Pathu thala: யப்பா பத்து தல இயக்குநர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கார் பாருங்க
சென்னை: பத்து தல படத்தின் இயக்குநர் கிருஷ்ணா பட வாய்ப்புகள் இல்லாதபோது பட்ட கஷ்டம் குறித்த தகவல் தெரியவந்திருக்கிறது.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் மின்னலே படத்தில் உதவி இயக்குநராக இணைந்தவர் கிருஷ்ணா. அதேபோல் கௌதம் மேனன் இயக்கிய காக்க படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றினார் கிருஷ்ணா.

சில்லுனு ஒரு காதல் படம் மூலம் அறிமுகம்
கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கிருஷ்ணா சில்லுனு ஒரு காதல் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா, வடிவேலு, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது அந்தப் படம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். முதல் படத்திலேயே ஏ.ஆர்.ரஹ்மானை இசைக்கு கமிட் செய்ததன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்தார் கிருஷ்ணா.

சூப்பர் ஹிட்டான சில்லுனு ஒரு காதல்
ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து அவளை இழந்திருக்கும் ஹீரோவுக்கும், காதலித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கையில் இருக்கும் ஹீரோயினுக்கும் பெரியவர்களால் திருமணம் செய்துவைக்கப்பட்ட பிறகு அவர்களுக்குள் மலரும் காதல் குறித்தும்; தனது கணவனுக்காக அவனுடைய பழைய காதலியை மனைவி அழைத்து வருவதும் என அந்தப் படத்தை இயக்கியிருந்தார் கிருஷ்ணா. சிக்கலான இந்த ஒன்லைனை தனது அபார திறமையால் எந்த வித சலனமும் இல்லாமல் மேக்கிங் செய்து ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்தார் கிருஷ்ணா. அதுமட்டுமின்றி கணவன் மனைவி என்றால் சில்லுனு ஒரு காதல் கௌதம் - குந்தவை போல்தான் இருக்க வேண்டும் என ரசிகர்கள் இன்றும் பேசும் அளவுக்கு படம் முழுக்க காதல் ததும்ப ததும்ப இருக்கும். எனவே அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

நீண்ட கேப்புக்கு பிறகு நெடுஞ்சாலை
முதல் படமே சூப்பர் ஹிட்டானாலும் அடுத்தடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் நீண்ட கேப் எடுத்துக்கொண்ட கிருஷ்ணா அடுத்ததாக ஆரியை வைத்து நெடுஞ்சாலை படத்தை இயக்கினார். கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்துக்கு பிறகும் நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்ட அவர் 2019ஆம் ஆண்டு தெலுங்கில் ஹிப்பி என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

மீண்டும் தமிழில் எண்ட்ரியாகும் கிருஷ்ணா
இந்நிலையில் நெடுஞ்சாலை படத்துக்கு பிறகு அதாவது 9 வருடங்களுக்கு பிறகு தமிழில் மீண்டும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா. சிம்பு, கௌதம் கார்த்திக்கை வைத்து மஃப்டி படத்தின் ரீமேக்காக பத்து தல படத்தை இயக்கியிருக்கிறார். ரீமேக்காக இருந்தாலும் கிருஷ்ணாவின் மேக்கிங் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறது. படம் இன்று வெளியாகிறது.

இயக்குநர் கிருஷ்ணா பட்ட கஷ்டம் என்ன தெரியுமா?
கிருஷ்ணா ஒவ்வொரு படத்துக்கும் இடையில் குறைந்தபட்சம் ஐந்து வருடங்களாவது இடைவெளி எடுத்துக்கொள்வார். அதற்கு காரணம் அவர் இல்லை என்றாலும் அவருக்கான சூழல் அப்படியே அமைந்துவிடுகிறது. அப்படி பட வாய்ப்புகள் இல்லாதபோது கிருஷ்ணா பட்ட கஷ்டம் குறித்து இப்போது தெரியவந்திருக்கிறது.
அதாவது, முதல் இரண்டு படங்களுக்கு பிறகு வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தனியார் கால் டாக்சியில் கிருஷ்ணா ஓட்டுநராக பணியாற்றுவாராம். ஆனால் அது வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக வீட்டிலிருந்து கிளம்பும்போது அலுவலகம் செல்வதுபோல் கிளம்பி.; ஓட்டுநர் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது காலையில் அணிந்த உடையில் சென்றுவிடுவாராம். இதனை அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பத்து தல படத்துக்கு பிறகு அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











