Tap to Read ➤

வன்முறையை நம்பும் தமிழ் படங்கள்...இது நல்லதா?

சமீப காலமாக வலுவான திரைக்கதைகளை மறுத்து உச்ச பட்ச ஹீரோயிசம், வன்முறை என இளம் இயக்குநர்கள் படம் எடுப்பது வருங்கால தமிழ் சினிமாவின் தரத்தை முற்றிலும் குலைத்துவிடும் என்கிற கருத்து முன் வைக்கப்படுகிறது.
சமீப காலமாக வரும் தமிழ் படங்கள் அதிகம் வன்முறைக்காட்சிகளை கொண்டுள்ளதும், பழி வாங்கும் உணர்ச்சியை மட்டுமே மையமாக கொண்டு வருகிறது.
சமூகத்தில் திரைப்படம் எனும் ஆயுதம் மிக சக்தி வாய்ந்தது. அதிலும் தமிழகத்தில் அரசியலும், சினிமாவும் கைகோர்த்து சினிமாத்துறைச் சார்ந்த 4 பேர் முதல்வர்களாக ஆட்சிக்கும் வந்துள்ளனர்.
நேரடியாக சினிமா பிரச்சாரத்தை வைத்து ஆட்சியையே பிடித்தவர் எம்ஜிஆர் எனலாம். அவரது வழியில் ஜெயலலிதா அதிக ஆண்டுகள் கட்சியின் பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்துள்ளார்.
திரையுலகில் உச்சத்தில் இருந்த எம்ஜிஆரோ, சிவாஜியோ, ரஜினி, கமலோ மற்ற உச்ச நட்சத்திரங்களோ மிகவும் வன்முறையாகவும், ரத்தக்களறியாக, பழிக்கு பழி வாங்கும் எண்ணத்தை தூண்டும் விதத்தில் படங்கள் எடுத்ததில்லை ( விதிவிலக்காக சில படங்கள் இருக்கலாம்).
அதேபோல் குடும்பப்பாங்கான அல்லது காதல்கதை, சம்பவத்தை படமாக்குதல், சமூக அக்கறையுள்ள படங்கள் என எதை எடுத்தாலும் வலுவான திரைக்கதை அமைக்கப்பட்டது. பல தமிழ் படங்கள் வலுவான திரைக்கதைக்காக இன்றும் போற்றப்படுகின்றன.
திரைப்படங்களும் ஒருவகையான சமுதாய பங்களிப்பை எப்போதும் செய்து வருகிறது. பல மாற்றங்களை திரைத்துரை மூலம் நிகழ்ந்துள்ளது. சில அரசியல் மாற்றங்களுக்கு கூட திரைப்படங்கள் உதவியுள்ளது.
ஆனால் இத்தனை நடந்தும் தமிழ் சினிமாக்கள் வலுவான திரைக்கதை, சமூக அக்கறை, எதிரியை பழிவாங்கணும் என்றால் கூட அது சட்டப்படி நடக்கவேண்டும் என்பதுபோன்ற சமுதாய அக்கறையுடன் படம் எடுத்தனர்.
வன்முறைக்காட்சிகள் அதிகம் அமைந்த தெலுங்கு படங்கள் கிண்டலடிக்கப்பட்டன. ஹீரோக்கள் நம்ப முடியாத அளவுக்கு சாகசம் செய்த தெலுங்கு படங்களை கிண்டலடித்தவர்கள் உண்டு.
கோணல் மாணலாக நடனமாடிய தெலுங்கின் பிரபல நடிகர்களே தமிழ் ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்டார்கள். ஆனால் அத்தனையும் தற்போது தமிழ் படங்களில் வந்துவிட்டது. அதை பிரம்மாண்டம் என ரசிக்கும் சூழலும் வந்துவிட்டது.
சிறுமை கண்டு பொங்கும் ஹீரோக்கள் சட்டத்தின் துணையுடன் வில்லனை வீழ்த்தும் காலம் போய்விட்டது. வலுவில்லாத திரைக்கதைகள், ஹீரோ ஒர்ஷிப், நம்ப முடியாத காட்சிகள் என தமிழ் படங்கள் புதிய பாதைக்கு செல்லத்தொடங்கியுள்ளன.
இதுபோன்ற படங்களை பார்க்கும் மக்கள் மனதில் வன்முறைதான் தீர்வு என்ற எண்ணமும், மக்கள் போராட்டம் மூலம் எதையும் தீர்க்க முடியாது , என்கிற எண்ணமும் மேலோங்குகிறது
இது ஆபத்தான போக்கு இந்த எண்ணம் வலுப்பெற்றால் சட்டத்தின் மீதான நம்பிக்கை போய்விடும். அதே போல் இதுபோன்ற படங்களைப்பார்த்து வளரும் இளம் தலைமுறையினர், நம்ப முடியாத கனவுலகத்தில் மிதப்பதும், சாகசம் என்கிற பெயரில் எதையாவது செய்து சட்டத்தின் பிடியில் சிக்குவதும் நடக்கிறது.
மது, போதைக்கலாச்சாரம், யாரைவேண்டுமானாலும் தாக்கலாம் போன்ற எண்ணமும் ரத்தம் , கொடூர கொலைகள், ஹீரோ 20 கொலைகள் செய்துவிட்டு மறுநாள் டீக்கடையில் உட்கார்ந்து பேப்பர் படிப்பது போன்ற யதார்த்ததுக்கு புறம்பான காட்சிகளை அமைப்பது, இளைய தலைமுறையினரை அப்படி செய்ய தூண்டும் செயல்.
ஒரு காலத்தில் வலுவான திரைக்கதைகள், வலுவான கதாபாத்திரங்கள், குடும்ப ஒழுங்குக்குள் அமைக்கப்பட்ட கதைகள் என வலம் வந்த சினிமாவுக்குள் தற்போது கற்பனை பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சமீப காலத்தில் அப்படி வந்த படங்களை தேடும் நிலை உள்ளது.
உச்ச நட்சத்திரங்கள் தங்களிஷ்டப்படி படம் எடுக்கவேண்டும் என நிர்பந்திப்பதால் பில்டிங் விட்டு பில்டிங் தாவும்பைக்குகள், ஃபைட்டர் ஜெட்டை எடுத்து பாகிஸ்தாக்குள் நுழையும் ஹீரோ என கண்டபடி எடுக்க ரசிகர்களாலேயே தாங்க முடியவில்லை
நல்ல கதையம்சமுள்ள, சமூக கதைகள் அவ்வப்போது வருகின்றன. ஆனால் அவற்றிற்கு தியேட்டர் கிடைப்பதில்லை. ஓடிடி தளம் கிடைக்கவும் போராடும் நிலையில் உள்ளனர்.
நல்ல படங்களை ஆதரிப்பதும், வன்முறை காட்சிகள் (இதற்கெல்லாம் சென்ஸார் போர்டு இருப்பது மாதிரியே தெரியவில்லை) நிறைந்த படங்களை புறக்கணிப்பது வருங்கால சந்ததிகளுக்கு மட்டுமல்ல, வருங்கால தமிழ் சினிமாவுக்கும் நல்லது என்கின்றனர் விமர்சகர்கள்.
நவீன சாதனங்கள் திரைத்துறையில் வந்துவிட்டது. ஆனாலும் இன்றைய இளம் இயக்குநர்களில் பெரும்பாலானோர் . ஒரு பெரிய ஹீரோ கால்ஷீட் கிடைத்தால் போதும் அவருக்கு ஏற்றார்போல் கதை பண்ணலாம் என்கிற எண்ணத்தில் மட்டுமே இயங்குகின்றனர்
பிரம்மாண்டம் என்கிற பெயரில் எடுக்கப்படும் படங்களை நோக்கி மிகப்பெரிய நடிகர்களும் நகர்கின்றனர். இது தொடர்ந்தால் தமிழ் திரையுலகில் பேர் சொல்லும் படங்கள் இனி இருக்காது