Tap to Read ➤

பீஸ்ட் மினி ரிவ்யூ..

விஜய் படமா? நெல்சன் படமா ? அவெஞ்சர் ஹீரோ அளவுக்கு விஜய்யின் காட்சிகள் உள்ளது என பீஸ்ட் பற்றி விமர்சனம் எழுந்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், சாக்கோ, விடிவி கணேஷ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி உள்ளது பீஸ்ட் திரைப்படம்.
கோலமாவு கோகிலா, டாக்டர் என இரு காமெடி படங்களை கொடுத்த இயக்குநர் நெல்சன் பீஸ்ட் படத்திலும் காமெடி+ஆக்‌ஷனை கொடுத்து ரசிகர்களை ஹேப்பி ஆக்க முயற்சித்துள்ளார்.
வீரராகவன் இன்ட்ரோ ராஜஸ்தானின் ஜோத்பூரில் படம் ஆரம்பிக்கிறது. பறக்கும் பலூனை பிடித்து குழந்தையின் கையில் கொடுத்து எண்ட்ரி ஆகிறார் விஜய்.
திடீரென நடக்கும் பயங்கரவாத தாக்குதலில் எதிரிகளை பறந்து பறந்து பந்தாடுகிறார் விஜய். ரா அதிகாரி நேரடியாக ஆப்ரேஷனில் இறங்குவார்களா? மூச் அதையெல்லாம் கேட்கக்கூடாது.
ஸ்னைபர் கன் எடுத்து பயங்கரவாதி ஒருவரின் காரை சுட்டு வீழ்த்தும் போது, கார் வெடிக்க குழந்தை இறந்துவிட்டதால் மனம் வருந்தி ரா உளவுப்பிரிவை விட்டு வெளியேறுகிறாராம் விஜய்.
துப்பாக்கி படத்திலும் பஸ் பாம் பிளாஸ்ட்டின் போது விஜய் பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றாமல் விட்டதை நினைத்து ஃபீல் பண்ணுவார் ரிப்பீட்டு.
விடிவி கணேஷ் நடத்தும் செக்யூரிட்டி சர்வீஸில் பூஜா ஹெக்டே இருக்கிறார். விஜய் அறிமுகத்துக்கு பின் அங்கு விஜய்யை சேர்த்து விடுகிறார்.
செக்யூரிட்டி சர்வீஸில் விஜய் சேர்ந்தவுடன் ஷாப்பிங் மால் செக்யூரிட்டி காண்ட்ராக்ட் வருகிறது. அந்த மால்-ஐ பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர்.
தங்கள் பயங்கரவாதி தலைவனை விடுவித்தால் தாங்கள் பணைய கைதிகளாக வைத்துள்ள மக்களை உயிரோடு விடுவோம் என மிரட்டுகின்றனர்.
வீரராகவனும் அங்கே அவர்களுடன் பிணையக் கைதியாக உள்ளார். பிணைக்கைதிகளை மீட்டாரா? தீவிரவாத தலைவன் விடுவிக்கப்பட்டானா என்பது மீதிக்கதை.
நெல்சன் படமாக இருந்தும் யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி வீணடிக்கப்பட்டுள்ளனர். விடிவி கணேஷ் இந்த படத்தில் தனக்கே உரிய பாணியில் காமெடி செய்து அனைவரையும் கவர்கிறார்.
செல்வராகவன் பயங்கரவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரியாக நடித்துள்ளார். இடையிடையே வீரராகவன் செய்வது சரி என சொல்கிறார்.
பீஸ்ட் படத்தின் பிளஸ் என்று பார்த்தால் இயக்குநர் நெல்சனின் டைமிங் காமெடி மட்டுமே, இது விஜய் படமா? நெல்சன் படமா என ரசிகர்கள் குழம்பிப்போய் வேற லெவல் என்று வழக்கமாக சொல்லிவிட்டுச் செல்கின்றனர்.
நடிகர் விஜய் சண்டைக்காட்சிகள் சிறப்பாக உள்ளது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு மிரட்டுகிறது. கிரணின் மால் செட் பிரம்மிக்க வைக்கிறது.
எடிட்டிங் இன்னும் சற்றே விறுவிறுப்பாக இருந்திருக்கலாம். அனிருத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் தான் படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லலாம்.
பீஸ்ட் மைனஸ் பீஸ்ட் வீரராகவன் பல இடங்களில் போக்கிரி படத்தை ஞாபகப்படுத்துவது படத்தின் பெரிய மைனஸ் ஆக தெரிகிறது.
பயங்கரவாதிகளில் ஒருவராக வரும் சாக்கோ வில்லனாக மிரட்டுவார் என பார்த்தால் திடீரென ஹீரோவுக்கு உதவுவது போல் காட்சி காதில் பூ.
ஏற்கனவே எதிர்பார்த்ததை போலவே டாக்டர் படத்தைத் தொடர்ந்து பீஸ்ட் படத்திலும் சீரியஸான காட்சிகளுடன் காமெடியை வைத்து இயக்குநர் நெல்சன் நம்மை சிரிக்கச் சொல்கிறார்.
தீவிரவாத தலைவனை பிடிக்க விஜய், சைக்கிளை வாடகைக்கு எடுப்பதுபோல் இந்தியன் ஏர்-ஃபோர்ஸ் ஜெட்டை எடுத்துச் சென்று தீவிரவாதியை பிடித்து திரும்புகிறார்.
இடையில் வானில் சண்டை பழைய ஜேம்ஸ்பாண்ட் ரோஜர் மூர் படம் போல்.
தமிழ் சினிமா ஹீரோக்களை சூப்பர் ஹீரோக்களை தாண்டி மின்னல் முரளி ரேஞ்சுக்கு அவெஞ்சர்ஸ்களாக காட்ட நெல்சன் எதற்கு என்கிற கேள்விதான் அனைவர் முன் நிற்கிறது.
மொத்தத்தில் இது விஜய் ரசிகர்களுக்காக ஒரு விஜய் ரசிகர் எடுத்த லாஜிக் பார்க்காத பொழுதுபோக்கு படம் எனலாம்.