ராஜகுமாரனை காதலித்தது இதனால்தானாம்.. தேவயானி அவ்ளோ அழகா சொல்லிருக்காங்க பாருங்க
சென்னை: நடிகை தேவயானி 90களில் திரைத்துறையில் அறிமுகமாகி டாப் 10 நடிகைகளில் ஒருவராக இருந்தவர். அஜித், விஜய், கமல், சரத்குமார் உள்ளிட்டோருடன் நடித்த அவர்; இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தக் காதலுக்கு தேவயானியின் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. அவரோ எதை பற்றியும் கவலைப்படாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இந்நிலையில் கணவர் மீது எப்படி காதல் வந்தது என தேவயானி பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கிளாமர் காண்பிக்காத நடிகைகளில் ஒருவர் தேவயானி. காதல் கோட்டை திரைப்படம் அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. அந்தப் படத்தின் வெற்றி கொஞ்ச நாட்களுக்கு ரசிகளை கமலி, கமலி என சுற்ற வைத்தது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு நினைத்தேன் வந்தாய், தொடரும், பாட்டாளி, சூர்ய வம்சம், மூவேந்தர், பஞ்ச தந்திரம், அப்பு என பல படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் ஒன்று சூப்பர் ஹிட் அல்லது விமர்சன ரீதியாக நல்ல படங்கள். இதன் காரணமாக டாப் 10 நடிகைகளில் ஒருவராக மாறினார்.

நல்ல நடிகை: தேவயானி அழகை மட்டும் கொண்டிருக்காமல் அற்புதமாக நடிக்கவும் செய்பவர். கணவருக்கு உறுதுணையாக இருக்கும் சூர்ய வம்சம், கணவரை சந்தேகப்படும் தொடரும் என இரண்டு வேரியேஷன்களை அசால்ட்டாக காண்பித்திருந்தார். அதேபோல் சூர்ய வம்சத்தில் சரத்குமார் காலில் விழும் காட்சி, 'இந்த உலகம் எவ்வளவு வேகமாக சுத்துது பார்த்தீங்களா' என அவர் பேசிய வசனமும் சோஷியல் மீடியாவில் இன்னமும் மீம் மெட்டீரியலாக சுற்றிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ராஜகுமாரனுடன் திருமணம்: இதற்கிடையே அவர் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்தார். அவர் இயக்கத்தில் நடித்த முதல் படமான நீ வருவாய் என படத்திலேயே காதல் மலர்ந்துவிட்டது. விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் வளர்ந்து பல பிரச்னைகளுக்கு மத்தியில் திருமணத்தில் முடிந்தது. அவர்களுக்கு இரண்டு மகள்கள். திருமணத்துக்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். 3 பிஹெச்கே படத்தில்கூட அந்த மாதிரியான கேரக்டரைத்தான் ஏற்றிருந்தார்.
மகளும் செலிபிரிட்டி: இவர்களுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அவர்களில் இனியா நன்றாக பாடக்கூடியவர். தனியார் சேனலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடி அசத்திய அவர்; ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார். அதேபோல் தனது மகளுக்கு உங்கள் இசையில் பாட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என இசையமைப்பாளர் சாய் அபயங்கரிடம் தேவயானி சமீபத்தில் ஒரு விழாவில் கேட்டிருந்தார். இது ஒருபக்கம் இருக்க அவரது கணவர் சமீபமாக கொடுக்கும் பேட்டிகள் சர்ச்சையாகின. அவற்றுக்கெல்லாம் முழு சப்போர்ட்டாக இருந்தார்.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் தேவயானி ராஜகுமாரனுக்கு கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. கணவர் மீது காதல் வந்ததற்கான காரணம் குறித்து பேசிய அவர், "உங்கள் (ராஜகுமாரன்) மீது எனக்கு காதல் வந்ததற்கான காரணம் தெரியவில்லை. ஆனால், நீங்கள் எல்லோரிடமும் மரியாதையாக பேசுவீர்கள். மரியாதையான ஆள். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதேபோல் உங்களுக்கு குடி, சிகரெட் போன்ற எந்த பழக்கமும் இல்லை. அதையெல்லாம் நான் சுத்தமாக வெறுப்பவள். அது இல்லாததும் எனக்கு பிடித்திருந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications
