Vivek Birthday - விவேக் பிறந்தநாள்.. அவருக்கு உடலில் இருந்த பிரச்னை என்ன தெரியுமா?.. முழு விவரம் உள்ளே
சென்னை: Vivek Birthday (விவேக் பிறந்தநாள்) சின்னக்கலைவாணர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விவேக்கின் 62ஆவது பிறந்தநாள் இன்று.
விவேக் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நகைச்சுவை நடிகர். டிகிரி முடித்துவிட்டு அரசாங்க வேலை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு சினிமா மீது எப்போதும் தீராத ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக ஒருபக்கம் வேலையை பார்த்துக்கொண்டு மறுபக்கம் சினிமா வாய்ப்பையும் விடாமல் தேடிக்கொண்டிருந்தார். தீவிரமாக முயற்சிப்பவர்களை சினிமா எப்போதும் கைவிடாது என்ற விதி விவேக்குக்கும் எழுதப்பட்டிருந்தது.

மனதில் உறுதி வேண்டும்: தீவிர தேடுதலுக்கு பிறகு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் கடந்த 1987ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார் விவேக். முதல் படத்திலேயே அவருக்கு கிடைத்த கனமான கதாபாத்திரத்தை எந்த சுமையும் இல்லாமல் அல்லது சுமையை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மிகச்சிறப்பாக நடித்து முடித்தார். இதனால் கே.பாலசந்தரின் குட் புக்கிலும் இடம் பிடித்தார்.
தொடர்ந்து வாய்ப்புகள்: முதல் படத்தின் வெற்றி, விவேக்கின் சிறந்த நடிப்பை அடுத்து தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் இரண்டு வருடங்கள் கழித்தே அவருக்கு அடுத்த வாய்ப்பு கிடைத்தது. கே.பாலசந்தர் 1989ஆம் ஆண்டு இயக்கிய புது புது அர்த்தங்கள் படத்தில் மீண்டும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு அடுத்து வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைக்க ஆரம்பித்தன.
முன்னணி நகைச்சுவை நடிகர்: ஒருகட்டத்தில் விவேக் படு பிஸியாக மாறினார். ஒரே வருடத்தில் 8லிருந்து 10 படங்கள்வரை நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். இடை இடையே அவருக்கு போட்டியாக கருதப்பட்ட நடிகர் வடிவேலுவுடன் இணைந்தும் நடித்து அசத்தினார். வடிவேலுவின் பாணி தன்னை தாழ்த்திக்கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பது; விவேக்கின் பாணி தனது நகைச்சுவையில் சமூக கருத்துக்கள், முற்போக்கு கருத்துக்கள் போன்றவைகளை வைப்பது. அதனாலேயே விவேக்கின் காமெடி ஸ்டைல் அதிகம் ரசிக்கப்பட்டது.
ஸ்டைல்: அதேபோல் விவேக் ஹீரோ உருவம் கொண்ட காமெடி நடிகர். தன்னுடைய ஒவ்வொரு காமெடியிலும் தனது தனித்துவமான ஸ்டைலால் அப்ளாஸை அள்ளிவிடுபவர். உதாரணமாக மின்னலே படத்தில் மாதவனுடன் ஒரு காட்சியில் விவேக் தன்னுடைய வாயில் சிகரெட்டை தூக்கிப்போடுவதை பார்த்தால் யார் ஹீரோ என்ற குழப்பம் ஏற்படும். அந்த அளவுக்கு விவேக்கின் ஸ்டைல் இருக்கும்.
கூலர்ஸுக்கான காரணம்: விவேக்கின் ஸ்டைல் எப்படி ரசிக்கப்பட்டதோ அதேபோல் அவர் அணியும் கூலர்ஸ் கண்ணாடிகளும் வெகுவாக ரசிக்கப்பட்டன. இந்த சூழலில் கூலர்ஸ் அணிந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது விவேக்கால் இரவில் எவ்வளவு வெளிச்சம் இருந்தாலும் கண்ணை திறந்து பார்த்துவிட முடியுமாம். ஆனால் பகலில் வரும் சூரிய வெளிச்சத்தை அவரது கண்களை அகல திறந்து பார்க்க முடியாதாம். அந்த பிரச்னை அவருக்கு இருந்ததாம்.
அதனால் அதை சமாளிப்பதற்காக கறுப்பு கண்ணாடியில் பவர் ஏற்றி போட்டுக்கொண்டாராம். அதன் காரணமாக அவருக்கு நன்றாக பார்வை தெரியவும் செய்ததாம். இந்தத் தகவலை விவேக் சில வருடங்களுக்கு முன்பு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
விவேக் பிறந்தநாள்: தன்னுடைய வாழ்க்கையில் ஈகோவே இல்லாமல் எல்லோரிடமும் பழங்கிய விவேக் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டார். அவரது ஒரே ஏக்கம் கமல் ஹாசனுடன் நடிக்கவில்லையே என்பதுதான். அதுவும் இந்தியன் 2 படத்தின் மூலம் நிறைவேறியது. அந்தப் படத்தில் கமிட்டாகி சில காட்சிகள் நடித்தார். ஆனால் கடந்த 2021ஆம் ஆண்டு விவேக் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு இன்று 62ஆவது பிறந்தநாள் ஆகும்..


Click it and Unblock the Notifications











