எனக்கு அரசியல் தெரியாது.. நல்ல இடத்தை பிடிக்க வேண்டும்.. விஜய் இப்படியும் பேசியிருக்காரா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடவிருக்கிறது. முழுக்க முழுக்க அரசியலில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதால் கடைசியாக ஜன நாயகன் என்ற படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். இந்தச் சூழலில் விஜய் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அந்தப் படத்தில் கமிட்டானபோதே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் விஜய். கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த வருடம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் பேசிய விஜய் தனது கட்சியின் கொள்கை என்ன? அரசியல் எதிரி யார் என்பது குறித்து பேசினார். அவரது பேச்சில் பெரும்பாலும் தமிழ்நாட்டினை ஆளும் அரசான திமுகவிற்கு எதிரான கருத்துக்களே இடம்பெற்றிருந்தன.

திமுகவை விடாத விஜய்: முதல் மாநில மாநாட்டோடு அப்படிப்பட்ட பேச்சை விஜய் நிறுத்துவார் என்று பார்த்தால் அது தொடர்ந்துகொண்டே செல்கிறது. அதாவது எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டில் திருமாவளவனால் கலந்துகொள்ள முடியவில்லை. விஜய் கலந்துகொண்டார். அப்போது பேசிய விஜய், இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்குக்கூட திருமவாளவனால் கலந்துகொள்ள முடியவில்லை. எனில் அவருக்கு கூட்டணி கட்சிகள் எவ்வளவு அழுத்தம் கொடுத்திருப்பார்கள் என்று மறைமுகமாக திமுகவை விளாசினார்.
திமுகவினரின் பதிலடி: விஜய் தொடர்ந்து திமுகவை தாக்கி பேசுவதை பார்த்த அக்கட்சியினர் தங்கள் பங்குக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தார்கள். விஜய்யின் அரசியல் மூவ், அவரது பெர்சனல் விஷயம் என பலவற்றை தோண்டி எடுத்து விமர்சித்தார்கள். அதற்கு விஜய்யும் தன்னால் முடிந்த பதிலடியை கொடுத்துவருகிறார். அதேசமயம் விஜய் திமுகவை மட்டும்தான் விமர்சிக்கிறார். பாஜகவை மென்மையான போக்கோடு அணுகுகிறார் என்கிற விமர்சனமும் கடந்த சில நாட்களாக அதிகம் எழ ஆரம்பித்திருக்கின்றன.
உதாரணம்: அதற்கு உதாரணமாக சில நாட்களுக்கு முன்பு தனியார் இதழில் பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் ஒன்று வெளியானது. அதனைத் தொடர்ந்து அந்த இதழின் வலைதளத்தை ஒன்றிய அரசு முடக்கியது. அதற்கு பலரும் காத்திரமாக தங்களது எதிர்ப்பை பதிவு செய்த சூழலில்; விஜய்யோ, 'ஒன்றிய அரசு முடக்கியதாக கருத்து நிலவுகிறது' என்று மேம்போக்காக கடந்து சென்றார். அவரது இந்தப் பதிவுக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து; போகிற போக்கை பார்த்தால் தவெக பாஜகவின் பி டீம் என்பது உறுதியாகிவிடும் போல என்று ஓபனாக அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
அரசியல் தெரியாது: மேலும் விஜய்க்கு அரசியல் என்பதே தெரியவில்லை என்றும் பேச தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தஞ்சாவூரில் 18 ஏழை பெண்களுக்கு விஜய் திருமணம் செய்து வைத்தார். அப்போது அவரிடம் ரசிகர்கள் சிலர் ஒரு கேள்வியை முன்வைத்தார்கள். அதாவது அரசியலில் தளபதியாக உலா வருவீர்களா என்று கேட்டார்கள். அதற்கு பதிலளித்த விஜய், 'எனக்கு அரசியல் தெரியாது. சினிமாவில் சிறந்த இடத்தை பிடிக்க போராடுவதே எனது லட்சியம்' என்று பதிலளித்திருக்கிறார். இதனைப் பார்த்த விஜய்க்கு எதிர் தரப்பினர், 'அவர் அப்போதே சரியாகத்தானே சொல்லியிருக்கிறார்' என்று கிண்டல் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











