தமிழ் சினிமாவின் தங்க புதையல்.. சினிமாவுக்கு வரலைன்னா கமல் என்ன வேலை செய்திருப்பார் தெரியுமா?
சென்னை: 4 வயதில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய கலைப்பயணம் இன்னமும் ஓடிக்கொண்டே இருக்கிறது. தமிழ் சினிமாவில் பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தவர் கமல்தான். அதுவும் தனது சொந்த காசை போட்டு பல புதிய முயற்சிகளை செய்து பார்த்துள்ளார்.
சிறுவனாக சில படங்களில் நடித்து விட்டு சினிமாவிலிருந்து ஒதுங்கினார் கமல். அதன்பின் டீன் ஏஜ் பையனாக மாறியதும் எந்த பக்கம் போவது? என்ன செய்வது என தெரியவில்லை. இறுதியில் சினிமாவில் ஏதேனும் ஒரு வேலை செய்ய வேண்டும் என முடிவெடுத்தார். அப்போது பிரபலமாக இருந்த ஒரு நடன இயக்குனரிடம் உதவியாளராக சேர்ந்தார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா போன்ற முக்கிய நடிகர்களுக்கு நடனம் சொல்லி கொடுக்கும் வாய்ப்பு அவருக்கு அப்போதுதான் கிடைத்தது. ஆனால், அவர் அந்த வேலை செய்வதை பார்த்து கோபப்பட்ட நடிகர் ஜெமினி கணேசன் கமலை பாலச்சந்தரிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்து 'இவனை நடிகனாக மாற்றுங்கள்' என சொன்னார்.
எல்லாமே சினிமா தான்: அதன் பின்னரே பாலச்சந்தர் கமலை தனது படங்களில் நடிக்க வைக்க துவங்கினார். அப்போதும், இயக்குனராகும் ஆசையே கமலுக்கு இருந்தது. ஆனால், 'அதை அப்புறம் செய்யலாம் நீ முதலில் நடி' என சொல்லி கமலை வளர்த்து மேலே தூக்கிவிட்டார் பாலச்சந்தர். கமலுக்கு எண்ணம், செயல், ஆசை, விருப்பம், கனவு, சுவாசம் என எல்லாமே சினிமாதான். தமிழ் சினிமாவை பல படிகள் உயர்த்தி மேலே கொண்டு போக வேண்டும் என்கிற கலை தாகம் அவரிடம் எப்போதும் இருக்கிறது.

சினிமாவிலேயே முதலீடு: அதனால்தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவிலேயே அவர் முதலீடு செய்கிறார். விக்ரம் ஹிட்டுக்கு பின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறைய படங்களை தயாரிக்க துவங்கிவிட்டது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து 300 கோடிக்கும் மேல் வசூலை அள்ளிய அமரன் படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரித்திருந்தது.
இந்த வேலையை செய்திருப்பேன்: ஒருமுறை பேட்டி ஒன்றில் பேசிய கமல் 'ஒருவேளை நான் சினிமாவுக்கு வந்து நடிகராக ஆகாமல் இருந்திருந்தால் ஒரு மாதத்திற்கு 15 திரைப்படங்களை பார்க்கும் ஒரு ரசிகனாக இருந்திருப்பேன். ஒருமுறை கால் உடைந்து வீட்டில் இருந்தபோது அந்த மாதத்தில் மட்டும் 90 திரைப்படங்களை பார்த்தேன்' என சொல்லி இருக்கிறார். இதிலிருந்தே கமலுக்கு சினிமா மீது எவ்வளவு ஆர்வம் என்பது நமக்கு புரியவரும்.

தங்க புதையல்: இந்த வயதிலும் அமெரிக்காவிற்கு சென்று ஏஐ படித்து வரக் காரணமே அதை வைத்து சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்கிற எத்தனிப்பு தான் என்கின்றனர். கடந்த ஆண்டு கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் சரியாக போகவில்லை என்றாலும் கல்கி 2898 ஏடி படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பான் இந்தியா அளவில் பெற்றுத் தந்தது. இந்த ஆண்டு வெளியாக காத்திருக்கும் தக் லைஃப் திரைப்படத்தை ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியன் 3 படமும் தடைகளை தாண்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்கி 2 படத்துக்காக இந்திய சினிமாவே காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் சினிமாவின் பொக்கிஷம். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த தங்க புதையல் என்பதை ரசிகர்கள் ஒருபோதும் மறந்துவிட வேண்டாம்.


Click it and Unblock the Notifications











