Tap to Read ➤

சின்னக்கலைவாணர் விவேக்கின் ஓராண்டு நினைவு தினம்

சினிமாவில் சீர்த்திருத்த கருத்துகளை கலைவாணர் வழியில் பரப்பிய நடிகர் விவேக் மறைந்து ஓராண்டு ஆகிறது.
விழிப்புணர்வு கருத்துகளை தனது நடிப்பில் பதிய வைத்தவர், விழிப்புணர்வுக்காக போட்ட தடுப்பூசிக்கு அடுத்த நாள் மாரடைப்பால் மரணமடைந்தது ரசிகர்களுக்கு சோகமான ஒன்று.
உயிருடன் வந்து ஒரு வார்த்தை பேசுங்கள் என்று சொன்னால் என் மரணத்திற்கு தடுப்பூசியை முடிச்சுப் போடாதீர்கள் என்று சொல்லி கண்டித்திருப்பார், அவர்தான் விவேக்.
நடிகர் விவேக் மறைந்து ஓராண்டு ஆகிறது ''ஒரு நடிகன் நடிப்பைத் தாண்டி தன்னை ஆளாக்கிய சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் அதை செய்தவர் விவேக்'' என்ற கமல் ஹாசன் விவேக் பற்றி ஒருமுறை சொன்னார்.
சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் அவர் திரைப்படத்தை முற்போக்கு கருத்துக்களுக்கு பயன்படுத்தியது யாருக்குமே கிடைக்காத 'சின்னக்கலைவாணர் என்கிற பெயரை அவருக்கு பெற்றுத்தந்தது.
பொதுவாழ்வில் தமிழக மக்களுக்கு மேடை நாடகம், சினிமா மூலம் சிறந்த சீர்த்திருத்த கருத்துகளை சொன்ன கலைவாணர் மறைந்தபோது அவரது வயது 48 மட்டுமே, அவரது இளவல் சின்னக்கலைவாணர் விவேக் 59 வயதில் மரணத்தை தழுவினார்.
அவரது மரணத்துக்கு 6 ஆண்டுகளுக்கு முன் அவரது மகன் மரணத்தின் போதே பாதி இறந்துபோனார் என்பார்கள் நெருக்கமானவர்கள், வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் புத்திர சோகம் அவரை மிகவும் வாட்டியது.
விவேக்கின் மகன் பிரசன்னா அவரது மிகப்பெரிய கனவாக இருந்தார். இரண்டு மகள்கள் பிறந்த நிலையில் மூன்றாவதாக பிறந்த மகன் பிரசன்னா மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் விவேக்.
இசையார்வம் மிகுந்த மகன் 18 வயதில் சிறந்த இசையமைப்பாளராக வருவான் என எதிர்ப்பார்த்திருந்த நிலையில் 13 வயதில் டெங்குக் காய்ச்சலால் மரணம் அடைந்தது அவரை மிகவும் உடைத்துப் போட்டது.
தனது அன்பிற்குரியவர் இழப்பை பகிர்பவர்கள் வார்த்தையில் எவ்வளவு வருத்தமும், மிகுந்த வலியும் இருக்கும் என்பதை அவரது மகன் மரணத்திற்கு பின் விவேக் மகனுக்காக எழுதிய கட்டுரையே சாட்சி.
அவ்வளவு சோகத்திலும் பெற்றோர்களே உங்கள் நிறைவேறா கனவுகளை, எண்ணத்தை பிள்ளைகள் மீது திணித்து அவர்களை முடக்கிவிடாதீர்கள் என்று அதில் கூறியிருப்பார்.
“எல்லோரையும் சிரிக்க வைத்தவர் தனது மகன் மரணத்திற்கு பின்னர் ஒருவித அழுத்ததுடன் வாழ்ந்தது சோகம்” .தனது சோகத்தை மறக்க சமூக பணிகளில் இன்னும் தீவிரம் காட்டினார் விவேக்.
அப்துல் கலாம் மீது மிகுந்த பற்றுகொண்ட அவர் மரம் நடும் லட்சியத்தை உருவாக்கி அதற்காக பாடுபட்டு வந்தார். அப்துல் கலாமின் பெயரால் ஒரு கோடி மரம் நடும் இயக்கத்தை தொடங்கினார். அவர் மறைந்தபோது 33.5 லட்சம் மரங்கள் நட்டிருந்தார்.
கலைஞன் அவன் சிந்தனை விசாலமடைந்தால் அவன் மூலம் கிடைக்கும் கலையும் விசாலமாக இருக்கும் இதற்கு பல கலைஞர்கள் உதாரணம் விவேக்கும் அந்தவரிசையில் இருந்தார்.
விவேக்கின் மரணம் அவரது செயல்பாட்டுக்கு தடை போட்டாலும் அவரால் நடப்பட்ட 33.5 லட்சம் மரங்களால் பூமி உள்ளவரை மனிதர்களுக்கு சேவை செய்யும். அவரது சிந்தனை பலர் மூலம் பரவலாகி மரம் நடுதல் தொடரும்.