Vijayakanth - என் ஃப்ரெண்ட அரெஸ்ட் பண்ணுறீங்க?.. நள்ளிரவில் சசிகலாவுக்கு ஃபோன் போட்டு விஜயகாந்த் செய்த சம்பவம்
சென்னை: நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் கடந்த டிசம்பவர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. லட்சக்கணக்கானோர் நேரில் சென்று அவரது உடலுக்கு தங்களது இறுதி மரியாதையை செலுத்திவிட்டு வந்தனர். அவர் உயிரிடன் இருக்கும்போது அவரை கிண்டல் செய்தவர்கள் எல்லாம் அவரது உயிரிழப்பை நினைத்து கண் கலங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் தமிழ்நாட்டில் பெரும் ஆளுமையாக வலம் வந்தவர். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்கி முழு ஓய்வில் இருந்தார். அந்த சமயத்தில் ரசிகர்களையும், தொண்டர்களையும் சந்திப்பதை மட்டுமே வழக்கமாக வைத்திருந்தார் அவர். இப்படிப்பட்ட சூழலில் திடீரென அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திரண்ட கூட்டம்: அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. பல மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு சென்று விஜயகாந்த்தின் உடலுக்கு மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். திரையுலக பிரபலங்களும் பெரும்பாலானோர் விஜயகாத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தேமுதிக தலைமை கழக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது விஜயகாந்த் நினைவிடமாக அனுசரிக்கப்படும் அந்த இடத்துக்கும் ஏராளமானோர் தினமும் சென்றுகொண்டிருக்கின்றனர்.
உதவி என்றால் விஜயகாந்த்: அவர் உயிருடன் இருந்தபோது பலரும் அவரை ட்ரோல் செய்திருக்கிறார்கள். மீம்ஸ் மெட்டீரியலாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர் உயிரிழந்த பிறகு அனைவருமே விஜயகாந்த்தின் அருமையை தெரிந்துகொண்டனர். ஏனெனில் அவர் சினிமாக்காரர்கள் மட்டுமின்றி சாமானியர்களுக்கும் ஏகப்பட்ட உதவிகளை செய்திருக்கிறார். அதனாலேயே அவரை கறுப்பு எம்ஜிஆர் என்று மக்கள் அழைத்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெருங்கிய நண்பர்: விஜயகாந்த்தை பொறுத்தவரை அவருக்கு சினிமாவில் வாகை சந்திரசேகர், ராதா ரவி, தியாகு உள்ளிட்டோர் நெருங்கிய நண்பர்கள். விஜயகாந்த்துக்கு பெண் பார்த்த பிறகு பிரேமலதாவின் உறவினர் ஒருவர் தியாகுவிடம் வந்து விஜயகாந்த்துக்கு பெண் கொடுக்கலாமா என்று கேட்கும் அளவுக்கு தியாகுவும், கேப்டனும் நெருக்கம். மேலும் தியாகுவை பல பிரச்னைகளில் இருந்தும் விஜயகாந்த் காப்பாற்றியிருக்கிறார்.
தியாகுவை காப்பாற்றிய விஜயகாந்த்: இந்தச் சூழலில் தியாகுவுக்காக சசிகலாவுக்கு விஜயகாந்த் ஃபோன் செய்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. ஒருமுறை திமுகவில் இருந்த தியாகு கட்சி கூட்டத்தை முடித்துவிட்டு வளசரவாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டுக்கு இரவு சென்றிருக்கிறார். அப்போது அதிமுக ஆட்சி நடந்துகொண்டிருந்திருக்கிறது. வீட்டுக்கு வந்தவருக்கு பெரும் அதிர்ச்சி. ஏனெனில் வெளியில் கிட்டத்தட்ட 500 போலீஸ்காரர்கள் நின்றுகொண்டிருந்தார்களாம்.
விஜயகாந்த்தின் மாஸ்: தியாகு என்னவென்று விசாரிக்க உங்களை கைது செய்ய சொல்லி ஆர்டர் வந்திருக்கிறது என்று காவல் துறையினர் சொல்லியிருக்கிறார்கள். அப்போது நள்ளிரவு 2 மணியிடம் ஆகிவிட்டதாம். உடனே கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு தொலைபேசியில் அழைத்திருக்கிறார் தியாகு. ஆனால் லைன் கிடைக்கவில்லையாம்.
என்ன செய்வதென்றே தெரியாமல் விஜயகாந்த்துக்கு ஃபோன் செய்தாராம். உடன்வே விஜயகாந்த், யாருடா அனுப்பிருக்கா என்று கேட்க; எஸ்.எஸ்.சந்திரன் சொல்லி டிடிவி தினகரன் அனுப்பிருக்காரு போல விஜி என்று தியாகு சொல்லியிருக்கிறார். உடனே விஜயகாந்த் சரி நீ ஃபோனை வை என்று சொல்லிட்டு மூன்று மணிக்கு சசிகலாவுக்கு ஃபோன் செய்து, 'அவர் என் நண்பர். அவருக்கு ஒன்னும் தெரியாது. கட்சி மீட்டிங்லதான் பேசினார்' என்று சொல்லிவிட்டு தியாகுவை அழைத்து சசிகலாவிடம் பேசிவிட்டேன் டா இனி எந்தப் பிரச்னையும் வராது என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டாராம். பிறகு மூப்பனாரும் உதவ அந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வந்தாராம் தியாகு. இதனை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











