விஜயகாந்துக்காக கதை தேர்வு செய்த ரஜினி... படம் ஹிட் ஆனதும் சம்பளத்தை திருப்பிக் கொடுத்த கேப்டன்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் இருவரும் இதுவரை இணைந்து நடித்தது கிடையாது.
ஆனால், கடந்தாண்டு நடைபெற்ற பொன்னியின் செல்வன் பார்ட் 1 இசை வெளியீட்டு விழாவில். விஜயகாந்துடன் இணைந்து நடிக்க தனக்கு இருந்த விருப்பம் குறித்து ரஜினி பேசியிருந்தார்.
இந்நிலையில், ரஜினி தேர்வு செய்த ஒரு கதையில் விஜயகாந்த் நடித்து, அந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டானது தெரியவந்துள்ளது.
மேலும், அந்தப் படத்திற்காக விஜயகாந்த் சம்பளம் வாங்க மறுத்தது குறித்தும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மனம் திறந்துள்ளார்.
விஜயகாந்துக்காக கதை தேர்வு செய்த ரஜினி
கடந்தாண்டு நடைபெற்ற பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், ரஜினி, கமல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். அப்போது பொன்னியின் செல்வன் படத்தை கமல் எடுக்கவிருந்தது ரஜினி பேசியிருந்தார். அதில் கமல் ராஜராஜ சோழனாகவும், தான் வந்தியத்தேவனாகவும் நடிக்கவிருந்ததாகக் கூறினார். மேலும், ஆதித்ய கரிகாலனாக விஜயகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் நினைத்திருந்தாராம்.

பொன்னியின் செல்வன் மேடையில் விஜயகாந்த் குறித்து ரஜினி பேசியது ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலானது. ரஜினியும் விஜயகாந்தும் இதுவரை இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரஜினி தேர்வு செய்த ஒரு கதையில் விஜயகாந்த் நடித்த சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. விஜயகாந்த் நடிப்பில் 1987ம் ஆண்டு வெளியான திரைப்படம் கூலிக்காரன்.
ராஜசேகர் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்த இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. முக்கியமாக இந்தப் படத்தில் இருந்து தான் டைட்டிலில் 'புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்' என பெயர் போடப்பட்டது. விஜயகாந்த் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்த கூலிக்காரன் கதையை ரஜினி தான் தேர்வு செய்தாராம்.

இதுகுறித்து சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்த கலைப்புலி எஸ் தாணு மனம் திறந்துள்ளார். அதாவது ஒரு திரைப்பட விழாவில், ரஜினிகாந்த் தனது பேனரில் ஒரு படத்தில் நடிப்பதாகக் கூறியிருந்தாராம். அந்தப் படத்தின் கதையை எழுதவிருந்த யார் கண்ணன், சக்தி கண்ணன் இருவரும் சண்டைபோட்டு பிரிந்துள்ளனர். அதனால் அந்தப் படம் தாமதமானதால் இன்னொரு ஹீரோவை வைத்து ஒரு படம் தயாரிக்க ட்ரை பண்ணுங்க, நாம அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்றாராம்.
அப்போது விஜயகாந்திடம் கால்ஷீட் கேட்டுள்ளதாக கலைபுலி எஸ் தாணு கூறியுள்ளார். அதனைக் கேட்ட ரஜினி, ஒரு இந்திப் படம் குறித்து சொல்லி, அதன் ரீமேக்கில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளார். அதன்பின்னர் ரஜினி சொன்ன அந்த கதையே விஜயகாந்த் நடிப்பில் கூலிக்காரன் என்ற டைட்டிலில் படமாக வெளியானதாம். அதுமட்டும் இல்லாமல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டாகவும் அமைந்துள்ளது.
கூலிக்காரன் பட வெற்றியால் விஜயகாந்தின் மார்கெட் வேல்யூ 50 லட்சத்தில் இருந்து ஒரு கோடிக்கு சென்றுள்ளது. மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக தான் விஜயகாந்த் முதன்முதலாக விமானத்தில் சென்றுள்ளார். படம் வெற்றி பெற்ற பின்னர் சம்பளம் கொடுக்கச் சென்றுள்ளார் கலைப்புலி எஸ் தாணு. ஆனால் அட்வான்ஸ் கொடுக்கும் போது வாங்கிய தொகை மட்டும் போதும், இந்த பணம் வேண்டாம் என விஜயகாந்த் பெருந்தன்மையாக மறுத்துவிட்டாராம்.
அதன்பிறகும் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் பல படங்களில் நடித்துள்ளார் விஜயகாந்த். திரையுலகினருக்கு எந்த கஷ்டம் என்றாலும் உதவிக்கு முதல் ஆளாக வந்து நிற்கும், சம்பள விசயத்திலும் தயாரிப்பாளர்களுக்கு விட்டுக் கொடுத்து போவார் என பலரும் சொன்னது உண்டு. தற்போது அது கலைப்புலி எஸ் தாணுவின் அனுபவம் மூலமாகவும் உண்மை என தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











