ஜி வி பிரகாஷ் குமார் பயோடேட்டா

  ஜி.வி.பிரகாஷ் குமார் இந்திய திரையுலகில் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டு பணியாற்றி வருகிறார். திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், பாடலாசிரியர், பாடகராக பணியாற்றி பிரபலமாகியுள்ளார். பின்னர் ஒரு சில திரைப்படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்து அறிமுகமான இவர் 2015-ம் ஆண்டு டார்லிங் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 

  பிறப்பு

  ஜி.வி.பிரகாஷ் குமார் தமிழ் திரையுலக பின்னணி பாடகரான ஜி.வெங்கடேசன் - ஏ.ஆர்.ரெய்கானா-வின் மகன் ஆவார். இவரின் தாய் ரெய்கானா அவர்கள்  ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஆவார். இசை குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டு இசை பயின்று வந்துள்ளார்.


  அறிமுகம் - இசையமைப்பாளர்

  இவர் இவரின் தாய் மாமனான ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவந்த ஜென்டில் மேன் திரைப்படத்தில் ஒரு பாடலில் பின்னணி பாடகராக பணியாற்றி தன் முதல் திரைப்பாடல் அனுபவத்தை பெற்றுள்ளார். பின்னர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்-யின் அந்நியன், உன்னாலே உன்னாலே திரைப்படங்களில் இசையமைப்பாளரின் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

  இவர் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வசந்த பாலன் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளிவந்த வெயில் திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து பொல்லாதவன், காளை, குசேலன், ஆயிரத்தில் ஒருவன் என பல வெற்றி திரைப்படங்களின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் இசையில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன், பொல்லாதவன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரையுலகில் அனைவராலும் பாராட்டப்பட்டு பிரபலமானவை ஆகும்.


  நடிகர்

  பல பாடல்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்து நடிகராக திரைத்துறையில் அறிமுகமானார். 2013-ம் ஆண்டு விஜய் நடித்த தலைவா திரைப்படத்தின் ஒரு பாடலில் விஜய்யுடன் நடனமாடி திரையுலகில் அணைத்து தரப்பிலும் அறியப்பட்டார்.

  இத்திரைப்படத்தின் பிரபலம் கொண்டே இவர் 2015-ம் ஆண்டு டார்லிங் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து திரையுலகில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார்.

  திருமணம்

  இவர் 2013-ம் ஆண்டு சைந்தவி என்ற பாடகியை திருமணம் செய்துள்ளார்.