விஜய்யை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்த SAC... எதிர்பார்க்காத ஹிட் கொடுத்த இரண்டு ரீமேக் படங்கள்!
சென்னை: விஜய்யின் லியோ ஷூட்டிங் காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கலந்துகொண்டார்.
சில வருடங்களாக ஆக்ஷன் ஜானர் படங்களில் நடித்து வரும் விஜய், முன்பெல்லாம் ரொம்பவே சாஃப்ட்டான கேரக்டர்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், விஜய் விருப்பமே இல்லாமல், அவரது அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் கட்டாயப்படுத்தியதால் நடித்த இரண்டு தெலுங்கு படங்களின் ரீமேக் சூப்பர் ஹிட்டானது.

பரபரக்கும் லியோ ஷூட்டிங்
வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் லியோ ஷூட்டிங், காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் திரைப்படமாக லியோ உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கலந்துகொண்டார். இதன் வீடியோவை லியோ படக்குழு நேற்று வெளியிட்டது. இதனிடையே விஜய் அவரது அப்பா எஸ்.ஏ சந்திரசேகரின் விருப்பத்துக்காக நடித்த இரண்டு படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விருப்பம் இல்லாமல் நடித்த விஜய்
விஜய்யின் கேரியரில் முதன்முறையாக மிகப் பெரிய ஹிட் படமாக அமைந்தது பூவே உனக்காக. அதன்பிறகே காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்களில் சாஃப்ட்டான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த வரிசையில் விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய் திரைப்படம் திரையரங்குகளில் 150 நாட்களை கடந்து ஓடியது. ஆனால், இந்தப் படத்தில் விருப்பமே இல்லாமல் விஜய் நடித்தது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு ரீமேக்கில் நடிக்க மறுப்பு
பெல்லி சந்தடி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் உரிமையை விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் வாங்கியுள்ளார். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் கூறியுள்ளார். ஆனால், கதை மிகவும் பழையதாக இருப்பதால் விஜய் நடிக்க மறுத்துவிட்டாராம். ஆனால், அவரது அப்பா எஸ்.ஏ.சி கட்டாயப்படுத்த வேற வழியே இல்லாமல் நடித்துள்ளார் விஜய்.

எதிர்பாராத சூப்பர் ஹிட்
இறுதியாக 1998ல் விஜய், ரம்பா, தேவயானி, மணிவண்ணன், ஆகியோர் நடிப்பில் வெளியான நினைத்தேன் வந்தாய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தேவாவின் இசையில் பாடல்களும் அதிரிபுதிரியாக ஹிட்டடித்தன. ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படத்திற்கு இணையாக கல்லா கட்டியது விஜய்யின் நினைத்தேன் வந்தாய். அதேபோல், பவித்ர பந்தம் என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிலும் விஜய்யை நடிக்குமாறு வற்புறுத்தியுள்ளார் எஸ்.ஏ.சி. ஆனால், இது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என மறுத்துள்ளார் விஜய்.

அசத்திய ப்ரியமானவளே
இறுதியாக அப்பாவின் வற்புறுத்தலால் உருவான ப்ரியமானவளே படத்தில், விஜய்யுடன் சிம்ரன், எஸ்பிபி, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர், எஸ்.ஏ ராஜ்குமார் இசையமைத்தார். செல்வ பாரதி இயக்கிய இந்தப் படம் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியிலும் அமோக வரவேற்பைப் பெற்றது. நினைத்தேன் வந்தாய், ப்ரியமானவளே என தொடர்ந்து தெலுங்கு ரீமேக் படங்களில் அசத்திய விஜய், அதன் பிறகே ஆக்ஷன் மோடுக்கு மாறினார். அப்பாவின் விருப்பத்துக்காக விஜய் நடித்த படங்கள் அவரே எதிர்பார்க்காதவிதமாக ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











