எங்க அப்பா மாதிரி உங்களால முடியாது.. கமலுக்காக சிவாஜியிடம் சண்டையிட்ட ஸ்ருதி ஹாசன்
சென்னை: கமல் ஹாசன் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அப்படத்தை மணிரத்னம் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் கமல். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. நிச்சயமாக இந்த இரண்டு படங்களும் இந்தியன் 2 கொடுத்த அடிக்கு மருந்தாக இருக்கும் என்று கமலின் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் அவருக்காக மகள் ஸ்ருதி ஹாசன் சிவாஜியிடம் சண்டையிட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.
இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் கமல் ஹாசன். சிறு வயது முதலே சினிமாவில் இருக்கும் அவரை பலரும் தங்களது ரோல் மாடலாக ஏற்றிருக்கிறார்கள். குறிப்பாக தன்னுடைய படங்களில் ஏதேனும் ஒரு புதுமையை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார். இதன் காரணமாகவும் அவரை உலக நாயகன் என்று அழைப்பார்கள். அந்த புதுமையான முயற்சிக்கு வரவேற்பு கிடைக்காவிட்டாலும் கமல் அசருபவர் கிடையாது. மேற்கொண்டு மேற்கொண்டு அதனை செய்துகொண்டே இருப்பார்.

அரசியலில்: சினிமாவில் தீவிரமாக இயங்கிவந்த கமல் ஹாசன் திடீரென சில வருடங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். கண்டிப்பாக அரசியலிலும் பெரும் தாக்கத்தை அவர் உருவாக்குவார் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அந்தத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக மீண்டும் சினிமாவுக்கு வந்த அவர் விக்ரம் படத்தில் தரமான கம்பேக் கொடுத்தார். அப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்வரை வசூலித்தது.
தக் லைஃப்: விக்ரம் படத்துக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்தார். அந்தப் படம் கடுமையான தோல்வியை சந்தித்தது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருடன் திரிஷா, சிம்பு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். படத்தின் பெயரும், அடுத்தக்கட்ட விபரங்களும் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு சிவாஜி: இதற்கிடையே கமல் ஹாசனைத்தான் அடுத்த சிவாஜி என்று ஒரு தரப்பினர் அழைப்பார்கள். ஆனால் அதனை கமல் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார். அதேசமயம் கமலின் நடிப்பினை சிவாஜி கணேசன் ஏகப்பட்ட முறை பாராட்டியிருக்கிறார். அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் கமலின் கெட்டப்பை பார்த்து அசந்தும்போயிருக்கிறார். அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் படத்தை கமலை உருவாக்க சொன்னதோடு; ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தையும் ஏற்க சொன்னார் சிவாஜி.
சண்டையிட்ட ஸ்ருதி ஹாசன்: கமலும் சிவாஜி மீது மிகப்பெரிய பக்தியுடையவர். ஒருமுறை ஷூட்டிங் செல்லும்போது தன்னுடைய மகள் ஸ்ருதி ஹாசனை சிவாஜியின் வீட்டில் விட்டு சென்றாராம் கமல். அப்போது ஸ்ருதியுடன் கொஞ்சி விளையாடினாராம் சிவாஜி. அந்த சமயத்தில் ஸ்ருதியிடம், 'இந்த உலகத்திலேயே சிறந்த நடிகன் யார் தெரியுமா?.. நான்தான்.. வேண்டுமென்றால் உங்க அப்பாட்ட கேட்டுப்பார். அவரும் என்னைத்தான் சொல்வார்' என்று கூறினாராம் சிவாஜி.
இதனையெல்லாம் கேட்டுக்கொண்ட ஸ்ருதி சில நொடிகள் கழித்து, 'எங்க அப்பாதான் சிறந்த நடிகர். அவரால மரத்துல ஏற முடியும் உங்களால முடியுமா' என்று கத்தி கேட்டுவிட்டாராம். அதனை கேட்டு ரசித்த சிவாஜி அய்யோ அந்த வேலையெல்லாம் உங்க அப்பனால மட்டும்தான் முடியும். இந்த கிழவனால முடியாது என்று சிரித்துக்கொண்டே கூறினாராம். இதனை கமல் ஹாசன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.ஃபேமஸ் நடிகை: கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க; சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றாலும் ஸ்ருதி ஹாசனின் நடிப்புக்கு அட்டகாசமான ரெஸ்பான்ஸை ரசிகர்கள் கொடுத்தார்கள். முக்கியமாக ஒரு மீட்டிங் சீனில் ஸ்ருதியின் நடிப்பு அவ்வளவு அருமையாக இருந்தது என்று இன்றுவரை ரசிகர்கள் சொல்லியதுண்டு.
ஹிந்தியிலும்: ஏழாம் அறிவு படத்துக்கு பிறகு 3 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த அவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்க ஆரம்பித்தார். அந்தவகையில் ஹிந்தியில் தில் தோ பச்சா ஹைஜி, கப்பார் இஸ் பேக், வெல்கம் பேக் என ஏகப்பட்ட படங்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கைப் பொறுத்தவரை ஓ மைஃப்ரெண்ட், கப்பார் சிங், பலுப்பு, ராமைய்யா வஸ்தாவ்வையா, யவடு, ரேஸ் குர்ரம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் அவர் இப்போது ரஜினிகாந்த்துடன் கூலி படத்தில் நடித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
நோ திருமணம்: ஸ்ருதியின் பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை அவர் நடிகர் சித்தார்த்தை காதலித்ததாக பேச்சுக்கள் சில வருடங்களுக்கு முன்பு கிளம்பின. ஆனால் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. அதனைத் தொடர்ந்து சாந்தனு என்பவரை காதலித்தார். அவரை தனது தந்தை கமல் ஹாசனிடம் அறிமுகமும் செய்துவைத்தார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இரண்டு பேரின் காதலும் பிரேக்கப்பில் முடிந்தது. இப்போது சிங்கிளாக இருக்கும் ஸ்ருதி, 'தனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையில்லை; அதேசமயம் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கு பிடிக்கும்' என்று ஓபனாக ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ருதி ஹாசனின் தந்தையான கமல் ஹாசனும் முதலில் இரண்டு திருமண முறிவுகளுக்கு பிறகு கௌதமியுடன் லிவிங் டூ கெதரில் இருந்து பிரிந்ததும்; இப்போது சிங்கிளாக இருப்பதும் கவனிக்கத்தக்கது. சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். இவர்களில் பிரபு ஃபேமஸான நடிகர்.
சிவாஜி கணேசன் சென்னை தியாகராய நகரில் ஒரு வீட்டினை வாங்கி அதற்கு அன்னை இல்லம் என்று பெயர் சூட்டினார். அந்த வீட்டுக்கு பிரதமர் முதல் முதலமைச்சர்வரை ஏகப்பட்ட விஐபிக்கள் வந்து சென்றிருக்கிறார்கள். அன்னை இல்லம் என்றாலே கோயில் என நினைக்கும் சினிமாக்காரர்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். நடிகர் அமிதாப் பச்சன் ஒரு விளம்பர படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னை வந்தபோது அன்னை இல்லத்துக்கு வந்து விருந்து சாப்பிட்டு மகிழ்ந்தார். அந்த வீட்டினை சினிமாக்காரர்கள் தவிர்த்து கடைக்கோடி ரசிகனும் கண்டுகளிக்க வேண்டும் என்று விரும்புவார். அதற்காக வெளியூரிலிருந்து சென்னை வந்து அந்த வீட்டை வெளியிலிருந்து ரசித்துவிட்டு சென்றவர்களின் கதையும் ஏராளம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னை இல்லத்துக்கு விபரீதம்: ஆனால் சிவாஜியும், அவரது மனைவி கமலமும் மறைந்த பிறகு அவரது பிள்ளைகளுக்குள் சொத்து தகராறுகள் ஏற்பட தொடங்கின. அது ஒருபக்கம் இருக்க தற்போது அன்னை இல்லத்துக்கு ஒரு விபரீதம் வந்திருக்கிறது. அதாவது சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் சக்சஸ், மச்சி உள்ளிட்ட மூன்று படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் ஹீரோவாக அவருக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பட தயாரிப்பில் தனது மனைவி அபிராமியுடன் இறங்கினார் அவர். அதுவும் கைகூடாத சூழலில் வாங்கிய கடனுக்கு சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











