காதல் கோட்டை கட்டிய அஜித் - ஷாலினி.. யப்பா செம லவ்.. கோலிவுட்டின் ஆதர்ச தம்பதி
சென்னை: ஷாலினியை காதலித்து வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார் அஜித். அவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருக்கும் அஜித்துக்கு குடும்பம்தான் எல்லாமே. நேற்றுகூட ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து விடாமுயற்சி ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு அஜர்பைஜானிலிருந்து சென்னைக்கு பறந்துவந்தார் அஜித். அந்த அளவுக்கு இருவரது காதலும் ஆரோக்கியமாக இருக்கிறது.
சினிமாவில் யாரின் துணையும் இல்லாமல் வந்தவர் அஜித். ஆரம்பத்தில் பல கஷ்டங்களை பார்த்தவர் பிறகு மெல்ல மெல்ல முன்னேறினார். சரியான வழிகாட்டுதல் இல்லாமல் ரொம்பவே திணறிப்போனார் என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் தன் கையே தனக்கு உதவி என்பதற்கேற்ப ஒவ்வொரு முறை விழும்போதும் தானாகவே எழுந்தார். உழைப்புக்கேற்ற ஊதியமாக ஹிட் படங்கள் கொடுத்து இன்று தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருக்கிறார். இப்போது அவர் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

காதல்: காதல் கோட்டையில் நடித்தபோது ஹீராவை அஜித் காதலித்ததாக கிசுகிசுக்கப்பட்டது. பிறகு அமர்க்களம் படத்தில் சரண் இயக்கத்தில் நடித்தார். அந்தப் படத்தில் ஷாலினி ஹீரோயினாக நடித்தார். ஷாலினி சிறு வயதிலிருந்தே சினிமாவில் கலக்கிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமர்க்களம் படத்தில் இருவரும் நடித்தபோது ஷாலினியை காதலிக்க ஆரம்பித்துவிட்டார் அஜித்.
காதல் சொன்ன கதை: ஷாலினியிடம் அஜித் காதல் சொன்ன கதையே சுவாரஸ்யமானது. அதாவது படத்தில் ஒரு காட்சியில் ஷாலினியின் கையை கத்தியால் வெட்ட வேண்டும் அஜித். அப்போது தெரியாத்தனமாக நிஜமாகவே ஷாலினியின் கையில் கத்தி பட்டு ரத்தம் கொட்டியது. உடனே ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் அக்கறையோடு ஷாலினியை பார்த்துகொண்டார் அஜித். அப்போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்த முதல் தருணம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு பிறகு ஷூட்டிங் இடைவேளையில் சரண், அஜித், ஷாலினி ஆகிய மூன்று பேரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, சரணிடம் அஜித், 'ஜி சீக்கிரம் ஷூட்டிங்கை முடிங்க. இல்லைனா நான் ஷாலினியை லவ் பண்ணிடுவேன் போல' என்று கூறியிருக்கிறார் அஜித். இதை கேட்டுவிட்டு ஷாலினியும் அமைதியாகவே இருந்தார். ஏனெனில் அவரும் அப்போது அஜித் மீது காதலில் விழ ஆரம்பித்துவிட்டார். பிறகு அஜித் ஷாலினியிடம் காதலை சொல்லியபோது, வீட்டில் வந்து பேசுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றவர்; அஜித்துக்கு முன்னரே தனது தந்தையிடம் பேசி வைத்துவிட்டாராம்.
திருமணம்: அஜித்தும் ஷாலினியின் வீட்டில் சென்று பேசி சம்மதமும் வாங்கிவிட்டார். ஆனால் அந்த சமயத்தில் அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்கள் மட்டுமின்றி வேறு சில படங்களிலும் ஷாலினி கமிட்டாகியிருந்தாராம். ஒருவழியாக அந்த ஷூட்டிங்கை முடித்துக்கொடுத்துவிட்டு; கமிட்டான படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்துவிட்டார்கள். அதில் அஜித்தின் பணம் அதிகம் இருந்ததாக சொல்வார்கள். அதனையடுத்து கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி: திருமணம் முடிந்து 24 வருடங்கள் ஆனாலும் இதுவரை இருவர் பற்றி எந்த கிசுகிசுவும் வந்தது இல்லை. தங்களது காதலின் துணையோடு வாழ்க்கையை மிக அழகாக நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் என்னவென்றால் ஒருவரையொருவர் புரிந்துகொண்டும், விட்டுக்கொடுத்தும் செல்கிறார்கள். அதேபோல் அஜித்தும் எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும் வேலைக்கு அடுத்து அவருக்கு குடும்பம்தான் கவனத்தில் இருக்கும்.
சிம்பு ஹன்சிகாவுடனான காதலை அறிவித்தபோதுகூட, 'நாங்கள் அஜித் - ஷாலினி போல் இருப்போம்' என்றுதான் கூறினார். அந்த அளவுக்கு கோலிவுட்டின் ஆதர்ச தம்பதிகளாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள் இருவரும். அதன் வெளிப்பாடுதான் ஷாலினிக்காக ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு அஜித் பறந்து வந்தது. நேற்று ஷாலினியுடன் அஜித் இருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து, ஜோடினா இப்படி இருக்கணும் என்று கூறி ட்ரெண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











