Vairamuthu on Ilaiyaraaja: “இளையராஜா பற்றி பேச எனக்கு கூச்சம் இல்லை..” வைரமுத்து பெருமிதம்!
சென்னை: இளையராஜா குறித்து வைரமுத்து பெருமிதமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் ஒன்றாக பணிபுரிந்த இருவரும் பல ஆண்டுகளாக பேசிக் கொள்வதே கிடையாது.

இளையராஜா குறித்து வைரமுத்து பெருமிதம்
இளையராஜா இசையமைத்த நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா மூவருமே தேனி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது கூட்டணிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இக்கூட்டணியில் வெளியான பாடல்கள் இப்போது வரையும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளன.
ஆனால், ஒருகட்டத்தில் இளையராஜா - வைரமுத்து இடையே பிரச்சினை எழுந்தது. அப்போது முதல் இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதை நிறுத்திவிட்டனர். குறிப்பாக இருவருக்கும் நெருங்கிய நண்பரான பாரதிராஜா பலமுறை முயன்றும் இளையராஜா, வைரமுத்து கூட்டணியை ஒன்றிணைக்க முடியவில்லை. இதனால் சில ஆண்டுகள் சினிமாவில் பாடல்கள் எழுத வாய்ப்பு இல்லாமல் இருந்தார் வைரமுத்து.
ஏஆர் ரஹ்மான் வருகைக்குப் பின்னரே மீண்டும் வைரமுத்து பாடல்கள் எழுதத் தொடங்கினார். இதனால், இளையராஜாவை பிரிந்து ஏஆர் ரஹ்மான் - வைரமுத்து கூட்டணியில் இணைந்தார் பாரதிராஜா. ஆனாலும் தங்களது நட்பை அவர் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. எல்லா மேடைகளிலும் இளையராஜா குறித்து பெருமையாக பேசுவார் பாரதிராஜா. தற்போது அதேபோல், வைரமுத்துவும் இளையராஜா பற்றி பெருமிதமாக பேசியுள்ளார்.
அதாவது முதல் மரியாதை படத்தில் பாடல்களை தேனி பகுதியில் புழக்கத்தில் உள்ள வட்டார வழக்கு மொழியில் எழுதியிருப்பார் வைரமுத்து. இந்தப் படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியர் என்ற விருதையும் வாங்கிக் கொடுத்தது. இப்படியான பாடல் வரிகளை சேர்க்க பாரதிராஜாவும் இளையராஜாவும் தான் காரணம் என வைரமுத்து பேசியுள்ளார்.
அவர்களும் தேனி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான் அப்படியான வார்த்தைகளில் பாடல் எழுத முடிந்தது. அதேபோல் தமிழர்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டுமானால் பாரதிராஜாவின் படங்களைப் பார்க்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல், இளையராஜாவின் பாடல்களை கேட்டாலும் அது புரிந்துவிடும். இதற்காக இளையராஜா பற்றி பெருமையாக பேசுவதில் எனக்கு ஏதும் கூச்சமில்லை எனவும் வைரமுத்து பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











