மாற்றுத் துணி இல்லாமல் கஷ்டப்பட்ட ரஜினிகாந்த்.. விஜயகாந்த்தின் வேட்டி சட்டை கடனாக வாங்கிய சம்பவம்!
சென்னை: கேப்டன் விஜயகாந்த் ஆக்டிவாக இருந்தவரை பலருக்கு உதவி செய்துள்ளார். இவரது ஈகை மனதிற்கு திரைத்துறையிலும், அரசியலிலும் இவரைக் கொண்டாடும் மனிதர்கள் இருக்கிறார்கள். இப்படியான விஜயகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வேட்டி சட்டை கடனாக கொடுத்து உதவியுள்ளார் என்ற சம்பவம் ஆச்சரியப்பட வைக்கிறது தானே. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கேப்டன் விஜயகாந்த், சினிமாவில் நடிக்க வரும்போது, ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக உயர்ந்துவிட்டார். அதாவது எம்.ஜி.ஆர். - சிவாஜி ஆகியோருக்கு அடுத்து, அடுத்த தலைமுறை நடிகர்களில் முன்னணி நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அதற்கு கமல்ஹாசன் படங்களோடு தனது படங்களை ரிலீஸ் செய்து, தனது படங்களை வெற்றிப் படங்களாக மாற்றியவர், இன்றைக்கும் சூப்பர் ஸ்டாராக உள்ளார்.

கேப்டன், தூரத்து இடி முழக்கம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அப்போது திரைத்துறை முழுவதும் கலர் பிக்சருக்கு மாறிவிட்டது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல பிளாக் & ஒய்ட் படங்களில் நடித்துள்ளார். ரஜினியைப் பார்த்து சினிமாவிற்கு விஜயகாந்த் வந்திருந்தாலும், விஜயகாந்த் வளர்ந்த பின்னர், ரஜினி மற்றும் விஜயகாந்த் படங்கள் ரிலீஸ் ஆனால், அதில் பெரும் வெற்றியைக் குவிக்கும் படமாக விஜயகாந்த் படம் தான் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் விஜயகாந்த்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை பார்த்து ரஜினியே திகைத்துப் போனார் என்ற தகவல்கள் இன்றைக்கும் திரைத்துறை வட்டாரத்தில் உலா வருகிறது. கேப்டனின் சின்னக்கவுண்டர் படத்தைப் பார்த்துவிட்டு, தானும் அதேபோல் பக்காவான, கிராமத்து கதைக்களத்தில் வேட்டி சட்டை அணிந்து படம் நடிக்க வேண்டும் என, திட்டமிட்டு நடித்த படம் தான், எஜமான். எஜமான் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தாலும், சின்னக்கவுண்டர் அளவிற்கு பெரிய கலெக்ஷனைக் கொடுக்கவில்லை.
கேப்டன்: இப்படியான நிலையில், தயாரிப்பாளரும், கேப்டனிடம் நல்ல நட்பில் இருந்தவருமான டி. சிவா, பழைய பேட்டி ஒன்றில் கூறியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " 2000 களின் போது கேப்டன் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார். நடிகர் சங்க கடனை அடைக்க ஒட்டுமொத்த நடிகர்களையும் அழைத்துக் கொண்டு, சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுகளுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். அப்படி, மலேசியாவில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, சிங்கப்பூருக்குச் சென்றோம்.

சூப்பர் ஸ்டார்: இதில் சூப்பர் ஸ்டாரின் உடைகளை வைத்திருந்த, சூட்கேஸ் எங்கேயோ மிஸ் ஆகிவிட்டது. அதில் அவர் 4 சட்டைகள், நான்கு வேட்டிகள் ஆகியவற்றை வைத்திருந்தார். சூப்பர் ஸ்டாரின் ஆடைகள் இருந்த சூட்கேஸ் காணாமல் போனது தெரிந்ததும், சரத்குமார் தன்னிடம் இருந்த கோட் சூட்டை சூப்பர் ஸ்டாருக்கு கொடுக்க முன்வந்தார். ஆனால் சூப்பர் ஸ்டார் அதனை வேண்டாம் எனக் கூறிவிட்டார்.
கடன்: மேலும், விஜயகாந்த் எப்படியும் வேட்டி சட்டை வைத்திருப்பார். அவரது வேட்டி சட்டையை எனக்கு வாங்கி வாருங்கள் எனக் கூறி, விஜய்காந்த்தின் வேட்டி சட்டையை அணிந்து கொண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கேப்டனிடம் கடனாக வாங்கிய வேட்டி சட்டை சூப்பர் ஸ்டாருக்கு தொளதொளவென இருந்தது. ஆனாலும், கேப்டனின் துணிகளை அணிந்து கொண்டுதான், அந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் கலந்து கொண்டார். இது தொடர்பான தகவலும் வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











