Vijayakanth - அப்பா சொன்ன வார்த்தை.. சபதம் எடுத்த விஜயகாந்த்..உதவிகள் செய்ததற்கு பின் இப்படி ஒரு கதையா?
சென்னை: நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கொரோனா தொற்று ஏற்பட்ட சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்தது. அவரது உயிரிழப்பு ஒட்டிமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் தள்ளியிருக்கிறது. இந்த சூழலில் அவரது உதவும் குணத்துக்கு சான்றாக ஒரு விஷயத்தை பார்க்கலாம்.
மதுரையில் பிறந்த விஜயகாந்த் சினிமா ஆசையோடு சென்னைக்கு புறப்பட்டு வந்தவர். அவரது குடும்பம் ரொம்பவே வசதியான குடும்பம். பொதுவாக வசதியான குடும்பத்தில் பிள்ளைகள் கஷ்டப்படுவதற்கு இஷ்டப்படமாட்டார்கள். ஆனால் விஜயகாந்த் அப்படி அல்ல. சினிமாவில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியோடும், தனது திறமையின் துணையோடும் சென்னைக்கு வந்து ரொம்பவே கஷ்டப்பட்டவர். ஒருவழியாக அவருக்கு இனிக்கும் இளமை படத்தின் மூலம் வாய்ப்பும் கிடைத்துவிட்டது.

முன்னணி ஹீரோ: சினிமா கொடுக்கும் வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டால் அது கைவிடாது என்பதற்கு விஜயகாந்த் உதாரணம். தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க தனது நடிப்பு, உடல்மொழி, ஸ்டண்ட் போன்றவைகளால் பிரபலமடைந்தார். ஒருகட்டத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு டஃப் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிராமத்து பக்கம் ரஜினி, கமல் ஹாசனை ஓவர் டேக் செய்தார் விஜயகாந்த் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அவருக்கு வெறிப்பிடித்த ரசிகர்கள் இருந்தார்கள்.
செம நட்பு: அதேபோல் விஜயகாந்த்துக்கு நிழலாக இருந்தவர் இப்ராஹிம் ராவுத்தர். அவருக்காக திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். விஜயகாந்த்தும் இப்ராஹிமுக்கு எல்லாமுமாக இருந்தவர். இப்ராஹிம் என்ன சொல்கிறாரோ அதுதான் விஜயகாந்த்தின் வேத வாக்காக இருந்தது. அவர்கள் இரண்டு பேரும்தான் தமிழ் சினிமாவில் இன்றுவரை நட்புக்கு இலக்கணமாக இருப்பவர்கள். இருக்கப்போகிறவர்கள்.
உதவும் குணம்: விஜயகாந்த் வெறும் நடிப்போடு மட்டுமின்றி பல உதவிகளை செய்திருக்கிறார். அதனை பலரும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறார்கள். அவர் சினிமாவுக்குள் வந்த பிறகுதான் உதவி செய்தார் என்று இல்லை. அவர் சிறு வயதாக இருந்தபோது உதவிகளை செய்திருக்கிறார் என்பது அவரை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். அப்படி ஒரு விஷயத்தை இதில் பார்க்கலாம்.
என்ன நடந்தது?: அதாவது விஜயகாந்த்துக்கு அப்போது 14 அல்லது 15 வயது இருக்கும். அவரது தந்தை அவருக்கு ஆசை ஆசையாக தங்க சங்கிலி ஒன்றை போட்டுவிட்டிருக்கிறார். அந்த சமயத்தில் தனது மில்லில் வேலை பார்க்கும் ஒருவரின் மகன் அங்கு வந்திருக்கிறார். வந்த அந்த சிறுவனும் மில்லில் வேலைகளை கவனிக்க தொடங்கியிருக்கிறார். இதனை பார்த்த விஜயகாந்த் அந்த சிறுவனின் தந்தையிடம் ஏன் இவர் படிக்க போகவில்லையா என கேட்டிருக்கிறார்.
உதவிய கேப்டன்: அதற்கு அவரோ இல்லை அந்த அளவுக்கு வசதி இல்லை என சொல்ல; உடனடியாக விஜயகாந்த் தனது தங்க சங்கிலியை கழற்றி அவரிடம் கொடுத்து இதை அடகு வைத்தாவது அவரை படிக்க வையுங்கள் என்று கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து விஜயகாந்த்தின் தந்தை விஜயகாந்த்தின் கழுத்தை கவனிக்க அதில் தங்க சங்கிலி இல்லை.
அடித்த அப்பா: உடனே எங்கே சங்கிலி என கேட்டிருக்கிறார். அதற்கு விஜயகாந்த் சமாளித்திருக்கிறார். ஆனால் விடாத அப்பா பலமாக அடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் வலி தாங்க முடியாத விஜயகாந்த், உண்மையில் என்ன நடந்தது என்பதை சொல்லியிருக்கிறார். அதற்கு விஜயகாந்த்தின் அப்பாவோ, 'நீ உதவு. அது நல்ல குணம்தான். ஆனால் உன் சம்பாத்தியத்தில் வரும் காசை வைத்து உதவு. அடுத்தவர் காசில் உதவாதே' என்று சொல்லியிருக்கிறார்.
இதனையடுத்து விஜயகாந்த் தனது தந்தையிடம், இனி நான் எப்போது சம்பாதிக்கிறேனோ அப்போதுதான் தங்கத்தை அணிவேன்; அதேபோல் எவ்வளவு சம்பாதித்தாலும் உதவுவேன் என சபதம் எடுத்தாராம். சொன்னபடியே தனது முதல் சம்பாத்தியம்வரை தங்க சங்கிலியை அணியவே இல்லையாம். மேலும் சம்பாதித்த பிறகு தந்தையிடம் சொன்னது மாதிரியே உதவிகளையும் நிறைய செய்ய ஆரம்பித்தாராம்.. மிஸ் யூ விஜயகாந்த்


Click it and Unblock the Notifications











