ஓவியா ஹெலன், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற ஒரு முன்னணி நடிகை ஆவார். "ஹெலன் நெல்சன்" என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், திரையுலகில் "ஓவியா" என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இவர் திரைப்படங்களில் நாயகியாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், 2017ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "பிக் பாஸ் சீசன் 1" நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று தமிழ் ரசிகர்களை கவர்ந்து மிக பெரிய அளவில் புகழ் பெற்றுள்ளார்.
திரையுலக அனுபவம்
தென்னிந்திய திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ஓவியா, 2007-ஆம் ஆண்டு "கங்காரு" என்ற மலையாள படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர் அபூர்வா, புதிய முகாம் என்ற மலையாள திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவர், தமிழ் சினிமாவில் 2009-ஆம் ஆண்டு "நாளை நமதே" என்ற திரைப்படத்தில் யாரும் குறிப்பிடப்படாத கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். ஆனால் ஓவியா 2010-ஆம் ஆண்டு "களவாணி" என்ற ஒரு நகைச்சுவை தமிழ் திரைப்படத்தில் நாயகியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தினை பெற்றார். தமிழ் திரையுலகில் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படமே இவருக்கு முதல் படமாக கருதப்படுகிறது.
2010-ஆம் ஆண்டு நாயகியாக இவரது முன்னணி நடிப்பில் வெளியான களவாணி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தினை தொடர்ந்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக என்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவர், தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைக்கான விருதினை களவாணி, முத்துக்கு முத்தாக திரைப்படத்திற்காக பெற்றுள்ளார்.
தனது திரைப்பயணத்தின் தொடக்கத்திலையே ஒரு நல்ல வரவேற்பினை பெற்று பிரபலமான நடிகை ஓவியா, அடுத்தடுத்து பல படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானார். மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழி படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து இந்திய அளவில் அனைவராலும் அறியப்படும் ஒரு புகழ் பெற்ற நடிகையாக பிரபலமாகியுள்ளார்.
பிக் பாஸ்
2017-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இந்த சீசனில் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நட்சத்திரமாக இவர் புகழ் பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு தனி பட்டாளமே (ஓவியா ஆர்மி) உருவாகி இவருக்கு ஆதரவினை தெரிவித்துள்ளது.