என்ன வாழ்க்கையோ.. சிவகுமார் மாதிரி சூர்யா கெட்டுப்போகல.. ஆத்தாடி பிரபல நடிகர் இப்படி சொல்லிருக்காரே
சென்னை: சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் பலத்த அடி வாங்கியது. அவரது கரியரிலேயே இதுமாதிரியான ஒரு தோல்வி படத்தை சந்தித்ததில்லை என்கிற நிலைமைக்கு அந்தப் படம் சென்றது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அப்படம் மே மாதம் ஒன்றாம் தேதி வெளியாகவிருக்கிறது. நிச்சயம் இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்கிற நம்பிக்கை சூர்யா ரசிகர்களிடையே அதிகமாகவே இருக்கிறது.
சிவகுமாரின் மகனான சூர்யா நேருக்கு நேர் படத்தில் நடிகராக அறிமுகமானார். ஒழுங்காக நடனமாட தெரியவில்லை போன்ற விமர்சனங்களை முதல் படத்திலேயே அவர் சந்தித்தார். இருப்பினும் அதனை காதில் போட்டுக்கொள்ளாமல் தன்னுடைய பாதையில் தெளிவாக இருந்து திறமையை வளர்த்து படிப்படியாக வளர்ந்தார். அதன்படி நந்தா, காக்க காக்க, பிதாமகன், மௌனம் பேசியதே, பேரழகன் என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.
சிறந்த நடிகர்: அப்படி அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ஹிட்டடித்தன. அதுமட்டுமின்றி சூர்யாவுக்குள் மிகச்சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதை அந்தப் படங்கள் வெளிச்சம் போட்டு காண்பித்தன. இதனால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்துக்கு வந்தார் அவர். ஒருபக்கம் கமர்ஷியல், மறுபக்கம் திறமைக்கு தீனி போடும் கதைகள் என இரட்டை குதிரையில் லாவகமாக பயணம் செய்யும் ஹீரோக்களில் சூர்யாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் தோல்விகளில் சூர்யா: அவருக்கு கடைசியாக சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் மட்டுமே ஹிட்டாக அமைந்தன. அந்த இரண்டு படங்களுமே நேரடியாக ஓடிடியில் வெளியாகின. திரையரங்குகளில் வெளியான சூர்யா படங்களில் கடைசியாக அவருக்கு எப்போது ஹிட் கிடைத்தது என்று கேட்டால் அவரிடமும் சரி, அவரது ரசிகர்களிடமும் சரி மிக தாமதமாகத்தான் பதில் வரும் என்பதுதான் கள யதார்த்தம்.
கங்குவா கொடுத்த முரட்டு அடி: அதிலும் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த கங்குவா திரைப்படம் அவரது கரியரில் பெரிய அடியை கொடுத்துவிட்டது. அந்தப் படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக சூர்யா, ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் அப்படத்துக்கு ஏகப்பட்ட ஹைப்பை ஏற்றிவிட்டார்கள். ஆனால் அவர்கள் ஹைப் ஏற்றிவிட்ட அளவுக்கு படத்தில் ஒன்றுமே இல்லை என்பதுதான் பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருந்தது.எனவே கங்குவா 2 பிளான் அரங்கேறுமா என்பது சந்தேகமே என்று திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
கார்த்திக் சுப்புராஜின் ரெட்ரோ: கங்குவா கொடுத்த அடியால் உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் சூர்யா. அதன்படி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மே ஒன்றாம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில்தான் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கங்குவா கற்று தந்த பாடத்தின் காரணமாக விழாவில் சூர்யா தனது பேச்சி கொஞ்சம் அடக்கியே வாசித்தார்.

சிவகுமார் பேச்சு: ஆனால் அந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக அமைந்தது சூர்யாவின் தந்தை சிவகுமாரின் பேச்சு. அவர் பேசுகையில், "சூர்யாவின் கண்கள் தமிழ்நாட்டு பெண்களின் தூக்கத்தை கெடுக்கும் என்று என்னிடம் ஒரு தயாரிப்பாளர் கூறினார். அதேபோல் இந்த சினிமாவில் சூர்யாவுக்கு முன்னர் சிக்ஸ் பேக் வைத்த ஹீரோவோ இல்லை அவருக்கு பின் சிக்ஸ் பேக் வைத்த ஹீரோவோ இருக்கிறார்களா" என்று கேள்வி எழுப்பி அதிர்ச்சி கிளப்பினார். அதனை வைத்து பலரும் சிவகுமாரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தார்கள்.
ட்ரெண்டாகும் விவேக்கின் பேச்சு: இந்நிலையில் சிவகுமார் குறித்து விவேக் பேசிய பழைய வீடியோ ஒன்று திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது. ஒரு பட விழாவில் பேசிய அவர், "சிவகுமாரால்தான் பான் பராக், சிகரெட், டீ போன்ற வியாபாரங்கள் படுத்துவிட்டன. முக்கியமாக தி.நகரில் இருக்கும் வைன் ஷாப் எல்லாம் இழுத்து மூடப்பட்டுவிட்டன. ஏனெனில் அவருக்கு எந்தப் பழக்கமும் இல்லை. என்ன வாழ்க்கையோ; ஆனால் சிவகுமார் போல் சூர்யா கெட்டுப்போகவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











