வைரமுத்து செய்த செயல்.. கலங்கிப்போன இயக்குநர் ஷங்கர்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் ஷங்கர். ஆனால் சமீப காலமாக அவர் இயக்கிய படங்கள் எதுவுமே ஹிட்டாகவில்லை. கேம் சேஞ்சர், இந்தியன் 2, 2.0 என வரிசையாக தோல்வி படங்களையே கொடுத்திருக்கிறார். அடுத்ததாக வேள்பாரி நாவலை படமாக்க திட்டமிட்டிருக்கிறார். அந்தப் படத்தையாவது அவர் ஹிட் படமாக கொடுப்பாரா இல்லையா என்ற கேள்வியை பலரும் எழுப்பிவருவது குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்து ஜென்டில் மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். அர்ஜுன், கவுண்டமணி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. இருப்பினும் படத்தின் கதையை சுற்றி சர்ச்சைகளே இருந்தன. இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவாகரங்களை தவறான முறையில் அவர் காண்பித்துவிட்டார் என்ற விமர்சனமும் இருக்கிறது. கமலும் அதனால்தான் அந்தப் படத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரமாண்ட இயக்குநர்: இருப்பினும் அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு ஷங்கருக்கென்று வெளிச்சம் கிடைத்தது. தொடர்ந்து முதல்வன், ஜீன்ஸ், காதலன், இந்தியன், அந்நியன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன் படங்களை இயக்கினார். இவற்றில் பாய்ஸ் மட்டும்தான் தோல்வியை சந்தித்தது. மற்ற அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் அல்லது மெகா ப்ளாக் பஸ்டர் என்ற ரிசல்ட்டையே பெற்றன. குறிப்பாக தன்னுடைய படங்களில் அவர் பிரமாண்டங்களை பயன்படுத்தியதன் காரணமாக அவர் இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்ற அடைமொழியையும் பெற்றார்.

ஃபார்ம் அவுட்டில் ஷங்கர்: ஆனால் கடந்த பல வருடங்களாகவே அவர் பயங்கர ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். அவர் கடைசியாக கொடுத்த ஹிட் படமென்றால் எந்திரன் படம்தான். அதன் பிறகு இயக்கிய ஐ, 2.0, இந்தியன் 2 ஆகிய படங்கள் எல்லாம் படுதோல்விதான். அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையை கேம் சேஞ்சர் என்கிற பெயரில் இயக்கி இந்த வருடம் ரிலீஸ் செய்தார். அப்படமும் மோசமான தோல்வியையே சந்தித்தது.
செமயான ட்ரோல்: வரிசையாக தோல்விகளை கொடுத்துக்கொண்டிருக்கும் ஷங்கர் அடுத்ததாக வேள்பாரி நாவலை படமாக்கவிருக்கிறார். ஆனால் தயவு செய்து அதையும் எடுத்து கெடுத்துவிட வேண்டாம் என்று ஷங்கரை ரசிகர்களில் ஒருதரப்பினர் கடுமையாக ட்ரோல் செய்துவருகிறார்கள். அதேசமயம் அவரை ரசிப்பவர்களோ, ஒரு காலத்தில் எப்படி இருந்தவர் தெரியுமா அவர்? கண்டிப்பாக வேள்பாரியை தரமாக கொடுப்பார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.
ஜீன்ஸ் ஷங்கர்: அவர்கள் சொல்வதுபோல் ஒருகாலத்தில் ஷங்கர் ஃபார்மில் இருந்தவர்தான். அதிலும் ஜீன்ஸ் படத்தை 90களிலேயே அவ்வளவு டெக்னாலஜியோடு எடுத்தவர். முக்கியமாக பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் பாடலை உலகத்தில் இருக்கும் 7 அதிசயங்களுக்கு சென்று படமாக்கி மெர்சல் செய்தவர். அப்படிப்பட்ட ஷங்கர் விரைவில் இந்தத் தோல்விகளிலிருந்து மீண்டு வர வேண்டுமென்பதுதான் திரைத்துறையில் பலரது விருப்பம்.
வைரமுத்து பேச்சு: இந்நிலையில் ஷங்கர் குறித்து பாடலாசிரியர் வைரமுத்து பேசிய பேச்சு ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவில் பேசியிருந்த வைரமுத்து, "எனக்கு பிரியமான ஒரு இயக்குநர். நான் எழுதிய் பாடலை படமாக்கிய பிறகு எனக்கு அந்தப் பாடலை போட்டுக்காட்டினார். வியந்துபோனேன். மறுநாள் காலையில் அவரது வீட்டுக்கு சென்று அவருக்கு சந்தன மாலை அணிவித்தேன். அவர் நெகிழ்ந்துபோய் கண்களின் ஓரம் நீர் கட்டி நின்றபடி, 'எதற்கு இந்த மரியாதை' என்று கேட்டார். அதற்கு நானோ, 'என் தமிழை உலகத்தில் ஏழு அதிசயங்களிலும் ஒலிக்க செய்தீர்களே அதற்குத்தான் என்று சொன்னேன். அந்தப் பாடல்தான் பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடல்" என்றார்.


Click it and Unblock the Notifications











