Ajith - விஜய்யும் அஜித்தும் இணைந்து நடிக்காததற்கு இதுதான் காரணமா?.. ஏகே கொடுத்த விளக்கம்
சென்னை: விஜய்யும், அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர். அதன் பிறகு இரண்டு பேருமே சேர்ந்து நடிக்கவில்லை. இருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்களின் விருப்பமாகவே இருக்கிறது. ஆனால் இரண்டு பேருமே அதை ஏனோ சில காரணங்களால் தவிர்த்துவருகின்றனர். இந்த சூழலில் இரண்டு பேரும் ஏன் சேர்ந்து நடிப்பதில்லை என்று ஒரு விஷயம் தெரியவந்திருக்கிறது.
இந்திய சினிமாவில் அஜித்தும், விஜய்யும் டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கின்றனர். இருவரும் ஒரேகாலகட்டத்தில் நடிக்க வந்தவர்கள். அதேபோல் தங்களது ஆரம்பகாலத்தில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக போராடியவர்கள். விஜய் உருவ கேலியை சந்தித்தார் என்றால்; ஒழுங்காக தமிழே பேசவரவில்லை, எமோஷன் காட்சிகளில் நடிக்க தெரியவில்லை, நடனம் தெரியவில்லை போன்ற விமர்சனங்களையும் கேலிகளையும் அஜித் சந்தித்தார்.

ராஜாவின் பார்வையிலே: இரண்டு பேரும் இப்போது இருக்கும் இடம் சாதாரணமாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. அயராது உழைத்து, தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டனர். அதன் பிரதிபலனாக இருவருமே இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றனர். 90களில் நடிக்க வந்த அஜித்தும், விஜய்யும் ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு பிறகு அவர்கள் இணைந்து நடிக்கவே இல்லை.
நேருக்கு நேர்: ராஜாவின் பார்வையிலே படத்துக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடித்திருக்க வேண்டிய படம் நேருக்கு நேர். வசந்த் இயக்கிய அந்தப் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் கமிட்டானது அஜித்தான். சில நாள்கள் ஷூட்டிங்கும் சென்ற ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார். ஆனால் சம்பள விவகாரத்தில் அவருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் முட்டிக்கொண்டதாகவும் அதனால்தான் அஜித் நேருக்கு நேர் படத்திலிருந்து விலகிவிட்டார் என கூறப்படுகிறது.
அஜித் Vs விஜய்: அதற்கு பிறகு இருவரையும் சேர்த்து படம் எடுக்க யாருமே முயற்சிக்கக்கூடவில்லை. அதேசமயம் இருவரும் தங்களது பாதையில் சிறப்பாக செல்ல இருவருமே உயர்ந்த இடத்துக்கு சென்றனர். இதனால் ரஜினி - கமல் என்பது போல் அஜித் - விஜய் என உருவானது. இருவருக்குமே ரசிகர்கள் பெருக இரண்டு பேரின் படமும் ஒரே நாளில் ரிலீஸானால் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரசிகர்களுக்குள்ளும் மோதல் ஆரம்பித்தது. கடைசியாக விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் வெளியானது. இதில் துணிவு படம் வெற்றி பெற்றதாகவே பலரும் கூறினார்கள்.
ஆசைப்பட்ட விஜய்: இரண்டு பேருக்கும் போட்டி என்ற நிலைதான் இருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளுக்குள் ஆசை இருப்பதாகவே தெரிகிறது. அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தை பார்த்துவிட்டுக்கூட வெங்கட் பிரபுவிடம் பேசிய விஜய்; என்னிடம் சொல்லியிருந்தால் அர்ஜுன் கேரக்டரை நானே நடித்திருப்பேன் என சொல்லியிருக்கிறார். இதனை வெங்கட் பிரபுவே ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
அஜித் சொன்ன பதில்: இந்நிலையில் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்காதது குறித்து அஜித் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதாவது அவர் அந்தப் பேட்டியில், "நாங்கள் இரண்டு பேருமே எதிரிகள் இல்லை. எல்லா துறைகளில் இருப்பவர்கள் போல் எங்களுக்குள்ளும் போட்டி இருக்கிறது. ஆனால் நாங்கள் எதிரிகள் எல்லாம் இல்லை. நானும் விஜய்யும் சேர்ந்து நடிக்க ஆசைதான். அதேசமயம் விஜய் தனியாக ஒரு படம் நடித்தால் அந்தப் படத்தால் 1000 குடும்பங்கள் வாழும். நான் தனியாக ஒரு படம் நடித்தால் அந்தப் படத்தால் 1000 குடும்பங்கள் வாழும். ஆனால் நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படம் நடித்தா அந்த எண்ணிக்கை குறையும்" என்றார்.


Click it and Unblock the Notifications











