உங்களுக்கு பிடிக்கலைனு மாத்த முடியாது.. விஜய்யிடம் ஓபனாக சொன்ன விக்ரமன்.. நெத்தியடி பாஸ்
சென்னை: தமிழ் சினிமாவில் 90களில் மிக பிரபலமான இயக்குநராக வலம் வந்தவர் விக்ரமன். புது வசந்தம், சூர்யவம்சம், வானத்தைப் போல, பூவே உனக்காக என ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அவர் படத்தில் நடித்துவிட்டால் போதும் ஃபேமிலி ஆடியன்ஸை ஈஸியாக பிடித்துவிடலாம் என்பதால் அனைத்து ஹீரோக்களுமே அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டார்கள். தொடர்ச்சியாக ஹிட்டுகளை கொடுத்த அவர்; ஒருகட்டத்தில் மார்க்கெட் இழந்தார். இப்போது சினிமாவிலிருந்து விலகி தனது குடும்பத்துடன் நிம்மதியாக இருக்கும் அவர்; இன்று தனது 62ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் விக்ரமன். தென்காசி மாவட்டம் பண்பொழிலை பூர்வீகமாகக் கொண்ட அவர்; பார்த்திபனிடம் சினிமா தொடர்பான வேலைகளை கற்றுக்கொண்டு புது வசந்தம் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அப்படத்தில் முரளி, சித்தாரா, சார்லி, ராஜா, ஆனந்த் பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தார். படம் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது.

வரிசையாக ஹிட்டுகள்: முதல் படத்தின் வெற்றி அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. அந்தவகையில் அவர் இயக்கிய கோகுலம், புதிய மன்னர்கள், பூவே உனக்காக, சூர்ய வம்சம், வானத்தைப் போல, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்என அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அவரது படங்களின் ஸ்பெஷாலிட்டியே வல்கரோ, வயலன்ஸோ இரண்டுமே இருக்காது. அவ்வளவு இயல்பாகவும், எதார்த்தமாகவும் அவரது படங்கள் அமைந்தன. இதனால் அவரது இயக்கத்தில் நடிக்க அத்தனை ஹீரோக்களும் ஆசைப்பட்டார்கள்.
விஜய்க்கு வாழ்க்கை: விஜய் இப்போது மிகப்பெரிய ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். ஆனால் அவருக்கு முதல் வெற்றி படம் என்றால் அது பூவே உனக்காக திரைப்படம்தான். அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரமும், அதை அவர் ப்ரெசண்ட் செய்திருந்த விதமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்போதிருந்துதான் விஜய்க்குள்ளும் ஒரு நடிகர் இருக்கிறார் என்பதை இந்த தமிழ்நாடு புரிந்துகொண்டது. அதேசமயம் முதலில் அப்படத்தில் நடிக்கவிருந்தது பிரசாந்த்தான். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேற; விஜய்யை வைத்து இயக்கி ஹிட்டாக்கினார் விக்ரமன்.
தோல்வியால் ஒதுங்கிய விக்ரமன்: 90களில் விக்ரமன் மிக பிரபலமான இயக்குநர். 2000களின் ஆரம்பத்திலும் அவர் உன்னை நினைத்து, பிரியமான தோழி என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார். ஆனால் அடுத்து இயக்கிய மரியாதை உள்ளிட்ட படங்கள் எல்லாம் படுத்துவிட்டன. இனிமேலும் தனது மார்க்கெட் சினிமாவில் இருக்காது என்பதை புரிந்துகொண்டு டீசன்ட்டாக சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். அவர் கடைசியாக 2014ஆம் ஆண்டு நினைத்தது யாரோ என்ற படத்தை இயக்கினார்.
குடும்பத்துடன் நிம்மதியாக விக்ரமன்: அதற்கு பிறகு அவர் இயக்கவில்லை. சினிமாவிலிருந்து மொத்தமாக ஒதுங்கிய அவர், தனது மனைவி மற்றும் மகனோடு வசித்துவருகிறார். மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும்; பக்க பலமாக இருக்கிறார் விக்ரமன். அதேபோல் அவரது மகன் விஜய் கனிஷ்கா ஹிட் லிஸ்ட் என்ற படத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு நடித்திருந்தார். அதுவும் சரியாக போகவில்லை. விக்ரமன் இன்று தனது 62ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.
விஜய்யிடம் ஓபன் டாக்: இந்நிலையில் சூர்யா - லைலா நடித்த உன்னை நினைத்து படத்தில் முதலில் விஜய்தான் நடித்திருக்க வேண்டியது. அவரை வைத்து, 'என்னை தாலாட்டும் சங்கீதம்' பாடலையும் ஷூட் செய்திருக்கிறார். ஆனால் படத்தின் க்ளைமேக்ஸில் விஜய்க்கு உடன்பாடு இல்லை. எனவே விக்ரமனிடம் சென்று அந்த க்ளைமேக்ஸை மட்டும் மாற்ற முடியுமா என கேட்டிருக்கிறார்.
அதற்கு விக்ரமனோ, 'உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக மாற்ற முடியாது. அப்படியே மாற்றினாலும் ஈடுபாடு இல்லாமல்தான் இந்தப் படத்தில் நான் வேலை செய்வேன்' என சொல்ல; சரி நான் விலகுகிறேன் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம் என கூறி விலகிவிட்டாராம் விஜய். விக்ரமனும் விஜய் தரப்பு நியாயத்தை புரிந்துகொண்டு டீசண்ட்டாக அனுப்பி வைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்புதான் விஜய் நடித்திருந்த என்னை தாலாட்டும் சங்கீதம் பாடலின் வீடியோவை விக்ரமன் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications















