யுகபாரதியின் மகளுக்கு என்ன ஆச்சு.. தலைவலியாக தொடங்கிய பிரச்னை.. வேதனையில் உருவான பாடல்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் கடந்தாண்டு அதிக வசூல் ஈட்டிய படங்களில் முதல் வரிசையில் இருக்கின்றன. இதுவரை இல்லாத அளவிற்கு சிவகார்த்திகேயன் கரியரில் மிகப்பெரிய ஹிட் படமாகவும் அமைந்தது. படத்தின் கதையும் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்ததால், மீண்டும் ஒருமுறை பார்த்து ரசிக்க திரையரங்கிற்கு படையெடுத்தனர் ரசிகர்கள். படம் வெளியாவதற்கு முன்பே ஏய் மின்னலே, வெண்ணிலவு சாரல் நீ பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தன. இப்பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. ஆனால், வெண்ணிலவு சாரல் பாடலுக்கு பின்னால் இவ்வளவு பெரிய சோக கதை நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஆனந்தம் படத்தில் இடம்பெற்ற பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் பாடல் மூலம் தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் யுகபாரதி, ஆனால், இவரது இயற்பெயர் பிரேம் குமார். பாரதியார் மீது கொண்ட பற்றினால் தன் பெயரை யுகபாரதி என மாற்றிக்கொண்டார். ஆனந்தம் படத்திற்கு பிறகு பல படங்களில் பாடல்களை எழுதினாலும் பெயரும் புகழும் கிடைத்தது இல்லை. யுகபாரதியும் இமானும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளனர். இருவருக்குமே மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் மைனா. இப்படத்தில் இடம்பெற்ற மைனா மைனா நெஞ்சுக்குள்ளே, சிங்கு சிக்கா பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. இப்பாடல் பலரது காதல் ரிங்டோனாகவே மாறிவிட்டன.

ஹிட் காம்பினேஷன்: அதன் பிறகு இவர்களது கூட்டணியில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், றெக்க, ரஜினிமுருகன், கும்கி, கயல், விஸ்வாசம், அண்ணாத்த, வெள்ளைக்கார துரை, மருது உள்ளிட்ட பல படங்களில் மக்கள் கொண்டாடும் ஹிட்டான பாடல்களை அள்ளி கொடுத்திருக்கின்றனர். இளையராஜா - கண்ணதாசன், வைரமுத்து, பழனிபாரதி, ஏ.ஆர்.ரஹ்மான் - வைரமுத்து காம்பினேஷனை போன்று இவர்களது காம்பினேஷனில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட்டாக அமைந்திருக்கிறது. பல இசையமைப்பாளர்களுடன் யுகபாரதி பணியாற்றி இருந்தாலும் இமான் - யுகபாரதி என்றும் தனித்துவமான கூட்டணியாக இருக்கிறது. அவர் உள்மனதை புரிந்துகொண்ட பாடலாசிரியர் இவர்தான் என்ற இணக்கம் இருவருக்கும் இருக்கிறது.
யாரும் அறிந்திடாத மன்மத ராசா யுகபாரதி. இவர் தமிழ் சினிமாவில் 1000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானுடன் இதுவரை பணியாற்றியது இல்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. அதுவும் மாமன்னன் படம் மூலம் நீங்கியது. அந்த ஆண்டின் சிறந்த பாடலே இவர் எழுதிய வரிகள் தான். நெஞ்சமே நெஞ்சமே பாடலை கேட்காத காதுகள் இருக்கிறதா, பாட்டை கேட்டு கசியாத இதயம் இருக்கிறதா முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்க வைத்த பாடல்களாய் அமைந்தது. இவர் வரிகளில் ஹிட் பாடல்களை கணக்கிட்டால் நாட்களே பத்தாது.

எள்ளுவய பூக்களையே: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசூரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றது. அசுரன் படத்தில் இடம்பெற்ற எள்ளுவய பூக்களையே பாடலை கேட்டு கண்ணீர் விடாதவர்கள் எவரும் இல்லை. இப்பாடலில் வரிகள் மனதை கசக்கி பிழிந்தெடுத்தன. அனைவரது மனசாட்சியாக இப்பாடல் ஒலிக்க தொடங்கியது. இறப்பு நிகழ்வில் இடம்பெறும் அளவிற்கு எள்ளுவய பூக்களையே பாடல் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், இப்பாடல் உருவான விதம் குறித்து தெரிவித்த யுகபாரதி, இப்பாடல் ஒரு தலைவனை நினைத்து எழுதினேன். ஒரு நாட்டின் போராளி அல்லது தலைவன் இறந்துவிட்டாலும் அவர் உயிருடன் இருப்பதாக மக்கள் நம்பிக்கொண்டிருப்பார்கள். அவர்களது நம்பிக்கையின் ஒளியாக பிறந்த பாடல் தான் எள்ளுவய பூக்களையே. இப்பாடல் உருவாகும் போதே மக்கள் கொண்டாடும் பாடலாக இருக்கும் என்று கணித்தேன் அது நடந்து விட்டது என யுகபாரதி தெரிவித்தார்.

மகளை நினைத்து உருவான பாடல்: என் மகளை நினைத்து பல பாடல்களை சினிமாவில் எழுதியிருக்கிறேன் அப்போது என் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. அதில் ஒரு பேரன்பு கொட்டி கிடந்தது. ஆனால், இப்போது நான் சொல்லும் பாடல் வரிகள் பலருக்கும் இன்பத்தை அளித்திருக்கும். சிலருக்கு தந்தை - மகளுக்குமான பேரன்புமிக்க பாடலாக அமைந்திருக்கும். ஆனால், எனக்கு அது மிகவும் வேதனை தரக்கூடிய வரிகளாக இருந்தது என யுகபாரதி தெரிவித்தார். அமரன் படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவு சாரல் நீ பாடல் வரிகளை மருத்துவமனையில் என் மகளை நினைத்து வேதனையில் எழுதியதாக யுகபாரதி தெரிவித்தார். நானும் ஒரு பிள்ளைக்கு தந்தை தான். ஆனால், அந்த பாடல் திரையில் வரும்போதெல்லாம் என் மகளின் நினைவுகள் வந்து செல்லும். திரைப்படத்தில் வந்து செல்லும் காட்சியை போல் நடந்து முடிந்திருக்கிறது என யுகபாரதி கூறினார்
கண் கலங்கிய யுகபாரதி: கடந்தாண்டு வெளியான அமரன் படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவு சாரல் நீ பாடல் உருவான விதத்தை யுகபாரதி கூறிய போது கண்கலங்கி விட்டார். பாடலாசிரியர் யுகபாரதியின் மகள் கடந்தாண்டு 10ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்தார். இதுகுறித்து கூறிய யுகபாரதி, தேர்வு எழுதுவதற்கு முன்பு தலைவலி என்று தெரிவித்தபோது நாங்க சாதாரண தலைவலி என்றுதான் நினைத்தோம். ஆனால், அந்த வலி கழுத்து, முதுகு என பரவி கண் வரை பாதித்தது. பார்ப்பதெல்லாம் இரண்டாகத் தெரிகிறது அப்பா என்று சொன்னாங்க. நாங்களும் மருத்துவரை சந்தித்து பரிசோதித்து பார்த்தோம். அப்போது மருத்துவர் எனது மகளின் முதுகுத்தண்டில் ஊசியை போட்டுவிட்டு. உங்கள் மகளுக்கு 6 நாட்களில் பார்வை சரியாகலாம். அல்லது 6 ஆண்டுகள் கூட ஆகலாம் என தெரிவி்த்தார். இதைக் கேட்டு, நானும் என் மனைவியும் மிகுந்த வேதனை அடைந்தோம் என யுகபாரதி தெரிவித்தார். தற்போது குணமடைந்து நன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் வேதனை: பாடலாசிரியர் யுகபாரதியின் மகளுக்கு இப்படியொரு நிகழ்வு நடந்ததை அறிந்த அவரது ரசிகர்கள் யுகபாரதிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அவரது மகளை பற்றி விசாரிக்க தொடங்கியுள்ளனர் நெட்டிசன்கள். வெண்ணிலவு சாரல் நீ பாடலில் வாழ்வில் மறக்க முடியாத வரிகளை தந்துள்ளீர்கள்.இப்பாடலுக்கு பின்பு தான் என் மகள் மீதான பேரன்பை புரிந்துகொண்டேன் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர். இப்பாடலை கேட்காமல் தூங்குவதும் இல்லை சார் எனவும் தெரிவி்ததுள்ளனர். உங்கள் மகள் நலமாக இருக்கிறாரா எனவும் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











