வீட்டில் மரியாதையே இல்லை.. சண்டை அதிகம் ஆகிவிட்டது.. யோகிபாபு வேதனை.. இவ்வளவு கஷ்டமா?
சென்னை: யோகிபாபு கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். காமெடி ஆக்டராக மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் மறுபக்கம் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. ஒரு வருடத்தில் எக்கச்சக்க படங்களில் நடித்துவரும் அவர்; தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்தவர் யோகிபாபு. அதிலிருந்துதான் சந்தானம் உள்ளிட்டோர் எல்லாம் திரைத்துறைக்கு வந்து கோலோச்சினார்கள். அவர்கள் மாதிரியே தானும் ஒரு நாள் சினிமாவில் பெரிய அளவில் வெல்வேன் என்று அயராது உழைத்துக்கொண்டிருந்த அவருக்கு கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான யோகி படத்தில் சிறிய வேடம் கிடைத்தது. அப்போதிருந்துதான் யோகிபாபுவாக மாறினார்.

முன்னணி காமெடி நடிகர்: யோகி படத்துக்கு பிறகு பட்டத்து யானை, சூதுகவ்வும், வீரம், மான் கராத்தே என்று பல படங்களில் நடித்தார். தனது வித்தியாசமான ஹேர் ஸ்டைல், திறமையான நடிப்பு காரணமாக ரசிகர்களை உடனே கவரவும் செய்துவிட்டார். அதுமட்டுமின்றி வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோர் காமெடி ட்ராக்கிலிருந்து ஒதுங்க; அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்தி; படத்துக்கு படம் தன்னுடைய காமெடியில் வெரைட்டி காட்டி சரசரவென்று வளர்ந்தார்.
கதையின் நாயகன்: தொடர்ந்து காமெடி கேரக்டரில் நடித்துவந்த அவர்; நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அப்படத்துக்கு பிறகு மடோன் அஷ்வின் இயக்கத்தில் மண்டேலா படத்திலும் லீடு ரோலில் நடித்தார். அதுவும் ஹிட்டாகி தேசிய விருது வென்றது. வரிசையாக ஹிட்டானதால் தொடர்ந்து லீடு ரோலில் நடித்தாலும் அந்த இரண்டு படங்கள் மாதிரி வெற்றியை மற்ற படங்கள் கொடுக்கவில்லை.
விட்டுக்கொடுக்காத யோகிபாபு: ஹீரோவாக நடித்து வெற்றி கண்டுவிட்டால் அந்தப் பாதையிலிருந்து நகர்வதற்கு பெரும்பாலும் பலரும் யோசிப்பார்கள். ஆனால் இவரோ ஒருபக்கம் கதையின் நாயகனாக நடித்தாலும் மறுபக்கம் காமெடி ரோலையும் செய்துவருகிறார். அப்படி அவர் ஜெயிலர், மாவீரன், குட் பேட் அக்லி, டூரிஸ்ட் ஃபேமிலி, தலைவன் தலைவி உள்ளிட்ட படங்களில் காமெடி ரோல் மட்டுமின்றி கேரக்டர் ரோலையும் ஏற்றார். மேலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக இருக்கிறார்.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் அவர், "நான் வேலை இல்லாமல் நிறைய நாட்கள் இருந்திருக்கிறேன்.லொள்ளு சபாவும் சரியாக போகவில்லை. வீட்டிலும் மரியாதை இல்லை. நண்பர்கள் என்னிடம் பேசுவதற்குகூட யோசிப்பார்கள். ஏன் என்றால் அவர்கள் எல்லாம் வேலைக்கு சென்றுகொண்டிருந்தார்கள். நான் போய் நின்றால்கூட திரும்பிக்கொள்வார்கள். வீட்டில் சண்டையும் அதிகம் ஆகிவிட்டது. மனவருத்தம் ஓவர் ஆகி பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் அமர்ந்து என்ன செய்யலாம் என யோசித்தபோது எனது கையில் 200 ரூபாய் இருந்தது. நேராக திருத்தணிக்கு பஸ் ஏறிவிட்டேன். அங்கு மலை மேல் தனியாக படுத்து வேண்டிக்கொண்டு வந்தேன். மாற்றம் நடந்தது. முருகன் கொஞ்சம் கொஞ்சமாக தூக்கிவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications










