Vijay - க்ளைமேக்ஸை மாத்துங்க.. வளர்த்துவிட்ட இயக்குநருடனேயே சண்டைக்கு போனாரா விஜய்?.. இது வேற நடந்திருக்கா
சென்னை: விஜய்தான் தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் நடிகர். அவரது படங்கள் வரிசையாக நூறு கோடி ரூபாயை வசூலித்துவருகிறது. தற்போது அவர் GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு இயக்கிவரும் அந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மேலும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கி 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையும் சந்திக்கவிருக்கிறார் விஜய். அதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
தந்தையின் துணையோடு சினிமாவுக்குள் வந்தவர் என்ற பெயரை எடுத்தாலும் தனது திறமை, உழைப்பால் மட்டுமே பெரிய இடத்துக்கு நகர்ந்தவர் விஜய். இளைய தளபதியாக வளர்ந்து தற்போது தளபதியாக உயர்ந்து நிற்கும் விஜய் நூறு கோடிகளில் வியாபாரம் உடைய நடிகர். அவரது படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போடுகின்றன. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய மூன்று படங்களும் நூறு கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

GOAT: அவர் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள். விறுவிறுப்பாக நடந்த ஷூட்டிங் பவதாரிணியின் உயிரிழப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது. அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழு ரஷ்யா செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.
கடைசி படம்: இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்காத தவெக; 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்குகிறது. எனவே இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று அறிவித்திருக்கிறார் விஜய். அநேகமாக அந்தப் படத்தை வெற்றிமாறனோ இல்லை தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரமோ இயக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கடைசி படத்தை தரமான படமாக கொடுக்க முடிவெடுத்திருக்கிறார் விஜய்.
ஸ்மார்ட் ஹீரோ: விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பார் என்ற செய்தி அவரது ரசிகர்களை சோகமடைய செய்திருக்கிறது. விஜய் போன்ற ஒரு ஹீரோ பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் திரைத்துறையினரின் கருத்தாக இருக்கிறது. விஜய் கடந்த பல வருடங்களாகவே கமர்ஷியல் பாதையிலேயே சென்றுகொண்டிருக்கிறார். அதற்கு காரணம் அவரை சுற்றி நடக்கும் வியாபாரம்தான். ஒரு ஃபீல் குட் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரே ஆசைப்பட்டாலும் அவரது ரசிகர்கள் அதனை விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
ஆரம்பகாலம் அப்படி இல்லை: ஆனால் விஜய்யின் ஆரம்பகாலம் அப்படி இல்லை. அவர் நடித்த பல படங்கள் ஃபீல் குட் படங்களாக அமைந்தவை. பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரியமானவளே, நினைத்தேன் வந்தாய் என அந்தப் பட்டியல் நீளும். முக்கியமாக பூவே உனக்காக திரைப்படம்தான் விஜய்க்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தை இயக்கியது விக்ரமன். இந்தச் சூழலில் விக்ரமனுக்கும், விஜய்க்கும் நடந்த கருத்து வேறுபாடு குறித்து தெரியவந்திருக்கிறது.
உன்னை நினைத்து: அதாவது பூவே உனக்காக வெற்றிக்கு பிறகு மீண்டும் விஜய்யை இயக்க திட்டமிட்ட விக்ரமன் உன்னை நினைத்து படத்தை விஜய்யை வைத்து ஆரம்பித்திருக்கிறார். சில நாட்கள் விஜய்யும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருந்திருக்கிறார். ஆனால் சில காட்சிகளையும், க்ளைமேக்ஸையும் மாற்றும்படி விக்ரமனிடம் சொன்னாராம் விஜய். விக்ரமனோ அதற்கு சுத்தமாக உடன்படவில்லையாம். இதனால் கோபமடைந்த விஜய் அந்தப் படத்திலிருந்து வெளியேறிவிட்டாராம். பிறகு விஜய் ரோலில் சூர்யா நடித்து அந்தப் படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











