விஜயகாந்த்தின் பலமும் பலவீனமும் என்ன தெரியுமா?.. அவரே என்ன சொல்லிருக்காரு பாருங்க
சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் இன்னும் சில காலம் உயிரோடு இருந்திருக்கலாமே என்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவானவர்களும் சோகத்துடன் கூறிவருகின்றனர். அதேபோல் நட்சத்திரங்களும் விஜயகாந்த் குறித்த தங்களது நினைவுகளையும் தொடர்ந்து பகிர்ந்துவருகின்றனர். இந்தச் சூழலில் தனது பலம் என்ன பலவீனம் என்ன என்பது குறித்து அவரே பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
விஜயகாந்த் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாதவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வசதியான வாழ்க்கையையே வாழ்ந்திருக்கலாம். ஆனால் சினிமா ஆசை கொண்டு சென்னைக்கு வந்து ரொம்பவே கஷ்டப்பட்டவர். அவர் சென்னையில் இறங்கும்போது அவருக்கு இரண்டே துணைகள்தான். ஒன்று திறமை துணையாக இருந்தது; இரண்டாவது அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் துணையாக இருந்தார். கரியரின் ஆரம்பத்தில் பல கஷ்டங்கள் பட்டு ஒருவழியாக ஹீரோவாகி மின்ன தொடங்கிவிட்டார்.

உதவும் குணம்: ஹீரோ ஆகிவிட்டால் பொதுவாக மற்றவர்களிடம் பழகுவதற்கு ஒரு வித தயக்கத்தை காட்டுவார்கள். ஆனால் விஜயகாந்த்தோ அப்படி இல்லை. ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு அடுத்ததாக பெரிய ஹீரோ என்றால் அது விஜயகாந்த்தான். அந்த நிலையில் இருந்தாலும் மற்றவர்களுடன் பழகுவதில் எந்த பந்தாவும் காண்பிக்காமல் ரொம்பவே எளிமையாக பழகினார். முக்கியமாக பலருக்கு பல உதவிகளை செய்தார்.
நட்சத்திரங்களுக்கும் உதவி: சாமானியர்களுக்கு மட்டுமின்றி இப்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், சூர்யா ஆகியோருக்கும் அவர்களது கரியரின் ஆரம்பத்தில் உதவி செய்தவர் விஜயகாந்த். அவர்கள் தவிர்த்து மன்சூர் அலிகான், போண்டா மணி, ஷாம் என அவர் உதவி செய்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். அதனை அனைவருமே நன்றியுடன் நினைவுகூர்ந்தார்கள்.
உடல்நலக்குறைவு: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த அவர் எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவருக்கு ஏற்பட்ட துரோகங்களும், சறுக்கல்களும் விஜயகாந்த்துக்கு மன உளைச்சலை கொடுத்தது. அதோடு உடல்நிலையும் சரியில்லாமல் போனது. அதனையடுத்து சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் ஆக்டிவ் அரசியலில் இருந்து விலகி முழு ஓய்வில் இருந்தார்.
உயிரிழப்பு: சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. தமிழ்நாடெங்கிலும் இருந்து அவரது உடலுக்கு நேரில் வந்து பலர் அஞ்சலி செலுத்தினர். முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் விஜயகாந்த் தனது பலம் மற்றும் பலவீனம் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "ஒருவரை முழுமையாக நம்பிவிடுவேன். அப்படி நம்பிய ஒருவர் எனக்கு துரோகம் செய்தால் ரொம்பவே வருத்தப்படுவேன். இதுதான் எனது பலவீனம். அதேசமயம் அதனை மறந்துவிட்டு வேறு வேலையை பார்ப்போம் என்று அடுத்த வேலை பார்க்க தொடங்கிடுவேன். அது என் பலம்" என்றார்.


Click it and Unblock the Notifications











