Vijay: விஜய், சூர்யாவுடன் ஜோதிகா, சுவலட்சுமி... ப்ரண்ட்ஸ் படத்தின் முதல் கூட்டணி இதுதானா..?
சென்னை: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய்யுடன் சினேகா, லைலா ஆகியோரும் நடித்து வருகின்றனர். இவர்களில் ஒருவரின் கேரக்டரில் நடிக்க முதலில் ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. முன்னதாக 2001ம் ஆண்டு வெளியான ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்யுடன் நடிக்க கமிட்டான ஜோதிகா, பின்னர் அந்த ப்ராஜெக்ட்டில் இருந்து விலகிவிட்டார்.
ப்ரண்ட்ஸ் படத்தில் ஜோதிகா, சுவலட்சுமி
விஜய் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் ப்ரண்ட்ஸ். விஜய்யுடன் சூர்யாவும் லீடிங் ரோலில் நடித்திருந்தார். மேலும், வடிவேலு, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி, சார்லி, ராதாரவி, மதன்பாபு, அபிநயாஸ்ரீ, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். மலையாள இயக்குநர் சித்திக் இயக்கிய ப்ரண்ட்ஸ் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

மலையாளத்தில் இருந்து தமிழில் ரீமேக்கான ப்ரண்ட்ஸ் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. முக்கியமாக முதல் பாதியில் வடிவேலுவின் காமெடி ட்ரீட் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்தது. வடிவேலுவின் எவர்க்ரீன் காமெடி படங்களில் ப்ரண்ட்ஸும் முக்கியமானது. ஒவ்வொரு காமெடி காட்சிகளும் தியேட்டரை அதிர வைத்தன. ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய் ஜோடியாக தேவயானியும், சூர்யா ஜோடியாக விஜயலட்சுமியும் நடித்திருந்தனர்.
சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த விஜயலட்சுமி, இந்தப் படத்தில் விஜய்யின் தங்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா மூவரும் உயிர் நண்பர்களாக வலம் வர, அவர்களுக்குள் பிரச்சினை வருகிறது. பின்னர் இணைந்தார்களா இல்லையா என்பது தான் ப்ரண்ட்ஸ் படத்தின் கதை. சூர்யாவுக்காக உயிரையே கொடுக்க துணிந்த நண்பனாக விஜய் நடித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் முதலில் ஜோதிகாவும் சுவலட்சுமியும் நடிக்க கமிட்டாகியிருந்தனர்.
விஜய் ஜோடியாக ஜோதிகாவும், சூர்யாவுடன் சுவலட்சுமியும் நடிக்க இருந்ததோடு, அவர்களை வைத்து எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்களும் வெளியாகியிருந்தன. விஜய் - ஜோதிகா கூட்டணியில் ஏற்கனவே குஷி திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருந்த நேரம் அது. அதனால் ப்ரண்ட்ஸ் படத்திலும் இக்கூட்டணி மாஸ் காட்டும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் திடீரென ஜோதிகாவும் அவரைத் தொடர்ந்து சுவலட்சுமியும் ப்ரண்ட்ஸ் படத்தில் இருந்து விலகினர்.
அதன் பின்னரே தேவயானியும் விஜயலட்சுமியும் ப்ரண்ட்ஸ் படத்தில் கமிட்டானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ப்ரண்ட்ஸ் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் ஷூட்டிங்கில் ஜோதிகாவும் சுவலட்சுமியும் பங்கேற்ற போட்டோ வைரலாகி வருகிறது. அதில் விஜய் அருகில் ஜோதிகாவும் சூர்யா பக்கம் சுவலட்சுமியும் உள்ளனர். இந்த நால்வர் கூட்டணிக்கு நடுவில் ரமேஷ் கண்ணா நிற்கிறார். அட்டகாசமான த்ரோபேக் போட்டோவான இதனை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











