முதல் பட ரிலீஸுக்கு பின்தான் வீட்டில் பாத்ரூம்.. ரொம்ப இழிவா பார்த்தாங்க..மாரி செல்வராஜின் மறுபக்கம்
சென்னை: ராமிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரி செல்வராஜ். இதுவரை அவர் இயக்கத்தில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த மூன்று படங்களுமே தரமான படைப்புக்களாக உருவாகி அவரை முன்னணி இயக்குநர் வரிசையில் கொண்டு போய் நிறுத்தியிருக்கின்றன. தற்போது அவர் வாழை படத்தை இயக்கி முடித்திருக்கிறார். நேற்று ரிலீஸான வாழை ரசிகர்களிடையேயும், திரைத்துறையினரிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் மாரி செல்வராஜின் மறுபக்கத்தை பார்க்கலாம்.
ராமிடம் அலுவலக உதவியாளராக இருந்து பிறகு உதவி இயக்குநராக இணைந்தவர் மாரி செல்வராஜ். பல வருடங்கள் உதவி இயக்குநராக இருந்துவிட்டு பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முதல் படத்திலேயே சாதிய அட்டூழியங்களை தோலுரித்து காட்டும் தைரியமிக்க இயக்குநராக ஜொலித்தார் மாரி. இதன் காரணமாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

கர்ணன்: அந்தப் படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய கர்ணன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளத்தில் காவல் துறையினர் நடத்திய அராஜக தாக்குதலை மையமாக வைத்து உருவாக்கியிருந்தார் மாரி செல்வராஜ். அந்தப் படமும் மாரி செல்வராஜுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதேசமயம் வரலாறை திரித்து கூறிவிட்டார் என்ற விமர்சனமும் அவர் மீது ஒருபக்கம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
மாமன்னன் மாரி: முதல் இரண்டு படங்களின் மூலம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய மாரி செல்வராஜ் கடைசியாக மாமன்னன் படத்தை இயக்கினார். உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக அது அமைந்தது. இந்தப் படமும் இதுவரை யாரும் தொடாத கதைக்களத்தில் இருந்தது. முக்கியமாக எம்.எல்.ஏவாகவே இருந்தாலும் அவரை சாதிய வக்கிரவாதிகள் என்ன பாடுபடுத்துகிறார்கள் என்பதை பொட்டில் அடித்து சொல்லியிருந்தார் இயக்குநர். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மேலும் வடிவேலுவுக்கும் இன்னொரு பரிமாணத்தை கொடுத்தது மாமன்னன்.
வாழை: மாரி செல்வராஜ் இப்போது வாழை படத்தை இயக்கி முடித்திருக்கிறார். தனது சிறு வயதில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து மாரி உருவாக்கிய அந்தப் படம் நேற்று ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். அடுத்ததாக அவரது இயக்கத்தில் பைசன் - காளமாடன் படம் உருவாகிவருகிறது. அதில் ஹீரோவாக விக்ரமின் மகன் துருவ் நடித்திருக்கிறார்.
மாரியின் மறுபக்கம்: இந்நிலையில் மாரி செல்வராஜ் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்று கலங்கடிக்க செய்திருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், "நான் 10ஆவது படிக்கும்போதுதான் எனது வீட்டுக்கு கரண்ட் வந்தது. பரியேறும் பெருமாள் படத்தின் ரிலீஸுக்கு பிறகுதான் எங்கள் வீட்டில் பாத்ரூம் வந்தது. அதுவரை எனது அம்மாவும், அக்காவும் குளிப்பதற்கு தென்னங்கீத்தை வைத்து மறைத்திருப்போம். நாங்கள் ஆற்றிலும் குளிப்போம். எங்கள் வீட்டில் மொத்தம் 60 ஆடுகள் இருந்தன. மேலும் மாடுகளும் இருந்தன.
துக்கம் விழுந்த வீடு: அந்த ஆடுகள், மாடுகளை நான் மேய்ப்பேன். எனது அண்ணன் சிவனணைந்த பெருமாள் பிஎட் படிப்பதற்கு பணம் இல்லாததால் ஒட்டுமொத்த ஆடுகளையும், மாடுகளையும் விற்றுவிட்டோம். அப்போது துக்கம் விழுந்தது போல் எங்கள் வீடு இருந்தது. நான் நாயும் வளர்த்திருக்கிறேன். அதேபோல் நாங்கள் பன்றிகளும் வளர்த்திருக்கிறோம். பன்றி வளர்ப்பதை இழிவாகவே பார்த்துவந்தார்கள். ஏன் இவர்கள் இழிவாக பார்க்கிறார்கள் என்று அப்போதே எனது மனதில் பதிந்துவிட்டது" என்றார்.


Click it and Unblock the Notifications











