலே மற்றவர்களுக்குள் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சொல்லப்போனால் உற்சாகம் இழந்த மனிதர்களுக்கு அவர்கள்தான் உயிருள்ள பேட்டரிகள். அப்படிப்பட்டவர்களில் மிக மிக முக்கியமானவர் டி.ராஜேந்தர்.
ஆரம்பமே அதிரடி: மயிலாடுதுறையை பூர்வீகமாகக் கொண்ட ராஜேந்தர் ஏவிசி கல்லூரியில் எம்.ஏ படித்தவர். தனது வீதியில் நடக்கும் சில நிகழ்ச்சிகளில் தன்னிடம் இருக்கும் சிறிய சிறிய பொருள்களை கொண்டு வாசித்தே அருகில் இருப்பவர்களை ஆட வைத்தவர். அப்படிப்பட்ட மகா திறமைசாலி 1980ஆம் ஆண்டு ஒருதலைராகம் என்ற கதையை எழுதினார். படத்தை தயாரித்து இப்ராஹிம் இயக்கினார்.

ஒருதலை ராகம் வாசித்த டி.ராஜேந்தர்: சராசரி படமாக இருக்கும் என்று நினைத்து திரையரங்குகளுக்கு சென்ற 80ஸ் கிட்ஸுக்கு ஒருதலை ராகம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. காதல் கதைதான் என்றாலும் அதில் இருந்த எமோஷனும், எழுதப்பட்ட வசனங்களும் வேறு ஒரு ஃபீலை கொடுத்தால் அந்தப் படம் மெகா ஹிட்டாந்து. குறிப்பாக டி.ராஜேந்தர் அந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். பாடல்களும் சூப்பர் ஹிட்டடித்ததால் அத்தனையும் தெரிந்த கலைஞனை கோலிவுட் சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்றது.
ரூல் செய்த டி.ராஜேந்தர்: ஒருதலை ராகம் படம் கொடுத்த பெரும் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய வசந்த அழைப்புகள் ஓரளவு வரவேற்பை பெற்றாலும் அடுத்ததாக அவர் இயக்கிய ரயில் பயணங்களில், உயிருள்ள வரை உஷா, தங்கைக்கு ஓர் கீதம், உறவை காத்த கிளி, மைதில் என்னை காதலி, என் தங்கை கல்யாணி உள்ளிட்ட படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அவர் எழுதி இயக்கிய அத்தனை படங்களும் காதலையும், உறவுகளையும் மையப்படுத்தியிருந்ததால் குடும்பங்கள் கொண்டாடும் படைப்பாளியாக மாறினார் டி.ராஜேந்தர்.
இசையமைப்பாளராகவும் ஜொலித்த டி.ராஜேந்தர்: 80களில் இசை என்றாலே இளையராஜாதான் என்ற சூழல் நிலவியது. ஒரு இயக்குநர் இசையமைப்பாளராக மாறுவது அந்தக் காலகட்டத்தில் யாரும் யோசிக்க முடியாததாக இருந்தது. ஆனால் அதை உடைத்துக்காட்டியது பாக்யராஜும், டி.ராஜேந்தரும். இளையராஜாவுடன் மோதல் என்ற காரணம் உள்ளுக்குள் இருந்ததால் பாக்யராஜை இசையமைப்பாளராக மாற்றியது. டி.ராஜேந்தருக்குள் அடிப்படையிலேயே இசை அறிவு இருந்தது.
அதன் காரணமாகத்தான் அவரால் விஜயகாந்த், அர்ஜுன் உள்ளிட்ட பிற நடிகர்களின் படங்களுக்கும் டி.ஆரால் இசையமைக்க முடிந்தது. குறிப்பாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் டி.ராஜேந்தரிடம் கீபோர்டு ப்ளேயராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெறும் ட்ரோல் மெட்டீரியல் மட்டுமல்ல: தமிழில் இரண்டு வரிகள் சேர்ந்தாற்போல் வாசிப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும் சூழலில் டி.ராஜேந்தரோ அடுக்கு மொழியில் விளையாடுபவர். அவரது பல மேடை பேச்சுக்கள் பலரால் ட்ரோலாக்கப்படுகின்றன. ஆனால் அப்படி பேசுவதற்கு மிகப்பெரிய ஆளுமைத்திறன் வேண்டும். அந்தக் கலை யாருக்கும் அவ்வளவு எளிதில் வாய்த்துவிடாது. எனவே அவர் வெறும் ட்ரோல் மெட்டீரியல் மட்டுமல்ல என்பதை பலர் புரிந்துகொள்ள வேண்டும் என்பது கலையின் தேவை.
சிம்புவுக்கு உளியான டி.ஆர்: சிம்பு இன்று பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக திகழ்கிறார் என்றால் அதற்கு முழு காரணம் டி.ராஜேந்தர் மட்டும்தான். சிறிய வயதிலேயே கேமரா முன் அவரை நிறுத்தி, ஐ ஆம் ஏ லிட்டில் ஸ்டார் ஆவேன் நான் சூப்பர் ஸ்டார் என்று பாட வைத்தும், ஆட வைத்தும் மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்து பெரும் கலைஞராக மாற்றிய பெருமை டி.ஆருக்கு சொந்தம்.
சிம்புவை அறிமுகப்படுத்திய ராஜேந்தர்: ஒருகட்டத்தில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் சிம்புவை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் டி.ராஜேந்தர். படத்தை அவரே எழுதி, இயக்கி, இசையமைத்திருந்தார். 2002ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் சார்மி, சீதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் தோல்வியடைந்தாலும் சிம்புவுக்கு ஒரு சிறந்த அறிமுகமாகவே அமைந்தது. இப்படிப்பட்ட சூழலில் அந்த ஷூட்டிங்கின்போது நடந்த சுவாரஸ்ய சம்பவம் தெரிய வந்திருக்கிறது.

டி.ஆர். ஸ்டைல்: டி.ராஜேந்தர் எப்போதும் ஸ்க்ரிப்ட் பேப்பரை கையில் வைத்திருக்கமாட்டாராம். ஸ்பாட்டில் வைத்துதான் வசனங்களை சொல்வாராம். அப்படி ஒருமுறை சீதா நடித்துக்கொண்டிருந்தபோது நான்கு வசனங்களை சொன்னாராம் டி.ஆர். அதை கேட்டு அந்த வசனத்தை டேக்கில் சொல்லிக்கொண்டிருந்தபோது இன்னும் இரண்டு வசனங்களை கூடுதலாக சேர்க்க சொன்னாராம் டி.ஆர். அப்படி அவர் சொல்ல சொல்ல மேற்கொண்டு சில வசனங்களையும் சேர்த்துக்கொண்டே சென்றாராம் டி.ஆர்.
ஷூட்டிங்கில் அழுத நடிகை: இப்படி பல வசனங்கள் சேர்ந்துகொண்டதை பார்த்த சீதா இதை எப்படி பேசப்போகிறோம் என்று பயந்தாராம். அதை உணர்ந்துகொண்ட டி.ஆர்; சீதாவை கூப்பிட்டு ஒரு வசனத்தையும் தொடர்புப்படுத்தி மாற்றிக்கொடுத்து பேச வைத்தாராம். அது சீதாவுக்கு எளிமையாக இருந்ததாம். அதேபோல், ஒரு சீனில் சீதா அழுதுகொண்டே இருக்க வேண்டுமாம். சீதாவும் அழுதுகொண்டே இருக்க என்ன இன்னும் கட் சொல்லவே இல்லை என சீதா ராஜேந்தரை பார்க்க; கேமராவிடம் இருந்த டி.ஆரும் அழுதுகொண்டே இருந்தாராம்.
இதனை சீதா சமீபத்தில் அளித்த பேட்டியில், ராஜேந்தர் சார் அவ்வளவு இன்வால்வ்மெண்ட்டோடு இருப்பார் என கூறினார். அந்த இன்வால்வ்மெண்ட் கலைஞன் டி.ராஜேந்தருக்கு தமிழ் பில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











