மகன் பட பூஜை.. கூப்பிட்ட விஜயகாந்த்.. விஜய் செய்த செயல்.. கோபமான கேப்டன்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: கோலிவுட்டின் மிகப்பெரிய ஹீரோக்களில் ஒருவர் விஜய். ஜனநாயகன் படத்தோடு சினிமாவிலிருந்து விலகும் முடிவில் இருக்கிறார். அநேகமாக மே மாதம் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. கண்டிப்பாக கடைசி படத்தை திருவிழா போல் கொண்டாடுவதற்கு தயாராக இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் விஜயகாந்த் உயிரோடு இருந்தபோது விஜய் மீது அவர் கோபப்பட்ட சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.
தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் துணையோடு சினிமாவுக்கு வந்தவர் விஜய். அதனையடுத்து தனது திறமையை வளர்த்து; சரசரவென்று டாப் 3 ஹீரோக்களில் ஒருவராக மாறினார். ஒருகட்டத்தில் அவரது படங்கள் அனைத்தும் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்வதாகவும்; எனவே இனிமேல் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்றும் அவரது ரசிகர்கள் கூறினார்கள். அப்போதிருந்து ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே சோஷியல் மீடியாக்களில் மிகப்பெரிய போரே உருவாவது வழக்கமாகிவிட்டது. ஒருவரையொருவர் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசிவருவதும் அதிகரித்திருக்கிறது.

அரசியல் பயணம்: தொடர்ந்து சினிமாவில் தீவிரமாக இயங்கிவந்த விஜய்; தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். தனக்கு இருக்கும் ரசிகர்களின் படையை கொண்டு கோட்டைக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தனியாக தேர்தலை சந்திக்கவிருக்கிறார். அடுத்த மாதம் தேர்தல் நடக்கும் சூழலில்; விஜய்யை சுற்றி சங்கீதா பிரச்னை, திரிஷா பிரச்னை பெரிதாக முளைத்திருக்கின்றன. அவற்றை எப்படி அவர் எதிர்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பது சுவாரசியம் நிறைந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
விஜயகாந்த் துணை: இதற்கிடையே விஜய் சினிமாவில் இப்போது அடைந்திருக்கும் உயரத்துக்கு அவரது திறமை மட்டுமின்றி மற்றவர்களின் பங்களிப்பும் இருக்கவே செய்கிறது. முக்கியமாக அவர் கரியரை ஆரம்பித்தபோது; தொடக்கத்தில் சில படங்கள் சரியாக போகவில்லை. உடனே ஒரு பிளான் போட்ட சந்திரசேகர், பி&சி சென்ட்டர்களில் விஜய் சென்று சேர வேண்டுமென்றால்; ஒரு பிரபலமான ஹீரோவின் துணை தேவை என்று முடிவு செய்தார். அதன்படி விஜயகாந்த்தையும், விஜய்யையும் வைத்து செந்தூரப்பாண்டி படத்தை இயக்கினார். படம் எதிர்பார்த்தபடியே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.
விஜய்யிடம் கோரிக்கை: விஜயகாந்த் இப்போது உயிரோடு இல்லை. அவரது மகன்களில் ஒருவரான சண்முக பாண்டியன் கொம்புசீவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். விஜய்க்கு எப்படி விஜயகாந்த் கரியரின் ஆரம்பத்தில் உதவி கை தூக்கிவிட்டாரோ; அதேபோல் விஜயகாந்த் மகனுக்கும் விஜய் ஏதாவது ஒரு உதவியை செய்ய வேண்டும். முடிந்தால் ஒரு படத்தில் கேமியோ ரோலில்கூட நடிக்கலாம் என கருத்துக்கள் எழுந்தன. ஆனால் விஜய் அதையெல்லாம் சட்டை செய்யவே இல்லை என்பது எதார்த்தமான உண்மை. இதனால் கேப்டனின் ரசிகர்கள் அவர் மீது கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.
பி.டி.செல்வக்குமார் பேட்டி: இந்நிலையில் விஜய் மீது விஜயகாந்த் கோபப்பட்ட விஷயம் தெரியவந்திருக்கிறது. விஜய்யின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வக்குமார் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "தன்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர் வீட்டுக்கே போகாதவர் விஜய். நாகி ரெட்டியின் மகன் இறப்புக்கு போகவில்லை. காவல் பட தயாரிப்பாளர் வீட்டுக்கும் போகவில்லை. விஜய்க்காக விஜயகாந்த் செந்தூரப்பாண்டி படம் செய்யவில்லை என்றால் இவர் வளர்வதே பெரிய தடுமாற்றமாக இருந்திருக்கும், பி&சி சென்ட்டர்களில் இவர் சென்றிருக்கவே மாட்டார்.
விஜயகாந்த் கோபம்: அப்படிப்பட்ட விஜயகாந்த் தனது மகன் பட பூஜைக்கு விஜய்யை அழைத்தார். ஆனால் அவர் அதற்கும் செல்லவில்லை. விஜய் தரப்பிலிருந்து நான்தான் சென்று அந்த விழாவில் பூங்கொத்தை கொடுத்தேன். கேப்டன் என்னை பார்த்ததும் எங்கய்யா விஜய் என கேட்க; வரவில்லை என தெரிந்தவுடன் கோபத்துடன் முகத்தை திருப்பிக்கொண்டார். விஜய் வருவார் என்று விஜயகாந்த் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். எதற்குமே விஜய் போகமாட்டார். தன்னைத்தானே பெரிய இது என்று அப்போவே நினைக்க ஆரம்பித்துவிட்டார். விஜய் மீது இருக்கும் வெறுப்பால்தான் அவர் மீது செருப்பை வீசியிருப்பார்கள் விஜயகாந்த் ஆதரவாளர்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications















