Karthik - கார்த்திக்கிற்கு நடிகர் வாய்ப்பு கிடைத்த கதை.. எல்லாத்துக்கும் காரணம் ஒரு விபத்து தான்
சென்னை: நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் கார்த்திக். பிரபல நடிகரான முத்துராமனின் மகனான அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். 80களில் யுவதிகளின் கனவு நாயகனாக வலம் வந்த அவருக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்த கதையை குறித்து இதில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த முத்துராமனுக்கு மகனாக பிறந்தவர் கார்த்திக். தந்தை பெரிய நடிகர் என்பதால் அவருக்கும் சினிமா மீது இயல்பாகவே ஆசை வந்துவிட்டது. நியூ காலேஜில் கல்லூரி படிப்பை முடித்த சிறு வயதிலிருந்தே சில்வர் ஸ்பூன் குழந்தையாக வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் அறிமுகம்: சினிமா மீது ஆர்வம் இருந்த கார்த்திக்கை இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். 1981ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில்தான் ராதாவும் நடிகையாக அறிமுகமானார் என்பது நினைவுகூரத்தக்கது. முதல் படத்திலேயே கார்த்திக் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக சிறந்த புதுமுக நடிகருக்கான தமிழ்நாடு மாநில அரசை விருதை அசத்தினார் கார்த்திக்.
தொடர் ஹிட்டுகள்: முதல் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு கார்த்திக்குக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமைந்தன. அதன்படி அவர் நடித்த அதிசய பிறவிகள், ஆகாய கங்கை, ரஜினியுடன் நடித்த நல்லவனுக்கு நலல்வன், நல்லதம்பி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதன் காரணமாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கும் அவர் வந்துவிட்டார். மேலும் சிறந்த நடிகர் என்ற பெயரையும் பெற்றார்.
மணி கூட்டணி: கார்த்திக்கின் கரியரில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மௌன ராகமும், அக்னி நட்சத்திரமும் ஆகும். மௌன ராகத்தில் கொஞ்ச நேரம் மட்டுமே நடித்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக ஸ்கோர் செய்திருப்பார் கார்த்திக். அதிலும் மிஸ்டர் சந்திரமௌலி என்று பூர்ணம் விஸ்வநாதனை அவர் கூப்பிடும் காட்சி எப்போதும் அழிக்க முடியாத க்ளாசிக். அதேபோல் அக்னி நட்சத்திரம் படத்திலும் தான் இரண்டாம் தாரத்தின் மகன் என்ற உணர்வில் அவர் நடித்திருந்த நடிப்பு பெரும் அப்ளாஸை அள்ளியது.
90களிலும் கலக்கிய கார்த்திக்: 80களில் மட்டுமின்றி 90களிலும் கலக்கினார் கார்த்திக். சுந்தர் சி இயக்கத்தில் அவர் நடித்த மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டாகின. மேலும் அந்தப் படத்தில் கவுண்டமணியுடன் கார்த்திக் அடித்த லூட்டிகள் இப்போதும் சிரிப்பு வரவைக்கக்கூடியவை. சத்யராஜுக்கு பிறகு கவுண்டமணியுடன் பக்காவாக செட் ஆன நடிகர் என்றால் அது கார்த்திக்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அவர் அரசியல் கட்சியையும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பு கிடைத்த கதை: தற்போது நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவருக்கு முதல் படமான அலைகள் ஓய்வதில்லைக்கு வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை ரீவைண்ட்டில் பார்க்கலாம். அதாவது, அலைகள் ஓய்வதில்லை படத்துக்கு கதாநாயகன் கிடைக்காமல் தேடி அலைந்திருக்கிறார். அதேசமயம் ஹீரோயினாக ராதாவை கமிட் செய்தார். ராயப்பேட்டை பள்ளியில் படித்த மாணவன் ஒருவரை கதாநாயகனாக பாரதிராஜா ஃபிக்ஸ் செய்துவிட்டார்.
செட் ஆகவில்லை: ஆனால் சில நாட்களில் பாரதிராஜாவோ; அந்த மாணவன் செட் ஆகமாட்டார் என்று நினைத்து நீக்கிவிட்டாராம். அந்த நேரத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றபோது ஒரு மாணவர் மீது பாரதிராஜா காரை மோதிவிட்டாராம். இதனால் பதறிப்போன அவர் அந்த மாணவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக சென்றிருக்கிறார்.
கார்த்தி இன்ட்ரோ: மருத்துவமனைக்கு முத்துராமனின் வீட்டு வழியாக சென்றாராம் பாரதிராஜா. அப்போது கார்த்திக் வீட்டுக்கு வெளியே பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருக்கிறார். அதனை கவனித்த பாரதிராஜா அந்த இளைஞர் யார் என்னவென்று விசாரிக்க முத்துராமனின் மகன் என்று தெரியவந்திருக்கிறது. உடனடியாக முத்துராமனை அணுகி கார்த்திக்கை நடிக்க வைக்க அனுமதி வாங்கிவிட்டாராம். இந்த தகவலை பத்திரிகையாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் ஒரு வீடியோவில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











