மூன்று பெக் அடித்தும் போதை ஏறவில்லை.. அந்த போதைதான் பெரிது.. கமலிடம் புலம்பிய ரஜினிகாந்த்
சென்னை: ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் அடையாளங்களாக திகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ரஜினி இப்போது கூலி படத்திலும், கமல்ஹாசன் தக் லைஃப் படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்கள். இரண்டு படங்களும் இந்த வருடம் ரிலீஸாகவிருக்கின்றன. இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் ஃபோன் செய்து பேசிய சுவாரஸ்ய சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.
இந்திய சினிமாவில் பலருக்கும் ரோல் மாடலாக திகழ்பவர்கள் ரஜினியும், கமலும். இரண்டு பேருமே கே.பாலசந்தரின் அறிமுகங்கள்தான். ரஜினி வருவதற்கு முன்னதாகவே கமல் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தார். இரண்டு பேரும் சேர்ந்து பல படங்களில் நடித்தார்கள். ஆனால் ஒருகட்டத்தில் இரண்டு பேரும் பிரிந்து நடிக்க முடிவு செய்தார்கள். கமல்ஹாசனோ கொஞ்சம் கமர்ஷியல் படங்களிலும் நிறைய ஆர்ட் சினிமாக்களிலும் நடித்தார். ரஜினியோ முழுக்க முழுக்க கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்தார்.
இரண்டு பேருமே வளர்ச்சி: இரண்டு பேரும் வெவ்வேறு பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டாலும் அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தே வளர்ந்தார்கள். அவர்களுக்கு தொழில் போட்டி இருந்தது உண்மைதான். அதேசமயம் பொறாமை என்பது சற்றும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஒருவரையொருவர் புகழ்ந்துதான் பேசியிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்குள் இருக்கும் நட்பையும் திரைத்துறையில் பலரும் மதிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கமலேகூட தங்களது நட்பை பற்றி பெருமையாக பேசியிருக்கிறார்.

இப்போதைய படங்கள்: ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டு; நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2வில் நடிக்கவிருக்கிறார். கமலை பொறுத்தவரை மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். கூலி ஆகஸ்ட் 14ஆம் தேதியும், தக் லைஃப் ஜூன் ஐந்தாம் தேதியும் ரிலீஸாகவிருக்கின்றன.
பலரும் ஆச்சரியம்: ரஜினிக்கும், கமலுக்கும் 70 வயதுக்கு மேலாகிவிட்டது. இந்த வயதிலும் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து நடித்துவருவதும்; சினிமாவில் தீவிரமான தேடலில் இருப்பதையும் கண்டு ரசிகர்களும், வளர்ந்துவரும் நடிகர்களும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை. இந்த வருடம் ரிலீஸாகவிருக்கும் கூலி, தக் லைஃப் ஆகிய இரண்டு படங்களுக்குமே உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. ஒருபக்கம் கூலியை இளம் இயக்குநரான லோகேஷ் இயக்கியிருக்கிறார்; மறுபக்கம் தக் லைஃப் படத்தை இந்தியாவிலேயே முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியிருக்கிறார். அதிலும் கமலும், மணிரத்னமும் சேர்ந்து நாயகன் என்ற படத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.
பாராட்டும் ரஜினி: இதற்கிடையே ரஜினிகாந்த்தை பொறுத்தவரை தனது சினிமாவில் பல ஆலோசனைகளை கமலிடம் பெற்றிருக்கிறார். அதேபோல் கமல் நடித்த படங்களில் பலவற்றை அவர் பொதுவெளியிலேயே பாராட்டி பேசியிருக்கிறார். அதேபோல் தன்னுடைய ஃபேவரைட் படங்களில் முதல் மூன்று இடங்களுக்குள் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான நாயகன் படத்தையும் ரஜினி வைத்திருக்கிறார். இந்நிலையில் நாயகன் பட சமயத்தில் நடந்த விஷயத்தை காணலாம்.
மூன்று பெக்குகள்: அதாவது நாயகன் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் பி.வாசு ரஜினியை சந்தித்தாராம். அப்போது ரஜினியிடம் நீங்கள் நாயகன் போன்று ஒரு படம் இதுவரை செய்யவே இல்லை என்று சொன்னாராம். அதற்கு ரஜினியோ, 'அப்படியா. நான் நாயகன் படத்தை பார்த்துவிட்டு வந்து முதலில் ஒரு பெக் அடித்தேன். போதை ஏறவில்லை. அடுத்தடுத்து இரண்டு பெக்குகள் அடித்தேன். அப்போதும் போதை ஏறவில்லை. உடனே கமலுக்கு ஃபோன் செய்து, 'கமல் மூன்று பெக்குகள் அடித்தேன் போதை ஏறவிலலி. இந்த மூன்று பெக்குகள் கொடுக்கும் போதையைவிட வேலு நாயக்கர் (நாயகன் படத்தில் கமல் கேரக்டர் பெயர்) கொடுக்கும் போதை அதிகம். பின்னிட்டீங்க' என்று கூறினேன் என சொன்னாராம். இதனை பி.வாசு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











