Mani Ratnam: இளையராஜாவோடு பணியாற்றிய படத்தில் செய்த தவறு.. மிஸ்டேக்கை ஒப்புக் கொண்ட மணிரத்னம்!
சென்னை: இயக்குநர் மணிரத்னம் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக உள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம், தக் லைஃப். கமல்ஹாசன், சிலம்பரசன் என பெரும் நட்சத்திரப்பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. இப்படியான நிலையில் மணிரத்னம் தான் இயக்கிய படத்தில் செய்த தவறை தானே ஒப்புக் கொண்டது குறித்து ஏற்கனவே பேசியது, ரசிகர்கள் மத்தியில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
மணி ரத்னம் இயக்கம், இளையராஜா இசை என்றாலே, ரசிகர்களுக்கு படத்தின் நடிகர்கள் முக்கியமில்லை எனும் அளவிற்கு, தமிழ்நாடு ரசிகர்கள் மனதில் பெரும் தாக்கத்தினை இவர்கள் இருவரும் ஏற்படுத்திவிட்டார்கள். இவர்கள் காம்போவில் வெளியான படங்கள் இன்றைக்கும், தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களின் பட்டியலில் உள்ளது. இவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து பணியாற்றிய படம், தளபதி.

தளபதி படத்தில், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த், மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி என இருபெரும் ஜாம்பவான்கள் நடித்திருந்தார்கள். படத்தின் இயக்குநர் மணி ரத்னம், இசை இளையராஜா. படம் வெளியான நாளில் இருந்து இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். நான்கு ஜாம்பவான்களும் இணைந்து இந்தப் படத்தில், ஒருவரை ஒருவர் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு பணியாற்றியிருப்பார்கள்.
மௌன ராகம்: அதேபோல் மணி ரத்னம் இயக்கி, இளையராஜா இசையமைத்த, செம லவ் ஸ்டோரிப் படங்கள் பல இருந்தாலும், அதில் எப்போதும் டாப்பில் இருக்கும் படம், மௌன ராகம். இந்தப் படத்தில், மோகன், ரேவதி, கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். அண்மையில் வெளியான மார்டன் லவ் சென்னை என்ற ஆந்தாலஜி படத்தில் கூட, மௌன ராகம் படத்தில் இடம்பெற்ற, வசனம் இடம் பெற்றிருக்கும். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவிலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மௌன ராகம் ஏற்படுத்திய தாக்கத்தினை மறுக்க முடியாது. படத்தில் இடம் பெற்ற பாடல்கள், பின்னணி இசை என அனைத்திலும் ராஜா ஸ்கோர் செய்திருப்பார்.

கமெண்ட்: 1986ஆம் ஆண்டு மௌன ராகம் படம் வெளியானது. படம் ரிலீஸ் ஆன சமயத்தில், படத்தை சென்னையில் பார்க்காமல், சென்னையில் இருந்து வெகு தொலைவு வந்து, ஏதோ ஒரு தியேட்டரில் மணிரத்னம் படம் பார்த்துள்ளார். தியேட்டருக்குள் நுழைந்த மணிரத்னத்திற்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. காரணம் முதல் பத்து வரிசையில் ஒருவர் கூட இல்லை. உடனே மணிரத்னம் நம்ம படத்திற்கு அவ்வளவுதான் கூட்டம் வரும் என நினைத்துக் கொண்டு படம் பார்த்தார்.
தவறு: படம் முடிந்து வெளியே வந்தபோது, படம் பார்த்த பெரியவர் ஒருவர், " யாருடா இவன் பொண்டாட்டிட்ட இப்படி இருக்கான். நாலு சாத்து சாத்துனா அவளே தானா வழிக்கு வரப்போறா" எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இதனைக் கேட்டதும் மணிரத்னத்திற்கு, மௌன ராகம் படத்தில் தான் தவறு செய்துவிட்டதாக எண்ணம் வந்துள்ளது. அதாவது, படத்தில் ரேவதியை மோகன் அடிப்பதுபோன்ற ஒரு காட்சியை வைத்து, அது ஒரு தீர்வு அல்ல எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்ற குற்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மணிரத்னமே ஒருமுறை தெரிவித்துள்ளார். தற்போது இது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











