Vijay Trisha: விஜய் த்ரிஷா சேஸிங்கில் ஏற்பட்ட பயங்கர விபத்து.. செத்துப் பிழைத்த முக்கியப் புள்ளி!
சென்னை: நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் கில்லி. இயக்குநர் தரணி இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ரி ரிலீஸில் அதிக வசூலைக் குவித்த தமிழ் படம் என்ற புகழோடு உள்ள கில்லி படத்தின் சேஸிங் காட்சியில் ஏற்பட்ட விபத்தில் ஒளிப்பதிவாளர் கோபிநாத்திற்கு பலத்த அடி விழுந்தது மட்டுமல்லாமல் எலும்புகளும் உடைந்து விட்டது என ஒளிப்பதிவாளர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், " கில்லி படத்தில் வரும் சேசிங் காட்சியை ஒரிசாவில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு செய்து கொண்டிருந்தோம். இந்த படப்பிடிப்பின்போது நான் சென்ற கார் விபத்துக்குள்ளானது, இதனால் எனது கால் எலும்பு மற்றும் மார்பு எலும்பு உடைந்து விட்டது. உயிர் பிழைப்பேனா என்ற பயம் அனைவருக்கும் இருந்தது. மயங்கிய நிலையில் கிடக்கும் எனக்கு அருகில் யாருமே வரவில்லை. இயக்குநர் தரணி வந்துதான் முதன் முதலில் எனக்கு அருகில் வந்து என்னைத் தூக்கினார். காரில் என்னை ஏற்றி கொண்டு, விபத்து நடந்த இடத்தில் இருந்து முப்பது கிலோ மீட்டருக்கு தூரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மருத்துவமனைக்கு நாங்கள் செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிந்தது. அப்போது எனது மனதில் பல்வேறு எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படி பல எண்ணங்கள் எனது மனதில் ஓடிக்கொண்டு இருந்த போது, கடைசியாக என்னுடைய மனைவி மேனகாவின் முகம் தான் கண் முன் நின்றது. நான் இறந்தால் எனது மனைவி மேனகா தான் நேரிடையாக பாதிக்கப்படக் கூடியவர் என்பதால், மேனகா பற்றிய நினைவுகளே அதிகம் இருந்தது.

அழுதுகொண்டே சிரித்த த்ரிஷா: மருத்துவமனையின் முன்பாக நான் சென்ற கார் நின்றது. இயக்குநர் தரணி, த்ரிஷா, விஜய் என எல்லோரும் காரில் வந்துவிட்டார்கள். என்னை காரிலிருந்து இறக்குவதற்காக மருத்துவமனையில் இருந்து ஸ்ட்ரெச்சர் எடுத்து வருகிறார்கள். அப்போது எனக்கு முழுவதுமாக மயக்கம் தெளிந்து விட்டது. என்னை தூக்க வந்தவர்களை விலக்கி விட்டு விட்டு எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டேன். இதைப் பார்த்த த்ரிஷா அழுதுகொண்டே சிரிக்க ஆரம்பித்துவிட்டார். நான் பிழைத்து விட்டேன் என்ற நிம்மதி அவருக்கு.
உடன் வந்த விஜய்: அந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று கொண்டேன். அங்கிருந்த விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம் என முடிவெடுக்கப்பட்டது. அப்போது இரவு ஆகிவிட்டதால், இரவில் காடு வழியாக பயணம் செய்ய சிரமம் என்பதால், தயாரிப்பாளர் ஏ. எம். ரத்னம், பெங்களூருக்கு தொடர்பு கொண்டு ஹெலிகாப்டருக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் வரவில்லை. எனவே சாலை வழியாகவே விசாகப்பட்டினம் சென்றோம். அப்போது விசாகப்பட்டினம் வரை விஜய்யும் என்னுடனே வந்தார். நாளைக்கு திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்க வேண்டும், நீங்கள் உடனே கிளம்புங்கள் என விஜய்யிடம் நான் கூறிவிட்டேன். என்னுடைய இணை ஒளிப்பதிவாளர்கள் பார்த்து கொள்வார்கள் என்று விஜய்யிடம் கூறினேன். நான் இல்லாமல் மூன்று நாள் படப்பிடிப்பு நடந்தது.

விபத்து நடந்த போது: விபத்து நடந்தது குறித்து தகவல் தெரிந்தும் பத்திரிகையாளர்கள் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர். நடந்ததை பத்திரிகையாளர்களிடம் கூறிய நான் சென்னை பதிப்பில் மட்டும் தயவு செய்து இந்த செய்தியை வெளியிட வேண்டாம் என்று கூறினேன். விபத்து ஏற்பட்டது தெரிந்தால் என் மனைவி தாங்க மாட்டார் என்றேன். நான் கேட்டுக் கொண்டதை அடுத்து சென்னை பதிப்பில் அந்த செய்தி வெளிவரவில்லை. நான் வீட்டுக்கு வந்த பிறகு தான் எனக்கு ஏற்பட்ட விபத்து குறித்துச் சொன்னேன். விபத்து ஏற்பட்டபோது எனக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள் தான் ஆகியிருந்தது" எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











