தனது மகனையும் மகளையும் பேசிக்க கூடாதுனு சொன்ன பாக்யராஜ்.. எதுக்கு தெரியுமா? அப்படி என்ன ஆச்சு?
சென்னை: திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் மறைவை அடுத்து, அவரது வாழ்க்கையுடன் தொடர்புடைய பல அரிய நினைவுகளும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு அவரது 50 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விழாவில், குடும்பத்துடன் கலந்து கொண்டு பகிர்ந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் பாக்யராஜ், அவரது மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு மற்றும் மகள் சரண்யா ஆகியோர் மேடையில் ஒன்றாக அமர்ந்து பல குடும்ப நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அப்போது சிறுவயதில் சாந்தனுவும் சரண்யாவும் அடிக்கடி குத்துச்சண்டை போட்டி நடத்துவது போல சண்டை போட்டுக் கொள்வார்கள் என்று குடும்பத்தினர் சிரித்தபடியே நினைவு கூர்ந்தனர்.
"இனிமேல் இரண்டு பேரும் பேசக் கூடாது": குழந்தைகள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டே இருந்தால், ஆரம்பத்தில் அமைதியாக இருப்பாராம் பாக்யராஜ். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்துவிட்டால், இருவருக்கும் நடுவில் நின்று கொண்டு, "நீ அந்த ரூமுக்கு போ... நீ இந்த ரூமுக்கு போ..." என்று பிரித்து அனுப்பிவிடுவாராம். அதோடு நிற்காமல், "இனிமேல் இரண்டு பேரும் பேசிக்கக் கூடாது" என்று கண்டிப்பாக உத்தரவும் போடுவாராம். இப்படியான சம்பவங்கள் வீட்டில் பல முறை நடந்திருக்கிறது என்று குடும்பத்தினர் நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டனர்.

அப்பாவுக்கு மகள்.. அம்மாவுக்கு மகன்: அந்த மேடையிலேயே குடும்பத்தினர் மேலும் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் பகிர்ந்தனர். பாக்யராஜுக்கு மகள் சரண்யா மீது அதிக பாசம் என்றும், பூர்ணிமாவுக்கு மகன் சாந்தனு மீது அதிக பாசம் என்றும் தெரிவித்தனர். இதைக் கேட்ட அரங்கமே சிரிப்பில் மூழ்க, பாக்யராஜும் வழக்கமான தனது நகைச்சுவை பாணியில் அதை ரசித்தார்.
பாக்யராஜ் மறைவுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் வேகமாக பரவி வருகின்றன. "குழந்தைகள் சண்டை போட்டால் வேறு எப்படி சமாளிப்பது?", "ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் சம்பவத்தை பாக்யராஜ் சார் நகைச்சுவையாக கையாண்டிருக்கிறார்", "திரையில் மட்டும் அல்ல, நிஜ வாழ்க்கையிலும் திரைக்கதை மன்னனாகத்தான் இருந்திருக்கிறார்" என்று ரசிகர்களும் இணையவாசிகளும் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications