துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு முதலில் வடிவேலு தான் ஹீரோ... அப்போ விஜய் எப்படி.?
சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோவாக கலக்கி வரும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார்.
தனது ஆரம்ப காலங்களில் காதல் பின்னணி கொண்ட ஃபீல் குட் திரைப்படங்களில் தான் அதிகம் நடித்து வந்தார் விஜய்.
பூவே உனக்காக, காதலுக்கு மாரியாதை போன்ற படங்கள் வரிசையில், அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது துள்ளாத மனமும் துள்ளும்.
சில்வர் ஜூப்ளி கொண்டாடிய இந்தப் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது வடிவேலு தான் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

சில்வர் ஜூப்ளி ஹீரோ
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் நடிகர் விஜய்க்கு மிக முக்கியமான இடம் உண்டு. நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய், ஆரம்ப காலங்களில் தனது அப்பாவின் இயக்கத்தில் நடித்து வந்தவருக்கு பூவே உனக்காக திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. தொடர்ந்து வெளியான லவ் டுடே, நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய் போன்ற படங்கள் அவரை சில்வர் ஜூப்ளி ஹீரோ என்ற அடையாளத்தைக் கொடுத்தது.

துள்ளாத மனமும் துள்ளும்
இந்த வரிசையில் 1999ம் ஆண்டு வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் விஜய்க்கு மேலும் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. முக்கியமாக கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் உருவானது இந்தப் படத்தில் தான். எழில் இயக்கிய இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும், மணிவண்ணன், தாமு உள்ளிட்ட பலரும் நடிக்க, எஸ்.ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் எனலாம்.

பின் வாங்கிய தயாரிப்பாளர்கள்
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி செளத்ரி தயாரித்த துள்ளாத மனமும் துள்ளும் 200 நாட்கள் வரை வெற்றிகரமாக ஒடியது. மேலும், விஜய்யின் மார்க்கெட்டும் வேற லெவலில் பிக் அப் ஆனது. முன்னதாக இந்தப் படத்தில் வடிவேலு தான் ஹீரோவாக நடிக்கவிருந்தாராம். இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் எழில், இப்படத்தின் கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். ஆனால், ஹீரோயினுக்கு கண் தெரியாது என கூறியதும் பலரும் பின்வாங்கிவிட்டனர்.

முதல் ஹீரோ வடிவேலு
அதன்பின், வடிவேலுவை சந்தித்து துள்ளாத மனமும் துள்ளும் கதையை கூறினேன், அவர் கேட்டதும் கண்ணீர்விட்டு அழுதுவிட்டார். அவரே தன்னை பல தயாரிப்பாளர்களிடம் கூட்டிச் சென்றார். அப்போது அவர்கள் கதை ஓக்கே ஆனால் வடிவேலு ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி. சௌத்ரி சார் தான் இந்த கதையை ஓக்கே சொன்னதோடு, விஜய்யிடமும் கால்ஷீட் வாங்கினார். அதற்கு முன்பாக முரளியை நடிக்க வைக்கலாமா எனவும் ஆர்பி செளத்ரி யோசித்தாராம். அதன்படி வடிவேலு தான் துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் முதல் ஹீரோ என்பது தற்போது தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications